அதிகாலையில் சோகம்.. டெல்லி விவேக் விஹார் தீ விபத்தில் 9 பேர் பலி

Published On:

| By Pandeeswari Gurusamy

fire

டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள நான்கு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (மே 3) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குறைந்தது 9 பேர் வரை உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.

கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள நான்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டாவது தளத்தில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் தீப்பிடித்தது. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். அடுத்த சில நிமிடங்களில் தீ மளமளவென மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களுக்கும் பரவியது.

ADVERTISEMENT

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு 14 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் காலை 6 மணி அளவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த 12-க்கும் மேற்பட்டோர் தீயணைப்புத் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் உடனடியாக குரு தேக் பகதூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

தீ விபத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் குளிர்சாதனப் பெட்டி வெடித்ததே தீ விபத்திற்கு ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது அந்த கட்டிடத்தில் எஞ்சியவர்கள் எவரேனும் உள்ளனரா என மீட்புக் குழுவினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். விவேக் விஹார் போன்ற ஒரு முக்கிய குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share