மேற்கு வங்காளத்தில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் துர்கா பூஜை பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு வரும் செப்டம்பர் 30-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை அரசு விடுமுறை நாட்களாக இருக்கும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் மிகப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வரும் துர்கா பூஜையை யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய பட்டியலில் இணைத்து பெருமைப்படுத்தி உள்ளது.
இதனை முன்னிட்டு வடக்கு கொல்கத்தாவின் ஜோராசாங்கோ பகுதியில் இருந்து கொல்கத்தாவின் சிவப்பு சாலை வரை, இன்று முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மெகா பேரணி நடைபெற்றது.
யுனேஸ்கோ பிரதிநிதிகளை கவுரவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த பேரணியில் 1,000க்கும் மேற்பட்ட துர்கா பூஜை குழுக்களின் பிரதிநிதிகள் பாரம்பரிய பெங்காலி ஆடைகளை அணிந்து பங்கேற்றனர்.

இதற்காக 17 அம்சங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த வண்ணமய பேரணியில் பங்கேற்றவர்கள் ‘தாக்’, ’புல்லாங்குழல்’ போன்ற இசை கருவிகளை இசைத்து, பூஜை பாடல்கள் பாடி, நடனமாடியதை காண முடிந்தது.
மேலும் இதில் நூற்றுகணக்கான பள்ளி மாணவ மாணவியரும் யுனெஸ்கோ அமைப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேரணியில் கலந்து கொண்டனர்.
அதன் முடிவில் யுனெஸ்கோ அதிகாரிகளுக்கு துர்கா தேவியின் சிலையை மம்தா பரிசளித்தார்.

பேரணி தொடங்கும்போது பேசிய முதல்வர் மம்தா, ”துர்கா பூஜைக்கு பாரம்பரிய பட்டியலில் இணைத்த யுனெஸ்கோவிற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
இன்றிலிருந்து ஒரு மாதத்திற்கு முன்பே துர்கா பூஜை விழாக்கள் தொடங்கிவிட்டன.
பேரணியில் பங்கேற்ற அனைத்து தரப்பு மக்களையும் நான் வரவேற்கிறேன், மேலும் உலகம் முழுவதிலுமிருந்து இந்த பேரணியைப் பார்க்கும் அனைவருக்கும் நன்றி, ”என்று அவர் பேரணியைத் தொடங்கி வைக்கும் போது கூறினார்.

இதற்கிடையே தனது டிவிட்டர் பக்கத்தில், “துர்கா பூஜை என்பது பார்ப்பனியத் தடைகளைத் தாண்டி நம்மை ஒன்றிணைக்கும் ஒரு உணர்வு. இது கலையின் மகத்துவத்தை ஆன்மீகத்துடன் இணைக்கிறது.
துர்கா பூஜையை ஒரு கலாச்சார பாரம்பரியமாக அங்கீகரித்ததற்காகவும், சம்பந்தப்பட்ட அனைவரின் அன்பின் உழைப்பை கௌரவித்ததற்காகவும் யுனெஸ்கோவிற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார் மம்தா பானர்ஜி. இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் கங்குலியும் கலந்துகொண்டார்
மேலும் யுனெஸ்கோவிற்கு நன்றி செலுத்தும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் துர்கா படத்தையும் முகப்பு படமாக மாற்றியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை அரசியலை வழமையாக பாஜக கையிலெடுக்கும். ஆனால் அதற்கு முன் மம்தா யுனெஸ்கோவில் காய் நகர்த்தி பாரம்பரிய விழாவாக துர்கா பூஜையை அறிவிக்க வைத்து,
அந்த பெருமையை பாஜக தட்டிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக மெகா பேரணியையும் நடத்தி துர்கா அரசியலில் முந்திக் கொண்டார் மம்தா என்கிறார்கள் கல்கத்தா பத்திரிகையாளர்கள்.
கிறிஸ்டோபர் ஜெமா
“ஆர்எஸ்எஸ்-சில் உள்ள அனைவரும் மோசமானவர்கள் அல்ல” – மம்தா பானர்ஜி
