கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ஜோத்பூரில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் சல்மான்கான், ஜோத்பூர் காட்டுக்குள் சென்று இரு பிளாக் பக் மான்களை வேட்டையாடியதாக வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து சல்மான் விடுதலை செய்யப்பட்டார். எனினும், பிளாக்பக் மான்களை குல தெய்வம் போல கருதும் பிஷ்னோய் இன மக்கள் சல்மானின் தவறை மன்னிக்க தயாராக இல்லை.
இதன் விளைவாக சல்மான்கானை கொல்ல பிஷ்னோய் இனத்தை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் பல முறை முயன்றுள்ளார். சமீபத்தில் சல்மானின் நெருங்கிய நண்பரான பாபா சித்திக் இந்த கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, சல்மான் கானுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சல்மான்கானின் முன்னாள் காதலி சோமி அலி, பிஷ்னோய்க்கு உருக்கமாக ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் படத்தை பதிவிட்டு அவர் கூறியிருப்பதாவது: “ஹலோ லாரன்ஸ் பிரதர்,நீங்கள் சிறையில் இருந்து கூட ஜூம் மீட்டிங் நடத்துவீர்கள் என கேள்விப்பட்டேன். நானும் உங்களுடன் அப்படி பேச விரும்புகிறேன். ராஜஸ்தான் எங்களுக்கு இந்த உலகத்திலேயே எல்லாவற்றையும் விட முக்கியமான இடமாகும். நாங்கள் அங்கே வர விரும்புகிறோம். உங்கள் கோயிலில் வழிபாடு நடத்த விரும்புகிறோம். ஆனால், அதற்கு முன்னதாக உங்களுடன் போனில் பேச விரும்புகிறேன். அல்லது உங்கள் எண் கொடுங்கள் . நான் உங்களுடன் பேசுகிறேன்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக ஹிந்துஸ்தான் டைம்சுக்கு பேட்டியளித்திருந்த சோமி அலி, மான் வேட்டை சம்பவம் நடந்த போது சல்மான்கான் மிகவும் இளவயதுக் காரராக இருந்தார். இதனால், அந்த தவறு நடந்திருக்கலாம். தவறுகளில் இருந்து மக்கள் பாடம் படிப்பார்கள் என்றும் கூறியிருந்தார் .
கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 99 ஆம் ஆண்டு வரை சோமி அலி சல்மானுடன் டேட்டிங் செய்தார்.தற்போது, அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். சல்மான் போலவே சோமி அலியும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ரயில் டிக்கெட் புக் பண்றீங்களா… உங்களுக்குத்தான் இந்த அப்டேட்!