தேர்தல்களில் பட்டியல் சாதிகளுக்கு (தலித்துகள்) இரட்டை வாக்குரிமை கோரிய அம்பேத்கர், விடுதலைக்குப்பின்னர் நடந்த தேர்தல்களின் தனித்தொகுதி முறையை ஏற்றார். இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தொகுதிகள் மக்களவை, சட்டமன்றம் இரண்டுக்கும் இத்தனை என்று ஒதுக்கப்பட்டது. இதன் எண்ணிக்கை காலப்போக்கில் மாறியும் வந்துள்ளது. அதேபோல தனித்தொகுதியும் மாறிவந்துள்ளது.
இதனால்தான் தலித்துகள் தனித்தொகுதிகளுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டனர். அதுவும் வேறு வழியில்லாமல் பொதுத்தொகுதிகளில் சாதிபார்த்து நிறுத்தும் கட்சிகள் கவனமாக தலித்துகளை தவிர்த்துவந்தனர். ஆனால், அந்தந்த தனித்தொகுதிகளில் அந்தந்தக் கட்சிகள் தங்கள் கட்சியிலிருந்து தலித்துகளைத் தேடி நிறுத்தினர். அவர்கள் தனித்தொகுதிகளில் வெற்றிபெற்று வந்தாலும் அந்தந்த கட்சியின் தலைமைக்கு விசுவாசமாக இருந்தார்களேயொழிய தலித் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்பது அதிருப்தியாக இருந்தது.
கன்சிராமின் வருகை, தலித் அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. தலித் மக்களுக்கான தலித் அரசியல் அமைப்புகள் தொடங்கப்பட்டன. குறிப்பாக, அம்பேத்கர் நூற்றாண்டுக்குப்பின்னர் தலித் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது. மைய நீரோட்ட அரசியல் கட்சிகளின்பின் திரட்டப்பட்ட தலித் வாக்காளர்களைத் தங்கள் பக்கம் திரட்ட தலித் தலைவர்கள் முயன்றனர்.
1990ல் தொடங்கப்பட்ட தலித் அமைப்புகள் விரைவில் பலம் பெறத்தொடங்கின. தமிழகத்திலும் ஜான் பாண்டியன், திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் தலித் அமைப்புகள் உருவாயின. தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்ட தலித் கட்சிகள் இருந்தாலும் 2 கட்சிகள் மட்டுமே பிரதான கட்சிகளுடன் பேரம்பேசி, தொகுதிகளை கேட்டுப்பெறும் வலுவில் உள்ள கட்சிகள். அவை: தென் மாவட்டங்களில் சில பாக்கெட்டுகளை வைத்திருக்கும் புதிய தமிழகம் மற்றும் வட மாவட்டங்களில் தலித் கிராமங்களை வளைத்துப் போட்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள். இதன் தலைவர், தலித்துகள் தளபதியாகப் பார்க்கும் ‘திருமா’ என செல்லமாக அழைக்கப்படும் தொல்.திருமாவளவன்.
நாடு முழுவதும் உள்ள ஏனைய தலித் தலைவர்களைப் போன்று திருமாவளவனும் அடித்தட்டில் இருந்து வந்தவர். அரியலூர் மாவட்டம், அங்கனூரைச் சேர்ந்த திருமாவளவன் திட்டக்குடியில் பள்ளிப் படிப்பை முடித்தார். தினமும் அங்கனூரில் இருந்து திட்டக்குடிக்கு 40 கிலோ மீட்டர் தூரம் படிப்பதற்காக பயணிக்க வேண்டியிருந்தது. சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. படித்துவிட்டு ,சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் முடித்தார். அங்கனூரின் முதல் பட்டதாரி திருமாவளவன்.
1988ல் அரசு வேலை கிடைத்தது. மதுரை தடயவியல் துறையில் அலுவலர் திருமாவளவனுக்கு அரசியல் அடித்தளம் கிடைத்தது மதுரையில்தான். மதுரையை மையமாகக் கொண்டு மலைச்சாமி என்ற வழக்கறிஞர் தலித் சிறுத்தைகள் என்ற இயக்கத்தை நடத்திவந்தார். அவருடன் திருமா-வுக்கு அறிமுகம் ஏற்பட்டது. அதன்பின், திருமா-வின் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றம் உருவானது. 89ல் மலைச்சாமி மரணமடைய, தலித் சிறுத்தைகள் இயக்கம் திருமா-வின் கரங்களில் தானாகவே வந்து விழுந்தது. இயக்கத்துக்கு கொடியை வடிவமைத்தார். மதுரையில் உள்ள தலித் கிராமங்களுக்கெல்லாம் சென்றார். தலித் மக்களின் மனதை வென்றார். அவர்களின் ஹீரோவாக உருவெடுத்தார். வட மாவட்டங்களிலும் பரவினார். விளைவு? அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி வேலையில் இருந்து அவரை அரசாங்கம் சஸ்பெண்ட் செய்தது. ஆயினும் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து அவர் ஒதுங்கியிருக்கவில்லை.
1990ம் ஆண்டில் தலித் சிறுத்தைகள் என்ற பெயரை விடுதலைச் சிறுத்தைகள் என மாற்றி, நான்கு திசைகளிலும் சுற்றிவந்து இயக்கத்தை வளர்த்தார். என்றாலும்,1998 வரை தேர்தல் களத்தில் இறங்கவில்லை.1999ல்தான் திருமா தேர்தலில் குதித்தார். மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிசுடன் கூட்டணி அமைத்தார். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். வெற்றி கிட்டவில்லை என்றாலும் 2 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் வாங்கி சிறுத்தைகளின் வாக்கு வங்கியை நாட்டுக்கு வெளிப்படுத்தினார்.
திருமாவளவன்1999, 2004, 2009, 2014 என நான்கு முறை சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, 2009ல் மட்டும் வெற்றிபெற்றார். சட்டசபைத் தேர்தலில் ஒரே ஒருமுறை நின்றிருக்கிறார். அது, 2001ம் ஆண்டு. அந்தத் தேர்தலில் மங்களூர் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்று வெற்றியடைந்தார். 2004ம் ஆண்டு கொள்கைரீதியாக திமுக-வுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், திமுக கூட்டணியில் இருந்து சிறுத்தைகள் விலகியது. 2001ம் ஆண்டு தேர்தலில் திமுக-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட திருமாவளவன், திமுக-வின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றிருந்தார். உதயசூரியனில் ஜெயித்த எம்எல்ஏ பதவியைத் தொடரவிரும்பாத திருமா, 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
திருமாவளவன், சிதம்பரம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 4 தேர்தல்களிலும் அந்தத் தொகுதிக்கு உட்பட்ட காட்டுமன்னார் கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் மற்ற வேட்பாளர்களைக் காட்டிலும் அவரே கூடுதல் ஓட்டுகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த, மக்களவைத் தேர்தலில் சிதம்பரத்தில் திருமா தோற்றபோதிலும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் அவர் 8 ஆயிரம் வாக்குகள் அதிகம் வாங்கியிருந்தார்.
ஆக, ஒரு தடவை எம்எல்ஏ-வாகவும் ஒரு தடவை எம்பி-யாகவும் இருந்துள்ளார். மக்கள் நலக் கூட்டணியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைக்கு வைகோ போட்டியிட, திருமா 15 ஆண்டுகளுக்குப் பின்னர் பேரவைத் தேர்தலில் குதிக்கிறார்.
திருமாவளவனின் வளர்ச்சி என்பது, கடந்த 25 ஆண்டுகால வளர்ச்சி. இன்றைக்கு தலித்துகள் ஒடுக்கப்படும்போது குரல்கொடுக்கும் வலுவான அமைப்பாக விடுதலைச் சிறுத்தைகள் வளர்ந்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவை மட்டுமல்லாமல் தலித்துகளுக்கு ஆதரவான எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், செயற்பாட்டாளர்களின் ஆதரவையும் பெற்றுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சிறுபான்மையினர் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. அதைவிட, தற்போது அதிமுக, திமுக என இரு பெரிய கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைத்ததில் திருமாவளவனின் பங்கு மறுக்கமுடியாதது ஆகும்.
தேர்தலுக்கு ஒரு வருடம்முன்பே இடதுசாரி கட்சிகள் மட்டும் சிறுபான்மை அமைப்புகளுடன் இணைந்து மக்கள்நலக் கூட்டியக்கம் உருவாக்கினார். இது, தமிழகம் முழுவதும் மக்கள் பிரச்னைகளை எடுத்துச் சென்றது. இதனால், மக்கள் நலக் கூட்டணி உருவானது. மதிமுக தலைவர் வைகோ-வை ம.ந.கூட்டணிக்கு அழைத்துவந்தார். இதுவே விஜயகாந்த், வாசன் ஆகியோர் ம.ந.கூட்டணியுடன் தேர்தல் உடன்பாடு ஏற்பட வழிவகுத்தது.
ஆக, இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை திருமாவளவன் ஒரு தவிர்க்கமுடியாத சக்தியாக வளர்ந்திருப்பது மறுக்கமுடியாத உண்மை.
காட்டுமன்னார்கோவிலில் 1971 முதல் நடைபெற்ற 10 தேர்தல்களில் திமுக, அதிகபட்சமாக 5 முறை வாகை சூடியுள்ளது. அதிமுக 2 முறை வென்றுள்ளது. காங்கிரஸ், சிறுத்தைகள் ஆகியோர் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளனர். ஒருமுறை சுயேச்சை வெற்றி பெற்றுள்ளார்
கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் 83 ஆயிரத்து 665 ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றார். 2வது இடம்பிடித்த விசிக வேட்பாளர் ரவிக்குமார் 51 ஆயிரத்து 940 ஓட்டுகள் வாங்கினார்.
நடைபெறப்போகும் தேர்தலில் அதிமுக மீண்டும் சிட்டிங் எம்எல்ஏ முருகுமாறனுக்கு டிக்கெட் கொடுத்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கே.ஜே.மணிரத்தினம் நிறுத்தப்பட்டுள்ளார். பலம்பொருந்திய வேட்பாளர் திருமாவளவனுக்கு இவர் பெரும் சவாலாக இருப்பார் என கருதப்படுகிறது. மக்களவை உறுப்பினராக இருந்தபோது, தொகுதி மக்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் திருமாவளவன் தவறாது பங்கேற்றதை காட்டுமன்னார்கோவில் மக்கள் மறக்கவில்லை என்பது நிஜம்.
