தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 28) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வரும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.தமிழகத்தில் புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாகக் களம் கண்டுள்ளார். விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியினர் களம் கண்டனர்.
இந்நிலையில், வாக்குப்பதிவுக்குப் பிறகு அடுத்த கட்ட ஆலோசனையில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளார். இன்று திருச்செந்தூர் செல்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று நள்ளிரவில் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து சாலை மார்க்கமாகத் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்ற விஜய், இன்று காலை விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்றார். கோயில் நிர்வாகம் சார்பாக விஜய்க்கு வேல், மற்றும் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ச்சியாகக் கோயிலில் முருகர், வள்ளி, தெய்வானை, சண்முகர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், சத்ரு சம்ஹார மூர்த்தி உள்ளிட்ட தெய்வங்களை வணங்கினார்.
விஜய் வருகையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோயில் வளாகத்தில் திரண்டனர். அவரைக் காண மக்கள் முண்டியடித்ததால் அப்பகுதியில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் திருச்செந்தூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சாமி தரிசனத்தை முடித்த விஜய், மீண்டும் தூத்துக்குடி விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் ரோடுஷோ நடத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜய் திருச்சி அந்தோனியார் ஆலயத்தில் முழங்காலிட்டவாரே சென்று, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார்.
மேலும் கொட்டப்பட்டு பச்சநாச்சி அம்மன் கோயிலுக்கு சென்ற விஜய் சாமி தரிசனம் செய்தார் அதுபோன்று அருகில் இருந்த மசூதிக்கும் சென்று வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
