வெற்றி தோல்வி அரசியலில் சகஜம்.. தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் – ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன்

Published On:

| By Pandeeswari Gurusamy

kirubakaran

இளம் தலைமுறையினர் தேர்தல் வெற்றி..தோல்வியை சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டும். யாரும் எந்தவிதமான தவறான முடிவுகளையும் எடுக்கக் கூடாது என எல்லா அரசியல் தலைவர்களும் அறிக்கை வெளியிட வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வரும் மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்தத் தேர்தலில், புதிதாக உருவான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டதுடன், அவரது கட்சியினர் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினர். தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் விஜய், “குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் விஜய் மாமாவுக்கு ஓட்டு போட வேண்டும்” என வலியுறுத்த வேண்டும் என கூறினார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, பலர் தங்கள் குழந்தைகளை விஜய்க்கு வாக்களிக்க வற்புறுத்தும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இந்நிலையில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம், “தவெக தலைவர் விஜய் குழந்தைகளை பகடைக் காய்களாகப் பயன்படுத்துவதா?” எனக் கண்டனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே, ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் இன்று (ஏப்ரல் 28) சென்னை பாரிமுனையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேர்தல் என்றால் வெற்றி தோல்வி சகஜம். 1952ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்தத் தேர்தல் புதுமையான ஒன்றாக உள்ளது. இந்த முறை நான்கு பெரிய கட்சிகள் முழு வலிமையுடன் தேர்தலில் நிற்கின்றன. நான்கு கட்சிகளும் ஒரே நேரத்தில் ஜெயிக்க முடியாது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் கட்சிதான் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பது நியாயமானது. ஆனால் சிலர் மாயையில் இருப்பது போல் சமூக வலைதளங்களில் தெரிகிறது. குறிப்பாக, குழந்தைகள் கூட “என் தலைவர் வெற்றி பெற வேண்டும், என் கட்சிதான் வெற்றி பெற வேண்டும்” என்று பேசுவதைப் பார்க்க முடிகிறது. ஒருவேளை வெற்றி பெற்றால் கொண்டாடிவிடலாம். ஆனால் வெற்றி பெறவில்லை என்றால் அதைத் தாங்கும் மனநிலை வேண்டும். அந்த மனநிலை இப்போதைய இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

சமூக வலைதளங்களில் வரும் சில பதிவுகள் மிகுந்த மன வருத்தத்தை அளிக்கின்றன. ஒரு பெண்மணி, “இவர் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் என் குழந்தைகளைக் கொன்றுவிட்டு நானும் இறந்துவிடுவேன்” என்று பதிவிட்டுள்ளார். சிலர் “தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வேன்” என்றெல்லாம் எழுதுகின்றனர். இவை மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்திகளாக உள்ளன.

ADVERTISEMENT

ஒரு கட்சியின் மீது அபிமானம் வைத்திருப்பதும், மரியாதை செலுத்துவதும், அக்கட்சிக்காக உழைப்பதும் சாதாரணமான விஷயம்தான். ஆனால் “என் கட்சிதான் ஜெயிக்க வேண்டும்” என்றால், அந்த ஒரு கட்சி மட்டுமே தேர்தலில் நிற்க வேண்டும், மற்ற கட்சிகள் எதுவும் நிற்கக்கூடாது என்ற எண்ணம் தவறானது. இது ஜனநாயக நாடு. மக்கள் பெருவாரியாக யாருக்கு வாக்கு அளிக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள். தாங்கள் நினைத்த கட்சி வெற்றி பெற்றால் கொண்டாட வேண்டும். இல்லையென்றால் அடுத்த தேர்தலுக்கு தயாராக வேண்டும்.

இந்திரா காந்தி, ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட பல பெரிய தலைவர்கள் எல்லாம் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர். பின்னர் அவர்கள் மீண்டும் எழுந்து வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.

இளம் தலைமுறையினர் தேர்தல் வெற்றி-தோல்வியை சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டும். யாரும் எந்தவிதமான தவறான முடிவுகளையும் எடுக்கக் கூடாது என எல்லா அரசியல் தலைவர்களும் அறிக்கை வெளியிட வேண்டும். எப்படி ஓட்டு கேட்டார்களோ, அதேபோல் தற்போது அரசியல் கட்சித் தலைவர்களின் அறிக்கை மிக முக்கியமானது.

அவர்கள் சொன்னால்தான் இளம் தலைமுறையினர் கேட்பார்கள். இதை எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் செய்வது மிக அவசியமான சமூகக் கடமை. அதேபோல், சினிமா நடிகர்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர்கள், இளம் தலைமுறையினருக்கும் குழந்தைகளுக்கும் ஜனநாயகத்தில் வெற்றி-தோல்வி சகஜம் என்பதை வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே உணர்த்த வேண்டும். அப்படிச் செய்தால்தான் இளம் தலைமுறையினர் தேர்தல் முடிவுகளை எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள்.இல்லையென்றால் மிகவும் அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் நடக்கும் என்று சமூக வலைதளங்களில் விபரம் அறிந்த சிலர் தெரிவிக்கின்றனர்.

குடும்ப உறுப்பினர்கள் குழந்தைகள் இளம் தலைமுறையினர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவ உதவிகளையும் எடுத்துச்கொள்ளலாம்.

இதை எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ சொல்லவில்லை. எல்லா கட்சிகளிலும் தீவிரமான கொள்கைப் பற்றாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ‘நமது கட்சிதான் வெற்றி பெறும்’ என்ற கற்பனையில் இருக்கிறார்கள்.

ஜனநாயகத்தில் எதுவும் நடக்கலாம். பெரும் தலைவர்கள் கூட தோற்றுப்போயிருக்கிறார்கள். வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் அதை சகஜமாக எடுத்துக்கொள்ளும் மனநிலையை நாம் உருவாக்க வேண்டும்” என்றார்.

மேலும் பேசிய அவர், “இளம் தலைமுறையினரே உங்களை நம்பி குடும்பம் இருக்கிறது. நீங்கள் வளர்ந்து பெற்ற தாய் தந்தையரை பாதுகாக்கும் பொறுப்பு உங்களிடம் உள்ளது. நீங்கள் தவறான முடிவுகளை எந்த வகையிலும் எடுக்க வேண்டாம் வெற்றி தோல்வி அரசியலில் சகஜம். உதாரணத்திற்கு நான் ஒரு நடிகருக்கோ நடிகைக்கோ ரசிகன் என்றால் நான் போய் படம் பார்க்கலாம். அந்த படம் வெற்றி பெற்று தான் ஆக வேண்டும் என்று நான் சொல்ல முடியாது. பெருவாரியான மக்கள் பார்த்தால் அந்த படம் வெற்றி பெறும். அதே போல் தான் பெருவாரியான மக்கள் ஓட்டளித்தால் தான் எந்த கட்சியும் ஆட்சிக்கு வர முடியும்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share