காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தில் வடகலை, தென்கலை பிராமண அர்ச்சகர்களிடையே மீண்டும் மோதல் வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
வைணவத் திருத்தலங்களில் பிரபந்தம் பாடல்களை பிராமணர்களின் தென்கலை, வடகலைப் பிரிவினரில் யார் முதலில் பாடுவது என்பது தொடர்பான பிரச்சனை பல நூறாண்டுகளாக இருந்து வருகிறது. இந்த மோதல்களால் காவல்துறை குவிக்கப்படுவது, நீதிமன்றப் படிகளேறுவது என்பதும் தொடர்ந்தும் நடைபெறுகிறது.
பொதுவாக வைணவக் கோவில்களி, நாலாயிரத் திவ்ய பிரபந்தம் என்பது காலை, மாலை நேரங்களில் பாடப்படும். தென்கலை அய்யங்கார்கள், ஶ்ரீ சைலேஷ தயாபாத்திரம் என மணவாள மாமுனிகளைப் போற்றிவிட்டு பிரபந்தம் பாடுவர்; வடகலை அய்யங்கார்கள், ஶ்ரீராமானுஜ தயாபாத்திரம் என போற்றிவிட்டுப் பாடுவது வழக்கம். வைணவ மரபில் காஞ்சிபுரம் வடகலை அய்யங்கார்கள், ஶ்ரீரங்கம் தென்கலை அய்யங்கார்கள் ஆகியோருக்கு என தனித் தனி மரபுகள் உண்டு.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் அடிப்படையில் வடகலை அய்யங்கார்களுக்கு சொந்தமானது; பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளில் இந்த கோவிலில் பிரபந்தம் பாடும் உரிமை தென்கலை அய்யங்கார்களுக்கும் வழங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து சர்ச்சைதான்.
இந்த நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை எந்தப் பிரிவு அய்யங்கார் முதலில் பாடுவது என்பதுதான் சர்ச்சை. இன்றும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின் போது தென்கலை அய்யங்கார்கள், முதலில் பிரபந்தம் பாட முயற்சித்தனர்; இதற்கு வடகலை அய்யங்கார்கள் எதிர்ப்புத் தெரிவிக்க இருதரப்பும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால் காஞ்சிபுரத்தில் பதற்றம் ஏற்பட்டது.
பாகிஸ்தானுடனான யுத்தமே முடிந்து போய்விட்டாலும் வடகலை- தென்கலைப் போர் மட்டும் ஓயாதுதான்!