ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை அழித்த அமெரிக்கா: பதிலடி தாக்குதல்!

Published On:

| By Minnambalam Desk

அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுக்குச் சொந்தமான 5 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்க ராணுவம் அழித்துள்ளது.

அமெரிக்க போர்க்கப்பலை குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

போர்க்கப்பலை குறிவைத்த ஈரான்
கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இரண்டு முறை பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.

எனினும், அமெரிக்க போர்க்கப்பல் அந்த தாக்குதல்களில் இருந்து தப்பியதாகவும், தொடர்ந்து பிராந்திய கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அமெரிக்க வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ADVERTISEMENT

5 எண்ணெய் கப்பல்கள் அழிப்பு

இதற்குப் பதிலடியாக ஓமன் வளைகுடா மற்றும் ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான காக் தீவு அருகே 5 எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

Kaviz, Charminar, Horizon 1, Riesco ஆகிய நான்கு கப்பல்கள் ஓமன் வளைகுடாவிலும், Derya என்ற மற்றொரு கப்பல் காக் தீவு அருகிலும் தாக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு முன்பாக கப்பல்களில் இருந்த பணியாளர்களை வெளியேறுமாறு அமெரிக்கப் படைகள் அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஈரானின் பதிலடி

அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு ஈரான் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இலக்குகளை நோக்கி ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜோர்டான் ராணுவத்தின் தகவல்படி, தங்கள் வான் பாதுகாப்புப் படைகள் 18 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்துள்ளன. மேலும் இரண்டு ஏவுகணைகள் மக்கள் வசிக்காத பகுதிகளில் விழுந்ததாகவும், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா – ஈரான் இடையேயான இந்த தொடர் தாக்குதல்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் போரில் புதிய கட்டத்தை உருவாக்கியுள்ளன. இதன் தாக்கம் மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பை மட்டுமல்லாமல், உலகளாவிய எண்ணெய் விலையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share