MSME நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத அறக்கட்டளை நிதியத்திற்கு மூலதனமாக 9,000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSME) நிதியுதவி அளிப்பதற்கும் குறித்த காலத்தில் வரவேண்டிய தொகைகளைப் பெறுவதற்கும், மாறி வரும் தொழில்நுட்பங்களை விரைந்து செயல்படுத்துவற்கும் ஏதுவாக பல்வேறு முன்முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக MSME தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத அறக்கட்டளை நிதியத்திற்கு 9,000 கோடி ரூபாய் மூலதனமாக வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்நிறுவனங்களுக்கு கூடுதல் கடனுதவியாக 2 லட்சம் கோடி ரூபாய் வரை குறைந்த செலவில் கடன் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடன் உத்தரவாதத் திட்டத்திற்கான உச்ச வரம்புத் தொகை 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் MSME நிறுவனங்களுக்கு பல்வேறு வகைப்பாடுகளின் கீழ் 90 சதவீதம் கடன் வழங்கப்படும்.
பிரதமரின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் முன்பண மானியத் தொகையாக 35 சதவீதம் புதிதாக உருவாக்கப்படும் MSME நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. வேளாண்மை அல்லாத நிறுவனங்களுக்கு திட்டச் செலவாக 50 லட்சம் ரூபாயும் உற்பத்தி மற்றும் சேவை துறையைச் சார்ந்த நிறுவனங்களுக்கு திட்டச் செலவாக 20 லட்சம் ரூபாயும் வழங்கப்படும். இத்தகவலை மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு MSME துறைக்கான இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜே எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும், வர்த்தக செயல்பாடு மற்றும் சந்தைப்படுத்துதல் திட்டம் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மூலம் MSME நிறுவனங்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வர்த்தக செயல்பாடு மற்றும் சந்தைப்படுத்துதல் திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) செயல்திறனை உயர்த்துதல் மற்றும் விரைவுபடுத்தல் திட்டத்தின் துணைத் திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்தத் திட்டத்திற்காக அடுத்த 3 ஆண்டுகளில் 277.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இத்திட்டம் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வாயிலாக MSME நிறுவனங்களுக்கு மின்னணு வர்த்தகத்தில் உதவும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
அரசுத் துறைச் சார்ந்த டிஜிட்டல் வர்த்தகத்தில் ஆன்லைன் வர்த்தகம், ஒருங்கிணைந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான நடைமுறைகள் மற்றும் சரக்குப் போக்குவரத்திற்கான ஆதரவை எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு வழங்குகிறது. MSME நிறுவனங்கள் தங்களுக்கு என்று பிரத்யேகமாக மின்னணு வர்த்தக தளங்களை அமைப்பதற்கான தேவையை இது குறைப்பதுடன் அரசு டிஜிட்டல் வர்த்தகத் தளத்தின் மூலம் அவர்களது தயாரிப்புகளை பதிவேற்றம் செய்வதற்கும் வகைப்படுத்துவதற்கும் உதவுவதாகவும் ஷோபா கரந்த்லஜே தெரிவித்துள்ளார்.
