அடிச்சாலும் பிடிச்சாலும் அவங்கதான் வேணுமா? ட்ராமா பாண்டிங் எனும் நச்சுப் பாச வலையும், அதிலிருந்து மீளும் வழியும்!

Published On:

| By Santhosh Raj Saravanan

understanding trauma bonding signs breaking free toxic relationships

“அவங்க உங்களை மோசமா நடத்துவாங்க, அசிங்கப்படுத்துவாங்க, அழ வைப்பாங்க. ஆனா, கொஞ்ச நேரம் கழிச்சு அவங்களே வந்து பாசமா பேசினா, ஒட்டுமொத்த வலியையும் மறந்துட்டு மறுபடியும் அவங்க பின்னாடியே ஓடுவீங்க… அவங்கள் பண்றது தப்புன்னு என் மூளைக்குத் தெளிவாத் தெரியுது, ஆனா மனசால அவங்களை விட்டுப் பிரிய முடியல, அவங்க இல்லாம என்னால வாழ முடியாது போல இருக்குன்னு ஒரு நரக வேதனையில சிக்கித் தவிக்குறீங்களா?”

உளவியல் உலகில் இதற்குப் பெயர் ட்ராமா பாண்டிங்’ (Trauma Bonding / காயம் சார்ந்த நச்சுப் பிணைப்பு). இது அன்பினாலோ அல்லது காதலாலோ உருவாகும் பந்தம் அல்ல; மாறாக ஒரு நச்சு மனிதரின் ஏமாற்று வேலைகளாலும், எமோஷனல் பிளாக்மெயில்களாலும் உங்களது மூளைக்குள் ஏற்படும் ஒரு ஆபத்தான ரசாயனப் பிணைப்பு ஆகும். இது ஒரு போதைப்பழக்கத்திற்குச் சமமானது.

ADVERTISEMENT

இந்த நச்சுப் பாச வலை எப்படி வேலை செய்கிறது, இதில் நாம் மாட்டிக்கொண்டிருப்பதை எப்படி அறிவது மற்றும் இதிலிருந்து எப்படி முற்றிலும் விடுபட்டுப் புதிய வாழ்க்கையைத் தொடங்குவது என்று இந்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

மூளையை ஏமாற்றும் டோபமைன் சுழற்சி

ட்ராமா பாண்டிங் ஏன் இவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்றால், அது ஒரு தொடர் சுழற்சியாக நடக்கிறது:

ADVERTISEMENT
  • 1: கடுமையான சண்டை, துரோகம் அல்லது அசிங்கப்படுத்துதல் நடக்கும்.
  • 2: உங்களது மனதில் அதீத பயமும் ஏமாற்றமும் ஏற்படும்.
  • 3: திடீரென அவங்களே காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது அல்லது அதீத பாசம் காட்டுவது போன்ற ‘லவ் பாம்பிங்’ நடக்கும்.
  • 4: மூளையில் ‘டோபமைன்’ ரசாயனம் சுரந்து ஒரு தற்காலிக நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

இந்தக் கடுமையான வலியும், அதைத் தொடர்ந்து கிடைக்கும் அந்த இன்ஸ்டன்ட் இதமான பாசமும் மாறி மாறி வரும்போது, உங்களது மூளை அந்த நச்சு மனிதரையே ஒரு போதைப்பொருள் போலப் பழகிப் பார்க்கத் தொடங்கிவிடுகிறது. அவர்கள் தரும் அந்தச் சிறு பாசத்திற்காக உங்களது ஒட்டுமொத்த சுயமரியாதையையும் அடகு வைக்கத் துணிவீர்கள்.

உங்களது உறவு காதலா அல்லது ஆபத்தான நச்சுப் பிணைப்பா?

உங்களது பந்தத்தின் தன்மையைக் கண்டறியக் கீழே உள்ள அத்தியாவசிய வேறுபாடுகளைக் கவனியுங்கள்.

ADVERTISEMENT
ஆரோக்கியமான பந்தத்தின் குணங்கள்:
  • பரஸ்பர மரியாதை, நிம்மதி மற்றும் அமைதி இருக்கும்.
  • தவறுகளை இருவருமாக ஒப்புக்கொண்டு, திருத்திக்கொள்ள முயல்வார்கள்.
  • உங்களுக்கென்று தனி சுதந்திரமும், தனித்துவமும் இருக்கும்.
  • உங்களது வெற்றியைக் கண்டு மனதாரப் பாராட்டுவார்கள்.
ட்ராமா பாண்டிங்கின் நச்சு அறிகுறிகள்:
  • எப்போதும் ஒருவித பயமும், எப்போது சண்டை வரும் என்ற பதற்றமும் சுற்றியே இருக்கும்.
  • தவறு அவர்கள் செய்திருந்தாலும், உங்களைக் குற்றவாளியாக்கி உங்களையே ஸாரி கேட்க வைப்பார்கள்.
  • உங்களை உங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடம் இருந்து முற்றிலும் பிரித்துத் தனிமைப்படுத்துவார்கள்.
  • உங்களது வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள் அல்லது அதை மழுங்கடிப்பார்கள்.
இந்த நச்சு வலையிலிருந்து உடைத்துக்கொண்டு வெளியேற 4 படிகள்
1. கற்பனையான பிம்பத்தை நம்புவதை நிறுத்துங்கள்

“அவங்க ஆரம்பத்துல எவ்வளவு அன்பா இருந்தாங்க தெரியுமா, அவங்க உள்ளுக்குள்ள ரொம்ப நல்லவங்க, கூடிய சீக்கிரம் மாறிடுவாங்க” என்ற போலி கற்பனையை முதலில் நிறுத்துங்கள். அவர்கள் ஆரம்பத்தில் காட்டிய அந்த அதீத பாசம், உங்களை உள்ளே இழுப்பதற்காகப் போடப்பட்ட ஒரு வலை மட்டுமே. தற்போது அவர்கள் உங்களை எப்படி நடத்துகிறார்களோ, அதுதான் அவர்களது அசல் குணம் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்.

2. நோ கான்டாக்ட் விதி

இந்த வலையிலிருந்து தப்பிக்க இருக்கும் ஒரே வழி, அந்த மனிதருடன் இருக்கும் அனைத்துத் தொடர்புகளையும் துண்டிப்பதுதான். போன் நம்பர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என அனைத்தையும் பிளாக் செய்யுங்கள். நான் சும்மா அவங்க லாஸ்ட் சீன் மட்டும் பார்க்கிறேன் என்று கூடப் பார்க்கக் கூடாது. நீங்கள் மீண்டும் பேசத் தொடங்கினால், உங்களது மூளை மீண்டும் அதே டோபமைன் சுழற்சிக்குள் மாட்டிக்கொள்ளும்.

3. உங்களது சப்போர்ட் சிஸ்டத்தை மீட்டெடுங்கள்

நச்சு மனிதர்கள் உங்களை எல்லாரிடமிருந்தும் பிரித்து வைத்திருப்பார்கள். தயங்காமல் உங்களது பழைய விசுவாசமான நண்பர்கள் அல்லது குடும்பத்தினரைத் தேடிப் போங்கள். “நான் தப்பு பண்ணிட்டேன், ஒரு நச்சு வலையில மாட்டிக்கிட்டேன், எனக்கு இப்போ உங்க உதவி வேணும்” என்று ஓப்பனாகக் கேளுங்கள். உங்களை நேசிப்பவர்கள் கண்டிப்பா உங்களுக்குத் தோள் கொடுப்பார்கள்.

4. புரொஃபெஷனல் தெரபி

ட்ராமா பாண்டிங்கில் இருந்து தனியாக வெளியே வருவது மிகக் கடினம். ஏனெனில் உங்களது சுயமதிப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டிருக்கும். ஒரு நல்ல மனநல ஆலோசகரை அணுகி கவுன்சிலிங் எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்களது மனக் காயங்களை வேரோடு குணப்படுத்த உதவுவார்கள்.

மனநல எக்ஸ்பர்ட்டின் அதிரடி கசப்பான உண்மை: உங்களது அளவற்ற அன்பாலோ, கண்ணீராலோ அல்லது பொறுமையாலோ ஒரு நார்சிசிஸ்ட் அல்லது நச்சுத் தன்மை வாய்ந்த மனிதரை உங்களால் ஒருபோதும் மாற்றவே முடியாது!

அவர்கள் மீண்டும் மீண்டும் உங்களிடம் தேடி வருவது உங்களது மேல் இருக்கும் பாசத்தால் அல்ல; உங்களை இன்னும் எவ்வளவு தூரம் அடிமையாக்கலாம், தங்களது சுயநலத்திற்காக உங்களை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற எண்ணத்தினால் மட்டுமே. உங்களது வாழ்க்கையையும் இளமையையும் ஒரு நச்சுப் பாத்திரத்தில் கொட்டி வீணடிக்காதீர்கள். தற்காலிகமாக வலிக்கக் கூடும், ஆனால் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது மட்டும்தான் உங்களது உயிற்கும் எதிர்காலத்திற்கும் பாதுகாப்பானது!

நன்றி: ஸ்ரீவித்யா மாரியப்பன், எழுத்தாளர் மற்றும் தொடர்பாடல் நிபுணர்

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share