2026-2027-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் சட்டமன்ற நிகழ்வுகள் தற்போது தொடங்கி உள்ளது.
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, 2026-2027-ஆம் நிதியாண்டுக்கான தனது முதல் பட்ஜெட்டை இன்று (ஆகஸ்ட் 5) தாக்கல் செய்கிறது. தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் இந்த நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார்.
முன்னதாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்திருந்தது.
குடும்பத் தலைவிகளுக்கு 60 வயது வரை மாதம் ரூ.2,500 வழங்கும் மதிப்புமிகு மகளிர் திட்டம்.
12-ஆம் வகுப்பு முதல் பிஎச்டி வரை படிக்க ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கும் கல்வி உத்தரவாதத் திட்டம்.
புதிய தொழில்முனைவோருக்கு ரூ.25 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கும் வெற்றி தொழில் முனைவோர் திட்டம்.
வேலையில்லாத இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை திட்டம்.
இந்த வாக்குறுதிகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடு இன்றைய பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் வலுத்துள்ளது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது முதல்வர் குறித்து சர்ச்சைக்குரியவகையில் பேசியதாக நேற்று உதயநிதிஸ்டாலின் கைது செய்யப்பட்டு தஞ்சை அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் நேற்று இரவு விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் நேற்று உதயநிதி கைது செய்யப்பட்டதால் அவர் பட்ஜெட் தாக்கல் நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இன்று அவர் சட்டமன்றத்திற்கு வருகை தந்தார்.
இந்நிலையில், தற்போது சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில் நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கி உள்ளார்.
