விஜய் ஆட்சியை கவிழ்க்க சதி- விசாரணைக்கு தடை!

Published On:

| By Mathi

Plot to Overthrow Vijay's Govt: High Court Stays Investigation

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியைக் கவிழ்க்க நடந்த சதி வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் வரும் 27-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது.

முதல்வர் விஜய் ஆட்சியை, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் கவிழ்க்க சதி நடந்தது; இதற்காக த.வெ.க.வின் ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டது என்பது வழக்கு.

ADVERTISEMENT

சென்னை திருவல்லிக்கேணி போலீசார் இந்த வழக்கை விசாரித்து 14 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் முன்ஜாமீன் பெற்று தினமும் விசாரணைக்கு ஆஜராகி வருகின்றனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி கார்த்திக், சேதுராஜ் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

ADVERTISEMENT

சேதுராஜ் தாக்கல் செய்த மனுவில், தாம் தங்கியிருந்த விடுதியில் இருந்து போலீசாரால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் மற்றொரு விடுதியில் வைத்து கைது செய்தனர் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் தன் மகனை வழக்கில் சேர்ப்போம் என அச்சுறுத்தி, இரவு நேரத்தில் தொடர்ந்து சட்டவிரோதக் காவலில் வைத்து வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

செந்தில் பாலாஜி மற்றும் பலரது பெயர்களை சொல்ல சொல்லி போலீசார் துன்புறுத்தினர்; வாக்குமூலத்தின் விவரங்களை தெரிவிக்காமலேயே கையெழுத்துகள் பெறப்பட்டன; அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த முழு விசாரணையும் நடத்தப்படுகிறது என்றும் சேதுராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு இந்த வழக்கின் அனைத்து விசாரணைக்கும் வரும் 27-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த வழக்கில் 6 பேருக்கு ஜாமீனும் 4 பேருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share