முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் முதலாவது பட்ஜெட் இன்று ஆகஸ்ட் 5-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகளான பெண்களுக்கு மாதம் ரூ2,500; வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ4,000 உதவித் தொகை வழங்கப்படும் ஆகியவை குறித்த அறிவிப்புகள் இடம் பெறும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தவெக அரசின் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் ஜூன் 19-ந் தேதி முதல் ஜூன் 23-ந் தேதி வரை நடைபெற்றது.
இதனையடுத்து சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆகஸ்ட் 5-ந் தேதி தொடங்குகிறது. முதல்வர் விஜய் அரசின் முதலாவது பட்ஜெட் என்பதால் கடந்த 2 மாதங்களாக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன. கடந்த ஜூலை 2-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரை துறை வாரியான ஆலோனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இன்று சட்டசபையில் நிதி அமைச்சர் மரிய வில்சன், தவெக அரசின் முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.
இன்றைய பட்ஜெட்டில்
- பெண்களுக்கு மாதம் ரூ2,500 வழங்கும் மதிப்புமிகு மகளிர் திட்டம்
- ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்
- வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ4,000
- அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்
உள்ளிட்ட தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அறிவிப்புகள் இடம் பெறும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
