விதிமுறையை மீறி கார் ஓட்டியதாக யூடியூபர் டி.டி.எப் வாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு வகையான புது புது பைக்குகளை அதிவேகமாக இயக்கி அதை வீடியோவாக யூடியூபில் பதிவு செய்து, அதன் மூலம் அதிக சப்ஸ்க்ரைபர்களை கொண்டவர் டிடிஎஃப் வாசன்.
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி பகுதியில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அபாயகரமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டி விபத்தில் சிக்கினார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து டிடிஎஃப் வாசன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பாலுசெட்டி போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் பலமுறை ஜாமீன் கோரியும் கிடைக்காமல் இறுதியாக 10 ஆண்டுகளுக்கு இருசக்கர வாகனத்தை இயக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
டிடிஎஃப் வாசனின் இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு, அதாவது 2033 அக்டோபர் 5ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் ஆர்டிஓ அறிவித்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஆந்திர மாநிலம் தடா அருவிக்கு நண்பர்களுடன் காரை ஓட்டிச் சென்ற வீடியோவை வெளியிட்டிருந்தார் டி.டி.எப் வாசன்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் இவர் எப்படி கார் ஓட்டுகிறார் என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த டிடிஎப் வாசன், தான் கார் ஓட்ட லைசென்ஸ் வாங்கி விட்டதாகவும், இனி கார்தான் தனது உயிர் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் மீண்டும் விதிமுறைகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு மதுரை, வண்டியூர் சுங்கச்சாவடி பகுதியில் TN 40 AD 1101 என்ற காரை செல்போனில் பேசியபடியே ஓட்டியுள்ளார்.
இதனை காரின் டேஷ்போர்டு கேமராவில் பதிவு செய்து Twin Throttlers என்ற யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக, மதுரை மாநகர ஆயுதப்படை சார்பு ஆய்வாளரும், சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி அளித்த புகாரின் பேரில் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மதுரை அண்ணாநகர் காவல்துறையினர் டிடிஎப் வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்
இந்நிலையில், சென்னையில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனை மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சூர்யா 44 வில்லன் இவரா..? கார்த்திக் சுப்புராஜின் சர்ப்ரைஸ்..!