குமரி கண்ணாடி இழை பாலம்: இதுவரை பார்வையிட்டோர் இத்தனை லட்சம் பேரா?

Published On:

| By Raj

tourist count in kumari glass path

குமரி கண்ணாடி இழை பாலத்தை ஒன்றரை மாதத்தில் பார்வையிட்டுள்ளவர்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. tourist count in kumari glass path

கன்னியாகுமரி கடலில் அடிக்கடி ஏற்படும் கடல் நீர்மட்டம் தாழ்வு, கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து அவ்வப்போது ரத்து செய்யப்படும். இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை இணைத்து பாலம் அமைக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 

இதை நிறைவேற்றும் வகையில் ரூ. 37 கோடியில் 77 மீட்டா் நீளம் 10 மீட்டா் அகலத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கண்ணாடி கூண்டுப் பாலம் அமைக்கப்பட்டது. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி இழை கூண்டுப் பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 30-ம் தேதி திறந்து வைத்தார்.     

தற்போது சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு கடல் நடுவே விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையினை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பதோடு, இரு பாறைகளையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை  பாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.

மேலும், திருவள்ளுவர் சிலையினை காண வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காகவும் அவர்களுக்கு வழிகாட்டிட காவல் துறை, வருவாய்த் துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பாக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்பாக பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர்கள் நாள்தோறும் அதிக அளவில் கண்ணாடி இழை பாலத்தினை வந்து பார்வையிடுகிறார்கள். ஜனவரி மாதத்தில் 2 லட்சத்து 15,000 சுற்றுலா பயணிகளும், பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வரை மட்டும் 1 லட்சத்து 24,000 சுற்றுலா பயணிகள் என மொத்தம் 3.39 சுற்றுலா பயணிகள் இதுவரை பார்வையிட்டுள்ளார்கள். இந்த நிலையில் நாளுக்கு நாள் கண்ணாடி இழை பாலத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share