டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றம் இன்று (நவம்பர் 9) முதல் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்டது. மொத்தம் 6,244 காலிப்பணியிடங்களுக்கான இத்தேர்வை மொத்தம் 15.88 லட்சம் பேர் எழுதி இருந்தனர். எனினும் அதன்பின்னர் தொடர்ச்சியாக 3 முறை காலிப்பணியிடங்கள் உயர்த்தப்பட்டு, மொத்தம் 9,491 காலிப்பணியிடங்களுக்கு அக்டோபர் 28-ம் தேதி முடிவுகள் வெளியானது.
இதன் அடுத்து கட்டமாக தங்களது வகுப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள், கல்வி சான்றிதழ்கள், பிறப்பு சான்றிதழ், அடையாள சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் (Onscreen Certificate Verification) செய்ய வேண்டியது அவசியம்.
அதன்படி சான்றிதழ் பதிவேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தேர்வாணையம் கடந்த நவம்பர் 7-ம் தேதி வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து, ஆன்லைன் வழியாக தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதன்படி சான்றிதழ் பதிவேற்றம் இன்று (நவம்பர் 9) முதல் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த 13 நாட்கள் நவம்பர் 21ஆம் தேதிக்குள் இதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சரி சான்றிதழ் பதிவேற்றம் செய்வது எப்படி?
சான்றிதழ் பதிவேற்றம் செய்ய தொடங்குவது முன்பு தங்களது வகுப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள், கல்வி சான்றிதழ்கள், பிறப்பு சான்றிதழ், அடையாள சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்டவை தெளிவாக தெரியுமாறு ஸ்கேன் செய்து படமாக எடுத்து வைத்துகொள்ளவும்.
1 : https://apply.tnpscexams.in/ என்ற இணைப்பிற்கு செல்லவும்.
2 : அதில் முகப்பு பக்கத்தில் இடது புறம் உள்ள நீல நிறத்தில் தலைப்புகளில், மூன்றாவதாக உள்ள ’நிரந்தரப் பதிவு விவரங்கள்’ (One Time Registration and Dashboard) என்ற தலைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
3 : பின்னர் ’ஏற்கெனவே பதிவு செய்தோர்- உள் நுழைய’ (Registered User -Login) என்பதை கிளிக் செய்து தேர்வர்களின் யூசர் பெயர் மற்றும் பாஸ்வோர்டு உள்ளிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
4. அதில் குரூப் 4 தேர்விற்கு எதிரில் சான்றிதழ் பதிவேற்றம் என்று இருக்கும் பட்டையை கிளிக் செய்து தயாராக வைத்திருக்கும் சான்றிதழ்களின் புகைப்படங்களை அந்தந்த இடத்தில் பதிவேற்றம் செய்யவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா