உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, புத்தாடை, பலகாரம் என நம் மனது மகிழ்ச்சியின் எல்லைக்குள் புகுந்துவிடுகிறது. அதே வேளையில் அதிக அளவில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதும், குழந்தைகள், சிறுவர்கள் மூச்சுத் திணறலால் அதிகம் பாதிக்கப்படுவதும் ஆண்டுதோறும் வாடிக்கையாகி வருகிறது.
அதனை தடுக்கும் விதமாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு கட்டுப்பாடு விதித்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகை பட்டாசுகளை மட்டும் பயன்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
