திருப்பரங்குன்றம் சர்வே கல் தூணில் இன்று தீபம்… பாதுகாப்பு பணியில் சிஆர்பிஎப்!

By Mathi

|

Published on 28 Nov 2026, 9:01 AM

Thiruparankundram New

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ள சர்வே கல் தூணில் இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கார்த்திகை தீப நாளான நவம்பர் 24-ந் தேதி, தர்கா அருகே உள்ள சர்வே கல் தூணில் ஒருமுறை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. அன்றைய தினம் அந்தத் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. உச்சிப்பிள்ளையார் மண்டபம் அருகே தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்த மனுவை நேற்று (நவம்பர் 27) விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வு, சர்வே கல் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவிட்டது. கோயில் ஸ்தானிகர்களுடன் ஆலோசித்து தீபம் ஏற்றும் நேரத்தை முடிவு செய்யவும், உச்சிப்பிள்ளையார் மண்டபத்தில் ஏற்றப்பட்ட தீபம் அணைந்திருந்தால் புதிதாகத் தீபம் ஏற்றவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்த உச்சநீதிமன்றம், கோயில் நிர்வாகத்தைப் பொறுப்பேற்று உத்தரவைச் செயல்படுத்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகியோரை நியமித்தது. கோயிலுக்கும் தர்காவுக்கும் சிஆர்பிஎப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டதுடன், தமிழகத் தலைமைச் செயலாளர், டிஜிபி, மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸும் அனுப்பியது.

ADVERTISEMENT

பக்தர்கள் தனித்தனியாக விளக்கேற்ற, தர்காவிலிருந்து எல்லாப் பக்கங்களிலும் குறைந்தது 50 மீட்டர் தள்ளி, பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இடங்களை ஒதுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகியோர் இன்று காலை மதுரை வந்து, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகப் பொறுப்பை ஏற்க உள்ளனர். தீபம் ஏற்றும் நேரம் குறித்து கோயில் ஸ்தானிகர்களுடனும், மலைப்பாதை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிஆர்பிஎப் அதிகாரிகளுடனும் அவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக இந்து பக்தர்களும், சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகையில் பங்கேற்க நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களும் மலை ஏறத் தொடங்கினர். அனைவருமே பாதுகாப்பு சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன் தீபம் ஏற்ற வசதியாக சர்வே கல் தூணைச் சுற்றி மூங்கில் மேடை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மூங்கில் கட்டைகளையும் மரப்பலகைகளையும் மலைக்கு எடுத்துச் சென்றனர்.

இதனிடையே தமிழ்நாடு காவல்துறை கவனித்து வந்த திருப்பரங்குன்றம் மலைப்பகுதியின் பாதுகாப்புப் பொறுப்பு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிஆர்பிஎப் வசம் ஒப்படைக்கப்பட்டது. மலை முழுவதும் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய வீரர்கள் மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel