எம்.பி சீட் கிடைக்காமல் போக முயன்றவர்களுக்கு நன்றி: திருநாவுக்கரசர்

Published On:

| By Selvam

கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. திருச்சி தொகுதியை மதிமுகவுக்கு திமுக ஒதுக்கியுள்ளது.

இந்தநிலையில், தனக்கு வாக்களித்த திருச்சி தொகுதி வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து திருநாவுக்கரசர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்தியாவிலேயே காங்கிரஸ் வேட்பாளர்களிலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த திருச்சி பாராளுமன்ற வாக்காளப் பெருமக்கள் அனைவரின் பாதங்களையும் தொட்டு என் நன்றியை மீண்டும் காணிக்கையாக்குகிறேன்.

கடந்த 5 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் பாதிப்புகுண்டான சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீங்கலாக எனது நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து சுமார் 17 கோடி ரூபாய் மக்களின் நலனுக்காகவும் மற்றும் மக்கள் நலப் பணிகளுக்காகவும் இத்தொகுதியில் செலவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் திருச்சி தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து பட்டியலிட்ட திருநவுக்கரசர், “தேர்தல் வாக்குறுதியான, சுமார் 10 ஆண்டு காலமாக முடிவு பெறாமல் ”தொங்கு பாலம்” என்று சொல்லப்பட்டு வந்த ஜங்ஷன் மேம்பாலத்திற்கு ராணுவ இடம் பெறப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.

விமான நிலைய விரிவாக்கத்திற்கு ராணுவத்திற்கு சொந்தமான இடங்களை பெற்று தந்துள்ளேன். திருச்சி பன்னாட்டு விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு, திறக்கப்பட்டது.

பி.எச்.இ.எல் (BHEL) , துப்பாக்கி தொழிற்சாலை, ராணுவத்திற்கான டேங்க் தொழிற்சாலை, ரயில்வே தொழிற்சாலை, மத்திய வாழை ஆராய்ச்சி நிறுவனம், மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பாராளுமன்றத்திலும், கமிட்டிகளிலும், அமைச்சர்களிடமும் பேசி இவை திறம்பட இயங்க உதவியுள்ளேன்.

விமான நிலைய கமிட்டிக் கூட்டம், மாவட்ட வளர்ச்சிக் குழு ((DISHA) கூட்டம், ஆகியனவற்றின் தலைமை ஏற்று நடத்தி திருச்சி புதுக்கோட்டை மாவட்டங்களின் மக்கள் நலப் பணிகள் சீராக நடைபெற ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கியுள்ளேன்.

தொல்லியல் துறையை தமிழக மாநிலத்தில் இரண்டாகப் பிரித்து திருச்சியை மையமாகக் கொண்டு 20 மாவட்டங்கள் உள்ளடக்கிய மண்டல அலுவலகத்தை கொண்டு வந்துள்ளேன்.

ஸ்மார்ட் சிட்டி, தொழில்நுட்ப பூங்கா, புதிய இணைப்பு ரயில்கள், புதிய விமான சேவைகள், புதிய பேருந்து நிலையம், குடிநீர் வடிகால் பணிகள் இப்படி பல பணிகள் நடைபெற குரல் கொடுத்தும், துணை நின்றும் செயல்பட்டுள்ளேன். திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் வர பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளேன்.

87 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் 53.4 லட்சம் மதிப்பிலான 87 நான்கு சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கி, இந்தியாவிலேயே எங்கும் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் செய்யாததை செய்துள்ளேன்.

மாணவ, மாணவியர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பள்ளிகளுக்கு டெஸ்க், பெஞ்ச், ஸ்மார்ட் கிளாஸ் ரூம் போன்றவற்றை வழங்கியுள்ளேன். இப்படி மனச்சாட்ச்சிக்கு விரோதம் இல்லாமல் வாக்களித்த மக்களுக்கு முழுமையாக பாடுபட்டுள்ளேன்.

பாராளுமன்றத்தில் 70 சதவிகித வருகைப் பதிவோடு, 37 விவாதங்களில் பங்கேற்றுள்ளேன். ஜீரோ அவர், விதி எண் 377 மற்றும் 358 வினாக்கள் 4 தனிநபர் மசோதாக்கள் கொண்டு வந்து பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இத்தொகுதியில் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இத் தொகுதி மக்களுக்காக எனது பணி எப்போதும் தொடரும்.

திருச்சியை இரண்டாவது தலைநகராக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியை மையமாகக் கொண்டு எனது அரசியல் செயல்பாடுகள் தொடர்ந்து இருக்கும். மக்கள் என்னை எப்போதும் சந்திப்பது போலவும், தொலைபேசி வாயிலாகவும், திருச்சி அலுவலகத்திலும் எப்போதும் போல் என்னை சந்திக்கலாம். தொடர்பு கொள்ளலாம்.

கடந்த சுமார் 47 ஆண்டுகளாக எனக்குள்ள மத்திய – மாநில அரசுகளின் தொடர்பு, அனுபவம் ஆகியனவற்றின் அடிப்படையில் முடிந்த நன்மைகளை திருச்சி தொகுதி மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் தொடர்ந்து செய்து பணியாற்றுவேன்.

1977-ல் அமரர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆா் அவர்களால் சட்டமன்ற உறுப்பினரான அந்த காலம் தொட்டு மத்திய மாநில பொறுப்புகளில் இருந்தும், சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும், எந்த அரசு பொறுப்புகள் வகிக்காத காலங்களிலும் பொது மக்களின் நலனுக்கான பணிகளை ஆற்றுவதில் இருந்தும் மக்கள் தொடர்பில் இருந்தும் எப்போதும் நான் ஓய்வு பெற்றதே இல்லை.

என் வாழ்நாளில், என் இல்லத்தில் நான் இருந்த நாட்களை காட்டிலும் மக்களோடு நான் இருந்த நாட்களே அதிகம். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் பல முறை சுற்றி வந்து மக்களை சந்தித்துள்ளேன். எனது மக்கள் பணி தொடரும்.

இத்தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்’ மீண்டும் தொகுதி மக்களுக்கு, நன்றியும், வாழ்த்தும், வணக்கமும்” என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தேர்தலில் போட்டி… நிர்மலா சீதாராமனுக்கு சுப்பிரமணியன் சுவாமி பதில்!

கணேசமூர்த்தி குடும்பத்திற்கு ஸ்டாலின் ஆறுதல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share