ADVERTISEMENT

”தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்ற முடியாது” – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

Published On:

| By christopher

The verdict already given in the TN Governor's case cannot be changed - SC

தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் தீர்ப்பை மாற்ற முடியாது என்றும், ஆளுநர்களின் அதிகாரம் குறித்த நீதிபதிகளின் தீர்ப்பு பற்றி விளக்கம் மட்டுமே வழங்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 19) தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT

அப்போது, சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 201இன் கீழ் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் காலவரையின்றி முடிவு எடுக்காமல் இருக்க முடியாது, பல மாதங்கள் நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதல் பெற்றதாக கருதப்படும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் குறித்த தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி திரௌபதி முர்மு 14 கேள்விகள் உச்சநீதிமன்றத்திடம் எழுப்பியிருந்தார்.

ADVERTISEMENT

அதற்கு பதிலளிக்கும் வகையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான நீதிபதிகள் சூர்யா காந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்ஹா மற்றும் ஏ. சந்துர்கர் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு இன்று விசாரித்தது.

ADVERTISEMENT

உச்சநீதிமன்றம் பதிலளிக்க தேவையில்லை!

அப்போது கேரள மாநிலத்தின் மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் மற்றும் தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், ”தமிழக ஆளுநர் அதிகாரம் குறித்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பின் மூலம் ஜனாதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கப்பட்டுள்ளன. எனவே, ஏற்கனவே ஒரு தீர்ப்பில் தீர்மானிக்கப்பட்ட பிரச்சினைகளை மறுபரிசீலனை செய்ய பிரிவு 143 இன் கீழ் உள்ள ஆலோசனை அதிகார வரம்பைப் பயன்படுத்த முடியாது. குடியரசுத் தலைவர் கேள்விகளுக்கு தற்போது உச்சநீதிமன்றம் பதிலளிக்க தேவையில்லை” என வாதிட்டனர்.

அதற்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “கணிசமான அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுதான் முடிவு செய்ய வேண்டும் என்று பிரிவு 145(3) கூறுகிறது” எனத் தெரிவித்தார். மேலும் பஞ்சாப், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆளுநர்கள் தொடர்பான வழக்குகளில் வேணுகோபால் மேற்கோள் காட்டிய எந்த தீர்ப்புகளும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுகளால் வழங்கப்படவில்லை என்பதை தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட ஜனாதிபதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி குறுக்கிட்டு, ”தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட முதலில் அமர்வே பரிந்துரைக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

2G வழக்கில் தீர்ப்பை தொந்தரவு செய்யவில்லை!

அதற்கு வேணுகோபால், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அது எந்த பெஞ்சாக இருந்தாலும், பிரிவு 141 இன் படி அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட தீர்ப்புகளில் பங்கேற்கலாம். ஆனால் பிரிவு 143ன் படி அத்தீர்ப்பை மாற்ற முடியாது” என்று அவர் காவிரி மற்றும் 2G ஆகிய முந்தைய தீர்ப்பு குறிப்புகளை சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி, ”பிரிவு 143 அதிகாரத்தை நீதிமன்றத்திற்குள் மேல்முறையீடாகப் பயன்படுத்த முடியாது. மேலும் காவிரி தீர்ப்பில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க பிரிவு 143 ஐப் பயன்படுத்த முடியாது என்று கூறிய உச்சநீதிமன்ற குறிப்புகளை சிங்வி சமர்ப்பித்தார். 2G வழக்கு தீர்ப்பின் மீதான பரிந்துரையின்போது, அனைத்து பொது வளங்களுக்கும் ஏலம் விட வேண்டிய அவசியம் குறித்த சட்டப் புள்ளியை நீதிமன்றம் தெளிவுபடுத்த மட்டுமே செய்தது. ஏற்கெனவெ உத்தரவிடப்பட்ட ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்வது குறித்து தீர்ப்பை தொந்தரவு செய்யவில்லை. ஆனால் அதற்கு நேர்மாறாக செய்தால் அது ஒட்டுமொத்த நீதித்துறை கொள்கைகளையும் சீர்குலைக்கும்” என்றார்.

உச்சநீதிமன்றம் செல்ல முடியாத வரம்பு என எதுவுமில்லை!

அப்போது மீண்டும் குறுக்கிட்ட அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, ”உச்சநீதிமன்ற அமர்வில் முரண்பட்ட தீர்ப்புகள் இருக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதி ஆலோசனை கேட்கிறார். உச்சநீதிமன்றம் செல்ல முடியாத வரம்பு என எதுவும் இல்லை. கடந்த காலத்தில் இதுபோன்று 15 குறிப்புகள் உள்ளன. பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்கில், நீதிமன்றம் நடைமுறையிலிருந்து விலகுகிறோம் என்று கூறலாம். அப்போது பிரிவு 143 அதன் சாரத்தை முற்றிலுமாக இழந்துவிடும்,” என தெரிவித்தார்.

அதனை ஆதரித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பிரிவு 143 அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது நீதிமன்றம் முந்தைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யலாம் மற்றும் மாற்றலாம் என்ற வாதத்தை அட்டர்னி ஜெனரலின் தீர்ப்பை ஆதரித்தார். மேலும் உச்ச நீதிமன்றத்திற்கு அதன் தீர்ப்புகளை ரத்து செய்ய உள்ளார்ந்த அதிகாரம் உள்ளது என்று அவர் வாதிட்டார்.

அதனை ஆதரித்து மூத்த வழக்கறிஞர்களான ஹரிஷ் சால்வே, நீரஜ் கிஷன் கவுல் மற்றும் மனிந்தர் சிங் ஆகியோரும், ’ஆலோசனை அதிகார வரம்பில் முந்தைய முடிவை ரத்து செய்ய நீதிமன்றம் உள்ளார்ந்த அதிகார வரம்பைப் பயன்படுத்த முடியும்’ என்று வாதிட்டனர்.

தீர்ப்பு பற்றி விளக்கம் மட்டுமே வழங்கப்படும்!

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, ”தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்ற முடியாது. ஆளுநர் அதிகாரம் குறித்து நீதிபதிகளின் தீர்ப்பு பற்றி விளக்கம் மட்டுமே உச்சநீதிமன்றம் வழங்கும். தீர்ப்பு பற்றி எந்த கருத்தும் சொல்லமாட்டோம். தற்போது ஆலோசனை வழங்கவே அமர்வு அமைக்கப்பட்டுள்ளதே தவிர, இது மேல்முறையீட்டு அமர்வு அல்ல” என திட்டவட்டமாக தெரிவித்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share