வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி எல்விஎம்-3-எம்6 ராக்கெட்

Published On:

| By Pandeeswari Gurusamy

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2ஆவது தளத்தில் இருந்து புதன்கிழமை காலை அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் புளூபேர்ட் 6 செயற்கைக்கோள் இஸ்ரோவின் எல்விஎம்-3-எம்6 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் வணிக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த அடிப்படையில் அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ் மொபைல் நிறுவனத்தின் புளூபேர்ட் 6 எனும் நவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளை இஸ்ரோவின் எல்விஎம்-3-எம்6 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் வாயிலாக இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவு தளத்திலிருந்து புதன்கிழமை காலை ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்காக 24 மணி நேரத்திற்கு முன்னதாக நேற்று காலை 8.54 மணி அளவில் கவுண்டவுன் தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை 8.54 மணியளவில் 6,100 கிலோ எடை கொண்ட புளூபேர்ட் 6 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

விண்வெளியில் இருந்து நேரடியாக ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அதிவேக இணைப்பு இணைய சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு புளூபேர்ட் 6 செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது. இது 223 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாத அடர்ந்த காடுகள் மலைப்பகுதிகளில் 5ஜி வேகத்தில் இணையம் சேவை, வீடியோ அழைப்புகள் குறுஞ்செய்தி ஆகியவற்றைப் பெற இயலும். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்தியதிலேயே இது அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
பிரதமர் வாழ்த்து

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ” இந்திய விண்வெளித்துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்டதிலேயே இது மிகவும் கனமான செயற்கைகோள். அமெரிக்காவின் புளூபேர்ட் பிளாக்-2 விண்கலத்தை அதன் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய எல்விஎம்-3-எம்6 ஏவுதல் இந்தியாவின் விண்வெளி பயணத்தில் ஒரு பெருமை மிக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

இது இந்தியாவின் அதிக எடை கொண்ட் செயற்கைக்கோள் ஏவுதல் திறனை வலுப்படுத்துகிறது. உலகலாவிய ராக்கெட் ஏவுதல் சந்தையில் நமது வளர்ந்து வரும் பங்கை உறுதிப்படுத்துகிறது.

ADVERTISEMENT

இது இந்தியாவின் தற்சார்பு நோக்கிய முயற்சிகளை பிரதிபலிக்கிறது. இதற்காக உழைத்த விண்வெளி விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்.” என பதிவிட்டுள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share