இதுவே சிறந்த ஒலிம்பியாட் விளையாட்டு அரங்கம் : தமிழ்நாட்டின் ஏற்பாடுகளை புகழ்ந்த கிராண்ட் மாஸ்டர்!

விளையாட்டு

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை சர்வதேச விளையாட்டு வீரர், செஸ் கிராண்ட் மாஸ்டர் வெல்லேஜு போன்ஸ் பாராட்டியுள்ளார்.

மாமல்லபுரத்தில் 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக சர்வதேச தரத்தில் தமிழக அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட்க்கு அதிகாரபூர்வ சின்னமான “தம்பி” என்ற குதிரையை அறிமுகபடுத்தியதில் தொடங்கி பல வித்தியாசமான முறைகளில் செஸ் ஒலிம்பியாட்டை தமிழக அரசு விளம்பரப்படுத்தி வருகிறது.

நேப்பியர் பாலம், மாநகர பேருந்து, மெட்ரோ, பால் பாக்கெட், செஸ் பலூன்என எங்கு பார்த்தாலும் இப்போது செஸ் ஒலிம்பியாட் சின்னங்கள் தான் இருக்கிறது. 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். விளையாட்டு வீரர்கள் போட்டி நடக்கும் இடத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் விளையாட்டு வீரர்களை வரவேற்பது முதல் அவர்களை விடுதியில் தங்க வைப்பது, உபசரிப்பது என அனைத்திலும் தமிழக அரசு கவனத்தை செலுத்தி வருகிறது.

இந்த ஏற்பாடுகள் மற்றும் வரவேற்பு முறைகளை சர்வதேச விளையாட்டு வீரர்கள் வியந்து பார்க்கிறார்கள். குறிப்பாக ஸ்பானிஷ் நாட்டு செஸ் வீரர் வெல்லேஜு போன்ஸ் தமிழக அரசின் ஏற்பாடுகளை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர் ஸ்பானிஷ் நாட்டின் கிராண்ட் மாஸ்டர். 5 முறை ஸ்பானிஷ் நாட்டின் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். தனது 16 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார். 2000 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச அண்டர் 18 உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் தனது ட்விட்டர் பதிவில் ”இப்போது தான் சென்னைக்கு வந்தேன், புகார் அளிக்கும் அளவிற்கு ஏதேனும் கண்டுபிடிக்கலாம் என்றால், அனைத்தும் முற்றிலும் ஆச்சரியமாக இருக்கிறது. அனைத்து தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்கள் நம்பமுடியாத அன்பான வரவேற்பு அளித்தனர். வேகமாக ஹோட்டல் அறையை ஏற்பாடு செய்து கொடுத்தனர்” என்று கூறியுள்ளார்.

மேலும் இங்கு இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனது 10 வது தொடரை மகிழ்ச்சியாக ஒலிம்பியாட்டில் கொண்டாட உள்ளேன். இதுவே சிறந்த ஒலிம்பியாட் விளையாடும் கூடமாகத் தெரிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

+1
1
+1
1
+1
0
+1
8
+1
1
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published.