Thanthai Periyar’s 1943 Vision: Mobile Phones to AI: செல்போன், வீடியோ கால், ஆன்லைன் கல்வி, செயற்கைக் கருத்தரிப்பு தொடங்கி இப்போது உலகையே அச்சுறுத்தும் செயற்கை நுண்ணறிவு AI என அறிவியல் வளர்ச்சி மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை அப்படியே தலைகீழாக மாற்றி கொண்டிருக்கிறது.
ஆனால் 80 ஆண்டுகளுக்கு முன்பே எதிர்காலத்தில்.. அதாவது நாம் இன்றைக்கு அனுபவித்து கொண்டிருக்கும் வியத்தகு அறிவியல் வளர்ச்சி உருவாகும் என்பதை கணித்தவர் ஜோதிடர் அல்ல.. மனித குலம் மான மரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காக பகுத்தறிந்து சிந்திக்க சொன்ன, மதவாத மூடநம்பிக்கைகளுக்கும் அடக்குமுறை ஆதிக்க சக்திகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் எனும் ’சமூக’ விஞ்ஞானிதான் அப்படி சிந்தித்தவர்..

1943-ல் தந்தை பெரியார் பேசியதும் எழுதியதும் 1944-ல் ‘இனிவரும் உலகம்’ என்ற நூலாக வெளியானது. இந்த ‘இனிவரும் உலகம்’ நூல், இன்றைக்கும் தந்தை பெரியாரின் வியத்தகு தொலைநோக்கு பார்வைகளை படம்பிடித்து காட்டி இருக்கிறது. தந்தை பெரியார் கணித்தது புதிய கருவிகள் நிறைந்த உலகத்தை மட்டும் அல்ல. அறிவியல் வளர்ச்சி, உற்பத்திப் பெருக்கம், இயந்திரமயமாக்கல் ஆகியவற்றால் மனிதனின் உழைப்பு குறைந்து, வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய வாழ்வியலும் அதனூடாக உருவாகப் போகும் சமூகத்தின் மாற்றத்தையும் சேர்த்துதான்.
80 ஆண்டுகளுக்கு முன்னர் ”இனிவரும் உலகம்” நூலில் தந்தை பெரியார் எழுதி இருப்பதைப் பார்ப்போம்..
”ஏன் பிறக்கவேண்டும்? சகல சவுகரியங்களுமுள்ள இப்பரந்த உலகில் உணவுக்காக என்று ஒருவன் ஏன் பாடுபடவேண்டும்? ஏன் சாகவேண்டும்? என்கின்ற பிரச்சினைகள் சிந்தனைக்கு மயக்கமளித்து வந்து சிக்கலான பிரச்னைகளாக இருந்தவை இன்று தெளிவாக்கப்பட்டுப் பரிகாரம் தேடப்பட்டும் வருகிற காலம் நடக்கிறது. இந்தப் போக்குச் சீக்கிரத்தில் மக்களின் பொதுவாழ்விலேயே பெரியதொரு புரட்சியை உண்டாக்கும்படியான புதிய உலகத்தை உண்டாக்கித்தான் தீரும். அப்போதுதான் நான் முன்சொன்ன பணம், காசு என்ற உலோக நாணயமே இருக்காது. அரச ஆட்சி இருக்காது. கடினமான உழைப்பு என்பது இருக்காது. இழிவான வேலை என்பது இருக்காது. அடிமைத்தன்மை இருக்காது. ஒருவரை ஒருவர் நம்பிக்கொண்டு வாழவேண்டிய அவசியம் இருக்காது. பெண்களுக்குக் காவல் கட்டுப்பாடு, பாதுகாப்பு என்பவையான அவசியம் இருக்காது”

“வாழ்க்கைச் சாதனங்களுக்கு எப்படிக் காலமும் யோசனைகளும் கண்டுபிடிப்புகளும் தேவை இருக்கிறதோ, அதுபோலவே மக்களின் ஓய்வுக்கும், உடற்பயிற்சிக்கும், மகிழ்ச்சிக்கும், போகபோக்கியத்துக்கும் யோசனைகளும் ஆராய்ச்சிகளும், சாதனங்களும், அவைகளைச் சுலபமாகச் செய்ய வசதிகளும் கண்டுபிடிப்பும், அவை நாளுக்குநாள் மாற்றமடைவதும் ஆகிய காரியங்களில் மீதி நாட்கள் செலவழிக்கப்பட வேண்டி இருக்கும்”
“இழிவான” வேலைகளுக்கு ஆள் கிடைக்குமா? என்ற கேள்வி பிறக்கலாம். இழிவான வேலை என்பது வருங்காலத்தில் இருக்க முடியாது. சரீரத்தில் செய்யப்படவேண்டிய எல்லாக் காரியங்களும் அநேகமாக இயந்திரங்களே செய்யும்படியாக ஏற்பட்டுவிடும். கக்கூசு எடுக்கவேண்டியதும், துலக்கவேண்டியதும், வீதி கூட்டவேண்டியதும்கூட இயந்திரத்தினாலேயே செய்து முடிந்துவிடும். மனிதன் பாரம் எடுக்க வேண்டியதோ ஆள் இழுக்கவேண்டியதோ ஆன காரியங்கள் இருக்கவேயிருக்காது”
“எங்கும் ஆகாயவிமானமும் அதிவேக சாதனமுமாகவே இருக்கும்”
“கம்பியில்லாத் தந்திச் சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்”
“ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும்”
“உருவத்தைத் தந்தியில் அனுப்பும்டியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்.”
“மேற்கண்ட சாதனங்களால் ஒரு இடத்திலிருந்து கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்விகற்றுக்கொடுக்கச் சாத்தியப்படும்”
“உணவுகளுக்குப் பயன்படும்படியாக உணவு சத்துப்பொருள்களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக்கூடிய உணவு ஏற்பட்டு விடும்.”
“பிள்ளைப்பேறுக்கு ஆண்பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடன், புத்தி நுட்பமும், அழகும் காத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாகப் பொலிகாளைகள்போல் தெரிந்தெடுத்த மணிபோன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை இன்செக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்கச்செய்யப்படும். ஆண் பெண் சேர்க்கைக்கும் குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும். மக்கள் பிறப்புக் கட்டுப்படுத்தப்பட்டு ஒரு அளவுக்குள் கொண்டுவந்துவிடக்கூடும்”
“பெட்ரோல் செலவு குறையலாம். பெட்ரோலுக்குப்பதில் மின்சார சக்தியே உபயோகப்படுத்தப்படலாம். அல்லது விசை சேகரிப்பாலேயே ஓட்டப்படலாம்.”
80 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை பெரியார் எழுதிய இந்த வரிகளை, இன்றைய உலகத்துடன் பொருத்திப் பார்த்தால்தான் அவரது தொலைநோக்குச் சிந்தனையின் ஆழம் புரியும்.
“கம்பியில்லா தந்திச் சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்” என்றார். இன்று உலகின் எந்த மூலையில் இருப்பவருடனும் பேசவும், செய்திகளைப் பரிமாறவும், படம் பார்க்கவும், பணம் செலுத்தவும், உலகையே உள்ளங்கைக்குள் கொண்டுவரவும் பயன்படும் செல்போன் நமது சட்டைப் பைக்குள் இருக்கிறது இல்லையா?
“ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்” என்றார். இன்று வாட்ஸ்அப் வீடியோ கால் தொடங்கி கூகுள் மீட், ஜூம் வரை உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் முகம் பார்த்துப் பேசுகிறோம்.

அதே தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டப் பயன்பாட்டையும் பெரியார் சிந்தித்திருக்கிறார்.
“ஒரு இடத்திலிருந்து கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக்கொடுக்கச் சாத்தியப்படும்” என்ற அவரது வரிகள், இன்று ஆன்லைன் வகுப்புகளாகவும் தொலைதூரக் கல்வியாகவும் நடைமுறையில் நம் கண்முன்னே இருக்கின்றன.
“எங்கும் ஆகாய விமானமும் அதிவேக சாதனமுமாகவே இருக்கும்” என்றார். இன்று உலகின் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு சில மணி நேரங்களில் பயணிக்கிறோம். அதிவேக ரயில்கள் தொடங்கி விண்வெளிப் பயணம் வரை போக்குவரத்தின் வேகம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
வாகனங்களின் எதிர்காலத்தைப் பற்றிப் பேசும்போது, “பெட்ரோலுக்குப்பதில் மின்சார சக்தியே உபயோகப்படுத்தப்படலாம். அல்லது விசை சேகரிப்பாலேயே ஓட்டப்படலாம்” என்றார். இன்று பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பேட்டரியில் மின்சாரத்தைச் சேமித்து இயக்கப்படும் Electric Vehicle-கள் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகின்றன.
மனிதனின் உணவுமுறைகூட மாறலாம் என்று பெரியார் சிந்தித்தார். உணவின் சத்துகளைச் சுருக்கி ஒரு வாரத்திற்குத் தேவையான உணவை ஒரு சிறிய குப்பிக்குள் அடக்கக்கூடிய காலம் வரலாம் என்றார். அவர் கூறிய அந்த அளவுக்கு உணவு முறை மாறவில்லை. ஆனால் உணவிலுள்ள புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட சத்துகளைப் பிரித்தெடுத்து செறிவூட்டப்பட்ட வடிவங்களில் வழங்கும் அறிவியல் இன்று வளர்ந்திருக்கிறது.
இவற்றையெல்லாம்விட மனித இனப்பெருக்கம் தொடர்பாக அவர் எழுதியிருப்பதுதான் பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது.
“பிள்ளைப்பேறுக்கு ஆண்பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம்” என்று தொடங்கும் பெரியார், ஆணின் விந்துவை பெண்ணின் கருப்பைக்குள் மருத்துவ முறையில் செலுத்தி குழந்தை பெறக்கூடிய எதிர்காலத்தை விவரிக்கிறார். இறுதியில், “ஆண் பெண் சேர்க்கைக்கும் குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும்” என்கிறார்.
இன்று IVF, IUI உள்ளிட்ட உதவி இனப்பெருக்க மருத்துவ முறைகளால் உடலுறவு இல்லாமலேயே கருத்தரிப்பை ஏற்படுத்துவதற்கான மருத்துவ வாய்ப்புகள் இருக்கின்றன. பெரியார் அன்று பயன்படுத்திய சொற்களையும் அவர் விவரித்த முறையையும் இன்றைய IVF தொழில்நுட்பத்துடன் அப்படியே சமப்படுத்த முடியாது. ஆனால் பாலுறவையும் குழந்தைப் பேற்றையும் அறிவியல் பிரித்துவிடக்கூடும் என்று அவர் சிந்தித்த அடிப்படை திசை இன்று மருத்துவ அறிவியலில் நடைமுறைச் சாத்தியமாகியிருக்கிறது.

இங்கே இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.
தந்தை பெரியார் எதிர்காலத்தைப் பற்றிப் பேசியது செல்போன் எப்படி இருக்கும், வாகனம் எப்படி ஓடும், குழந்தை எப்படி பிறக்கும் என்ற தொழில்நுட்பக் கணிப்புகளுடன் நின்றுவிடவில்லை.
“கக்கூசு எடுக்கவேண்டியதும், துலக்கவேண்டியதும், வீதி கூட்டவேண்டியதும்கூட இயந்திரத்தினாலேயே செய்து முடிந்துவிடும்” என்று அவர் எழுதியது உட்பட அனைத்து சிந்தனைகளுக்கும் பின்னால் ஒரு சமூகப் பார்வை இருக்கிறது.
மனிதனை இழிவுபடுத்தும் வேலைகள் என்று எதுவும் எதிர்காலத்தில் இருக்கக்கூடாது; மனித உடல் உழைப்பை இயந்திரங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்; மனிதன் பாரம் சுமப்பதும், மனிதனை மனிதன் இழுப்பதும் இல்லாமல் போக வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார்.
இன்று தொழிற்சாலைகளில் ரோபோக்கள் வேலை செய்கின்றன. மனிதர்கள் செய்த பல பணிகளை தானியங்கி இயந்திரங்கள் செய்கின்றன. வீட்டைச் சுத்தம் செய்யும் ரோபோ முதல் ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் வரை மனித உழைப்பை இயந்திரங்களிடம் ஒப்படைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. அதன் உச்சமாக இப்போது மனிதனின் உடல் உழைப்பை மட்டுமல்ல, அவனுடைய அறிவுசார் பணிகளையே செய்யக்கூடிய செயற்கை நுண்ணறிவு- AI உலகம் வேகமாக வளர்ந்து வருகிறது.
ஆனால் தந்தை பெரியார் எழுதியதில் இன்றைக்கும் விடை கிடைக்காமல் இருக்கும் கேள்வியும் இருக்கிறது.
இயந்திரங்கள் மனிதனின் வேலையைச் செய்தால், அதனால் கிடைக்கும் பலன் மனிதனின் வேலை நேரத்தைக் குறைத்து, அவனுக்கு அதிக ஓய்வையும் மகிழ்ச்சியையும் கொடுக்க வேண்டுமல்லவா?
அதனால்தான் வேலை நேரம் குறைவதற்குப் பிறகு கிடைக்கும் காலத்தை மனிதன் “ஓய்வுக்கும், உடற்பயிற்சிக்கும், மகிழ்ச்சிக்கும்” பயன்படுத்தக்கூடிய உலகத்தையும் பெரியார் சேர்த்துப் பார்க்கிறார்.
அறிவியல் வளர்ச்சியின் நோக்கம் மனிதனை இன்னும் அதிகமாக உழைக்க வைப்பதல்ல; அவனுடைய உழைப்பைக் குறைத்து வாழ்க்கையை எளிதாக்குவதாக இருக்க வேண்டும் என்பதுதான் அந்தச் சிந்தனையின் அடிப்படை.
இதற்கும் மேலாக ‘இனி வரும் உலகம்’ நூலின் தொடக்கத்திலேயே பெரியார் எழுப்பும் கேள்விகள்தான் அவரது மொத்த எதிர்காலச் சிந்தனையையும் புரிந்துகொள்ள உதவுகின்றன.
“சகல சவுகரியங்களுமுள்ள இப்பரந்த உலகில் உணவுக்காக என்று ஒருவன் ஏன் பாடுபடவேண்டும்?” என்பதுதான் அவரது கேள்வி.
அறிவியல் வளர வேண்டும்; இயந்திரங்கள் பெருக வேண்டும்; உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. அவற்றின் இறுதிப் பயன் மனிதனுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக.
அதனால்தான் அவர் கற்பனை செய்த எதிர்காலத்தில் கடினமான உழைப்பு இல்லை; இழிவான வேலை இல்லை; அடிமைத்தன்மை இல்லை; பெண்களுக்குக் காவல், கட்டுப்பாடு என்ற பெயரில் விதிக்கப்படும் தடைகள் இல்லை என்று எழுதுகிறார்.
இந்த இடத்தில்தான் பெரியார் கணித்த அறிவியல் உலகத்திற்கும் அவர் விரும்பிய சமூக உலகத்திற்கும் இடையிலான தொடர்பு புரிகிறது.
அவர் எதிர்பார்த்த பல அறிவியல் மாற்றங்களை மனிதகுலம் கடந்த 80 ஆண்டுகளில் எட்டிவிட்டது.-
- சட்டைப் பைக்குள் தகவல் தொடர்புச் சாதனம் வந்துவிட்டது
- உருவம் பார்த்து பேசும் வசதி வந்துவிட்டது
- ஓரிடத்திலிருந்து உலகம் முழுவதும் கல்வி கற்பிக்க முடிகிறது
- பெட்ரோலுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் வந்துவிட்டன
- உடலுறவு இல்லாமல் கருத்தரிப்பை ஏற்படுத்தும் மருத்துவ அறிவியல் வளர்ந்துவிட்டது
- மனித உழைப்பை இயந்திரங்களும் ரோபோக்களும் எடுத்துக்கொண்டிருக்கின்றன.
- இப்போது மனிதனின் அறிவுசார் வேலைகளுக்குள்ளும் AI நுழைந்துவிட்டது.
ஆனால் பெரியார் எதிர்பார்த்த இன்னொரு உலகம் முழுமையாக வந்துவிட்டதா?
- கடினமான உழைப்பு இல்லாத உலகம் வந்துவிட்டதா?
- இழிவான வேலை இல்லாமல் போய்விட்டதா?
- அடிமைத்தனம் முற்றிலும் மறைந்துவிட்டதா?
- பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்துவிட்டனவா?
- அறிவியல் வளர்ச்சியின் பலன்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்கின்றனவா?
80 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் பார்த்த அறிவியல் எதிர்காலத்தின் பல பகுதிகளை காலம் நிஜமாக்கியிருக்கிறது. ஆனால் அவர் கனவு கண்ட மானமும் மரியாதையும் கொண்ட மனித சமூகத்தை உருவாக்க வேண்டிய ”சமூக கடமைகள்” மட்டும் இன்னும் முடிவடையவில்லை.
