உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தின் ஆன்மீக ஸ்தலங்களில் ஒன்றாகவும்; திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலமாகவும் உலகப் புகழ் பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் புனரமைப்புப் பணிகள் ரூ.25 கோடி மதிப்பில் முழு வீச்சில் நடைபெற்று வந்தன. இதைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடந்தேறியது.
தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. யாகசாலை பூஜைக்காக வடக்கு ஆவணி மூல வீதியில் 184 குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. மூலவர் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரருக்காக பிரத்யேக தங்கக் குடங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டன. கங்கை, யமுனை, காவிரி, வைகை உள்ளிட்ட பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கலசங்களில் நிரப்பி யாகசாலையில் வைத்து பூஜைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழாவுக்கான யாக பூஜைகள் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கின. இதற்காக செப்டம்பர் 11-ஆம் தேதி முதல்கால யாக பூஜைகள் தொடங்கிய நிலையில், தொடர்ச்சியாக மற்ற கால பூஜைகளும் நடந்து வந்தன. நேற்று அதிகாலை 3:45 மணி அளவில் பத்தாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. அந்த வழிபாடு நிறைவு பெற்ற பிறகு, பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் தொடங்கியது.
யாகசாலையில் இருந்து புனித நீர் கலசங்கள் புறப்பாடாகி, கோயிலுக்குள் உள்ள பரிவார தெய்வங்களின் சன்னதிக்குக் கொண்டு செல்லப்பட்டன. காலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் சித்தி விநாயகர், கூடல் குமாரர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, மகாலட்சுமி, பத்திரகாளி, அக்னி வீரபத்திரர், 63 நாயன்மார்கள், நவகிரகங்கள் உள்ளிட்ட 414 பரிவார தெய்வங்களுக்கு நேற்று புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் தங்க விமானம், சன்னதி விமானங்கள் மற்றும் 12 கோபுரங்கள் உள்ளிட்டவற்றின் கும்ப கலசங்களுக்கு நேற்று மாலை பதினொன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.
இந்நிலையில், இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் மகா கும்பாபிஷேக விழா காலை கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக காலை 3:45 மணிக்கு பன்னிரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடு காலை 5:45 மணிக்கு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளிட்ட 12 கோபுரங்கள் மற்றும் தங்க விமானங்களுக்குக் கடங்களைக் கொண்டு சென்ற பிறகு, இன்று காலை 7:40 மணியளவில் கோபுரங்களுக்குக் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது; பின்னர் தீபாராதனைகள் காட்டப்பட்டன. கோலாகலமாக நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தை பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர். திரண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை மேற்பகுதியில் இருந்து காண 9,000 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. நான்கு மாசி வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்காகத் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் புனித நீராடல் மற்றும் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்று காலை 10மணி முதல் இரவு வரை நடை சாத்தப்படாமல் மூலவர் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். கும்பாபிஷேகத்தைக் காண முடியாத பக்தர்களுக்காக இன்று இரவு 7 மணிக்கு நான்கு மாசி வீதிகளிலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா வந்து காட்சியளிக்க உள்ளனர். கும்பாபிஷேக விழாவை ஒட்டி கோயிலில் உள்ள 12 கோபுரங்கள், மதில் சுவர்கள், பொற்றாமரைக் குளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
