Maha Kumbabhishekam: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செப்டம்பர் 17) கோலாகலமாக நடைபெறுகிறது.
மதுரையின் அடையாளமாக மட்டுமின்றி, தமிழகத்தின் முக்கிய ஆன்மீகத் தலங்களில் ஒன்றாக விளங்கும் மீனாட்சி அம்மன் கோவிலில் கடைசியாக கடந்த 2009ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதால், மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி சாந்தி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை முதலே கும்பாபிஷேகத்துக்கான இறுதிக்கட்ட பூஜைகள் நடைபெறுகின்றன.
இன்று காலை 7.40 மணிக்கு பொன் விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கும், 7.55 மணிக்கு மீனாட்சி அம்மன் மூலவர் சன்னதிக்கும், 8.10 மணிக்கு சுந்தரேஸ்வரர் மூலவர் சன்னதிக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி கோபுரங்கள், விமானங்கள் மற்றும் சன்னதிகளில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருப்பணிகளுக்காக உபயதாரர்கள் மூலம் ரூ.21 கோடி பெறப்பட்டன.
மதுரையில் பக்தர்கள் பெருவெள்ளம்
17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேகத்தை நேரில் காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர்.
இதனால் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் பகுதியில் பக்தர்கள் நிற்பதற்கும், கும்பாபிஷேகத்தை காண்பதற்கும் தனித்தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனுமதி அட்டை இல்லாத பக்தர்கள் காலை 10 மணி வரை சித்திரை வீதிகளில் நிற்க அனுமதி இல்லை என்றும், நான்கு ஆவணி மூல வீதிகள் வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டிடங்கள் மற்றும் மேற்கூரைகளில் ஏறி கும்பாபிஷேகத்தை பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதி, கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட வசதிகளை எளிதில் கண்டறியும் வகையில் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் QR Code வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள், ரயில்கள்
கும்பாபிஷேகத்திற்காக மதுரைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மதுரை மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, பக்தர்களுக்காக 1,000 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் தெற்கு ரயில்வே சார்பில் திருநெல்வேலி–கூடல் நகர், ராமேஸ்வரம்–பழனி, போடிநாயக்கனூர்–கூடல் நகர் மற்றும் தாம்பரம்–மதுரை உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் உதவிகளை வழங்க மதுரை மாநகராட்சி சார்பில் 1800-425-6781, 1800-425-6782 ஆகிய கட்டணமில்லா உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த மகா கும்பாபிஷேகத்தால் இன்று அதிகாலை முதலே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்தும் பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
முதல்வர் விஜய் பெருமிதம்
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள செய்தி: தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் இந்நன்னாளில், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்!
நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்!. இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் வாழ்த்து
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், “” நான்மாடக் கூடலுக்கு நன்னீராட்டு விழா! மலையத்துவசன் மகளாய் வேள்வியில் விளைந்தவள் மதுரையின் மாதரசி பாண்டியகுலப் பேரரசி அங்கயற்கண்ணி என்னும் மீனாட்சி! அவள், நித்த மணாளன் நிரம்ப அழகியன் சொக்கநாதன் என்னும் சுந்தரேஸ்வரனைக் கைப்பிடித்தாள்! அவன் தமிழ்ச் சங்கத்துத் தலைவனாக இருந்து, சங்கப்பலகை ஈந்து தமிழ் செழிக்க காரணமானான். இவர்கள் இருவரும் வீற்றிருந்து அகிலம் காத்து அருள்பாலிக்கும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலுக்கு மஹா கும்பாபிஷேகம் (17-09-2026) வியாழன் அன்று காலை நடைபெறுகிறது. இவ்விழா சிறப்பாக நடைபெற பிரார்த்திப்பதோடு, விழாவில் கலந்துகொள்ளும் அனைவரையும் வாழ்த்துகிறேன்!” என தெரிவித்துள்ளார்.
