“CAPTAIN M NETWORK” மூலம் கோவையில் தங்கி பயங்கரவாத சதி? 19 வயது இளைஞர் கைதானதன் பின்னணி!

Published On:

| By Pandeeswari Gurusamy

அல்கொய்தா சித்தாந்த ஆதரவு ஆன்லைன் குழுவில் தொடர்பில் இருந்த மக்சூத் அலி (19) என்ற இளைஞரை, உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவு அளித்த தகவலின் பேரில் கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து உ.பி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இந்தியாவில் சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து, நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து உபி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, கடந்த 12-ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கரைச் சேர்ந்த முகமது நபீல் என்பவரை கைது செய்தனர்.

ADVERTISEMENT

முகமது நபீலிடம் நடத்திய விசாரணையில், சமூக வலைத்தளங்கள் வாயிலாக தொடர்புகளை மேற்கொள்ள பிரத்யேக செயலிகளை வடிவமைத்துக் கொடுத்தது உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்சூத் அலி என்பது தெரியவந்தது.

பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மக்சூத் அலி, கோவை ஹோப் காலேஜ் பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கியிருந்துள்ளார். அவர் பெங்களூரு புறப்படத் தயாரானபோது, உ.பி. ஏடிஎஸ் தகவலின் பேரில் கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மக்சூத் அலியை உத்தரபிரதேச ஏடிஎஸ் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட அவர், மேல் விசாரணைக்காக லக்னோ அழைத்துச் செல்லப்பட்டார்.

ADVERTISEMENT

இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் திட்டமிட்டதாக இவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையில் மக்சூத் அலி அல்கொய்தா சித்தாந்த ஆதரவு ஆன்லைன் குழுவில் இருந்தது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் “CAPTAIN M NETWORK” என்ற பிரத்யேக செயலியை உருவாக்கி, நபீல் உள்ளிட்ட சிலருடன் தொடர்பில் இருந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவரது இரு வாட்ஸ்அப் எண்களிலும் பாகிஸ்தானைச் சேர்ந்த எண்கள் இடம்பெற்றிருந்ததும் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

இவருக்குக் கோவையில் வேறு ஏதேனும் தொடர்புகள் உள்ளதா மற்றும் கோவையில் வந்து அறை எடுத்து தங்கி இருந்ததன் பின்னணி என்ன என்பது குறித்து கோவை மற்றும் உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share