மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கும்பாபிஷேகத்தைக் காண வந்த ஏராளமான பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆவேசமடைந்தனர். அமைச்சர் நிர்மல் குமாரை பார்த்து சில பெண்கள் உங்களுக்கு வாக்களித்ததே வேஸ்ட் என்று கோஷம் எழுப்பியதால் அப்பகுதியில் சற்றே பரபரப்பான சூழல் நிலவியது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் மகா குடமுழுக்கு பெருவிழா, 17 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை (செப்டம்பர் 17) காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி மதுரை மாநகரம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில், கும்பாபிஷேகத்தைக் காண அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் ஆவேசமடைந்தனர். காரில் வருபவர்களுக்கு மட்டும்தான் அனுமதியா என அங்கிருந்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரிடம் சிலர் கேள்வி எழுப்பினர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி, கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தொடர்ந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும், பக்தர்களை ஒழுங்குபடுத்துவதிலும் சிரமம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த அமைச்சரிடம் பொதுமக்கள் சிலர் தங்களது குறைகளை நேரடியாகத் தெரிவித்ததுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
கூட்ட நெரிசலால் ஏற்பட்ட சிரமம் குறித்து பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரைப் பார்த்து ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர். ஒரு கட்டத்தில், அமைச்சர் முன்னிலையிலேயே சிலர் “அரசு ஒழிக” என முழக்கமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், ஆத்திரமடைந்த பெண்கள் சிலர், “உங்களுக்கு வாக்களித்ததே வேஸ்ட்” என அமைச்சரிடம் கூறி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனால் அங்குச் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில், அமைச்சர் முன்னிலையிலேயே பொதுமக்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டதும், பெண்கள் நேரடியாகத் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
