விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைத் தொடர்ந்து இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மீண்டும் மோதல் ஏற்பட்ட நிலையில், சண்டையை விலக்கச் சென்றவர் தலையில் தடியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 14-ஆம் தேதி வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்டம் கீழ்க்கவரப்பட்டு மற்றும் மேல்க்கவரப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுத் தங்கள் கிராமங்களில் இருந்து தனித்தனியாக மினி லாரிகளில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சிலைகளைக் கரைத்துள்ளனர். அப்போது இரு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் இரு தரப்பினரும் அங்கிருந்து தங்களது கிராமங்களுக்குத் திரும்பியுள்ளனர்.
முன்விரோதம் காரணமாக மீண்டும் மோதல்:
இந்நிலையில், மேல்க்கவரப்பட்டைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் கீழ்க்கவரப்பட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசு ஆகியோருக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த முன்விரோதத்தின் தொடர்ச்சியாக இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து விக்னேஷின் தாயார் மற்றும் அவரது குடும்பத்தினர், கீழ்க்கவரப்பட்டில் உள்ள திருநாவுக்கரசின் வீட்டிற்குச் சென்று இதுகுறித்து விசாரிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.
சண்டையை விலக்கச் சென்றவர் பலி:
அப்போது கீழ்க்கவரப்பட்டைச் சேர்ந்த ராமு என்பவர், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையை விலக்குவதற்காக அங்கு சென்றுள்ளார். சண்டையை விலக்க முயன்ற ராமுவை ஒருவர் தடியால் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராமு நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் சிகிச்சைக்காகப் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், ராமுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் கீழ்க்கவரப்பட்டு மற்றும் மேல்க்கவரப்பட்டு ஆகிய இரு கிராமங்களிலும் அதிரடியாகக் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
உயிரிழந்த ராமுவின் உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த ராமு விநாயகர் சிலை ஊர்வலத்திலோ அல்லது தேவனாம்பட்டினம் கடற்கரைக்குச் சிலை கரைக்கவோ சென்றவர் அல்ல என்றும், ஊரில் ஏற்பட்ட சண்டையை விலக்குவதற்காக மட்டுமே சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
