மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் ஓதுவார்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே காவல்துறையினர் சிறைபிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று (செப்டம்பர் 17) நடைபெற்ற நிலையில், கும்பாபிஷேக விழாவில் தமிழ் ஓதுவார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், கருவறைக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி, சேலம் சத்யபாமா தலைமையில் தமிழ் ஓதுவார்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “கும்பாபிஷேக விழாவில் தமிழ் ஓதுவார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. தமிழ் ஓதுவார்களைக் கருவறைக்குக்ள் அனுமதிக்காமல், அமைச்சர் சார்ந்த பிராமண சமூக அர்ச்சகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ திட்டத்தின்கீழ் தேர்வான அர்ச்சகர்களை அனுமதிக்கவில்லை. தமிழ் ஓதுவார்களை ஓரம் கட்டிவிட்டு, சமஸ்கிருத ஓதுவார்களை மட்டுமே அனுமதிக்கின்றனர்.
அமைச்சர் தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே அனுமதிக்க முயல்கிறார். சமஸ்கிருத ஓதுவார்களுக்கு இணையாகத் தமிழ் ஓதுவார்களும் அனுமதிக்கப்பட வேண்டும். கும்பாபிஷேக விழாவில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ் ஓதுவார்களை அனுமதிப்பது குறித்து இணை ஆணையரும் எதுவும் தெரிவிக்கவில்லை” என்று ஓதுவார்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், “தமிழ் ஓதுவார்கள் யாக பூஜைகள் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு. அரசால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் யாரும் வருத்தம் தெரிவிக்கவில்லை. கலசத்தில் நீரூற்றவும் கருவறைக்குச் செல்லவும் தமிழ் ஓதுவார்களுக்கு அனுமதி உண்டு” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. இன்று காலை தமிழ் ஓதுவார்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அவர்களைப் போலீசார் சிறைபிடித்ததால் அங்குக்கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, “பார்வையாளர்களாகச் சென்று கலசத்தில் தண்ணீர் ஊற்றுவதையாவது பார்க்க அனுமதிக்க வேண்டும்” என்று காவல்துறையினரிடம் தமிழ் ஓதுவார்கள் மன்றாடினர்.
அதற்கு காவலர்கள் அனுமதி மறுக்கவே, கும்பாபிஷேகத்தைப் பார்க்கக் கூடப் போகக் கூடாதா? இது தமிழ்நாடா, என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று ஓதுவார்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு காவலர்கள், “இது தமிழ்நாடுதான்… லட்சக்கணக்கான மக்கள் அங்குப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினர்.
தொடர்ந்து பேசிய ஓதுவார்கள், “அந்த லட்சக்கணக்கான மக்களில் ஒருவராக வெளியிலிருந்து கூடப் பார்க்க அனுமதிக்க முடியாதா? இது சாதிய தீண்டாமையா? நாங்கள் இப்போது அங்குப் போய்க் கோபுரத்தில் தண்ணீரா ஊற்றப் போகிறோம்? இதுதான் காவல்துறையா… முதல்வரே, இதுதான் உங்கள் சட்டமா? தமிழ் வழிபாடு செய்யும் எங்களுக்கு வெளியிலிருந்து பார்க்கக் கூட உரிமை இல்லையா?” எனக்கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்பியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
