தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் நிபந்தனைகளை தளர்த்தி தமிழக அரசு இன்று (அக்டோபட் 7) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை 28.09.2026 அன்று முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
இந்தநிலையில், இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான நிபந்தனைகளை தமிழக அரசு தளர்த்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், ”தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக, அரசாணை (நிலை) எண்.166, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை (P2) நாள் 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின்கீழ் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, பெண்கள் திருமணத்திற்குப் பின்னர் வேறு மாநிலத்தில் வசித்து வந்தாலும், அவரது பெற்றோர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசித்து வரும் நிலையில், பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்ளும் சில நிகழ்வுகள் அரசின் கவனத்திற்கு வந்தன.
இத்தகைய ஒரு நிகழ்வாக, உமா மகேஸ்வரி திருமணமாகி கர்நாடகா, மைசூர் மாவட்டத்தில் உள்ள உதயகிரியில் கணவருடன் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வசித்து வருகின்றனர். பிரசவத்திற்காக தனது பெற்றோர் வசிக்கும் தமிழ்நாட்டிற்கு வந்த உமா மகேஸ்வரி , 17.09.2026 அன்று காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
தற்போது நடைமுறையில் இருக்கும் நிபந்தனைகளின்படி, பிரசவித்த தாயார் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் காரணமாக, ஆரம்பத்தில் இக்குடும்பத்தினர் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் பயனடைய இயலாத நிலை ஏற்பட்டது.
இதனைக் கருத்தில் கொண்டு, அரசு இத்திட்டத்தின் நிபந்தனைகளை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு அரசின் புதிய வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் தாய் தமிழ்நாட்டில் பிறந்து, திருமணமாகி வெளிமாநிலத்திற்கு சென்றிருந்தாலும், அத்தாயின் தாய் தந்தையர் இருவரும் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருந்து, அதற்கான உரிய ஆவண ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், அந்த குழந்தைக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் உடன் வழங்கப்படும்.
அதன்படி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவித்த உமா மகேஸ்வரியின் குழந்தைக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் 07.10.2026 அன்று வட்டார மருத்துவ அலுவலரால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தம் 22.06.2026 முதல் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் பொருந்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
