விண்வெளியில் இருந்து பூமிக்கு வரும் நியூட்ரினோ துகள்களைக் கண்டறியும் ஆய்வில் சாதனை படைத்த விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு 2026-ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2026-ம் ஆண்டுக்கான, உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு பல்வேறு துறை வல்லுநர்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.
அக்டோபர் 5-ம் தேதி மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. கார்ல் டீசெரோத் (Karl Deisseroth), பீட்டர் ஹெகெமன் (Peter Hegemann), ஜார்ஜ் நாகல் (Georg Nagel) ஆகிய மூவருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று (அக்டோபர் 6) இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரான்சிஸ் ஹால்சனுக்கு (Francis Halzen) அறிவிக்கப்பட்டது. பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர்.
தென்துருவத்தில் நியூட்ரினோ துகள்களைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட IceCube ஆய்வகத்தை உருவாக்கியதிலும், நியூட்ரினோ துகள்களைக் கண்டறிந்ததிலும் முக்கிய பங்காற்றியதற்காக பிரான்சிஸ் ஹால்சனுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
தென்துருவம் (South Pole) என்பது பூமியின் மிகத் தெற்குப் பகுதியில், அண்டார்டிகா கண்டத்தில் அமைந்துள்ளது. அங்குதான் IceCube Neutrino Observatory அமைந்துள்ளது. அதன் நியூட்ரினோ கண்டறியும் கருவிகள் அண்டார்டிகாவின் பனிக்கட்டிகளின் அடியில் சுமார் 1.5 முதல் 2.5 கிலோ மீட்டர் ஆழத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
நியூட்ரினோ என்பது மிக மிகச் சிறிய அடிப்படைத் துகள். இதற்கு மின்சுமை கிடையாது; நிறையும் (எடை) மிகக் குறைவு. அதனால் நியூட்ரினோக்கள் நமது உடல், கட்டிடங்கள், மலைகள் ஏன் பூமியையே கூட ஊடுருவிச் செல்ல முடியும். ஒவ்வொரு நொடியும் கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் நமது உடலைக் கடந்து செல்கின்றன; ஆனால் நமக்கு எதுவும் தெரிவதில்லை. இதனால் அவற்றைக் கண்டுபிடிப்பதும் மிகவும் கடினம். அதனால்தான் நியூட்ரினோக்களை ‘பேய் துகள்கள்’ (Ghost Particles) என்றும் அழைக்கிறார்கள்.
சூரியன் உள்ளிட்ட நட்சத்திரங்களிலும், நட்சத்திர வெடிப்புகள் போன்ற விண்வெளி நிகழ்வுகளிலும் நியூட்ரினோக்கள் உருவாகின்றன. அவற்றை ஆய்வு செய்வதன் மூலம் விண்வெளியில் என்ன நடக்கிறது, பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பது குறித்த புதிய தகவல்களை விஞ்ஞானிகள் பெற முடியும்.
நியூட்ரினோ துகள்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். பூமியின் மேற்பரப்பில் விண்வெளியில் இருந்து வரும் பல்வேறு துகள்களும் ஆய்வுக் கருவிகளில் பதிவாகும். இதனால் நியூட்ரினோவை மட்டும் தனியாகக் கண்டறிவதில் சிக்கல் ஏற்படும். அதனால்தான் மலை அல்லது பூமிக்கு அடியில் நியூட்ரினோ ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன. மேலே இருக்கும் பாறைகள் மற்ற துகள்களைத் தடுத்துவிடும். ஆனால் நியூட்ரினோக்கள் பாறைகளையும் ஊடுருவி ஆய்வகத்துக்குள் வந்துவிடும். இதனால் மற்ற துகள்களின் இடையூறை குறைத்து, நியூட்ரினோ துகள்களைத் தனியாகக் கண்டறிந்து ஆய்வு செய்ய முடியும்.
தேனி நியூட்ரினோ ஆய்வகம் என்ன?
இதற்காகவே தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கும், மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் உள்ளது.
அதாவது தேனியில் மலைக்கு அடியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கத் திட்டமிடப்பட்டது போல, அண்டார்டிகாவில் உள்ள தென்துருவத்தில் பனிக்கட்டிகளுக்கு அடியில் IceCube நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட நியூட்ரினோ ஆய்வில் முக்கிய பங்காற்றியதற்காகவே பிரான்சிஸ் ஹால்சனுக்கு தற்போது இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
