போக்சோ வழக்கில் ஜெம் வீரமணியை அக்டோபர் 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் மேலும் சில பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பில் எஸ்ஐடி குழுவிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் வீரமணி மீது புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கிற்காக போக்சோ நீதிமன்ற நீதிபதி பத்மா முன்பு இன்று வீரமணி ஆஜர் படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி பத்மா, ஜெம் வீரமணியை அக்டோபர் 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையே வீரமணியை மேலும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை நாளை நடைபெற உள்ளது.
அதேபோன்று, இன்று (அக்டோபர் 7) சென்னை உயர்நீதிமன்றத்திலும் வீரமணி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.
முன்னாள் காவல் ஆணையர் அருண் தலையீட்டின் காரணமாக, வீரமணி அவரது கூட்டாளியான சாந்தி ஆகியோரது பெயர் புகாரில் குறிப்பிட்டிருந்தும் காவல்துறையினர் சரிவர விசாரிக்காததால், வழுக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வாராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன் இன்று விசாரணைக்கு வந்த போது, வாராகி சார்பில், ‘உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அக்டோபர் 1 மற்றும் 6 ஆம் தேதிகளில் சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு புலனாய்வு குழு சார்பில், ‘வழக்கின் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளது. மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. அடுத்த கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீதிபதி, விசாரணை முறையாக நடந்து வருவதால் சிபிஐ விசாரணை தேவையில்லை. வீரமணி வழக்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா சிறப்பாக விசாரித்து வருகிறார் என்று பாராட்டு தெரிவித்தார்.
காவல்துறை தரப்பில் அடுத்த கட்ட அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கிய நீதிபதி விசாரணையை அக்டோபர் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
