இந்தியாவில் செமிகண்டக்டர்களை தயாரிக்கவும், அசெம்பிள் செய்யவும் இண்டெல் நிறுவனத்துடன் டாடா குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளது.
டாடா குழுமம் அமெரிக்காவின் சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் உடன் இணைந்து இந்தியாவில் செமிகண்டக்டர்களை தயாரிக்கவும், அசெம்பிள் செய்யவும் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவில் உள்ள நுகர்வோர் மற்றும் நிறுவனங்களுக்கான AI PC தீர்வுகளை விரைவாக உருவாக்குவதை இரு நிறுவனங்களும் நோக்கமாகக் கொண்டுள்ளன. 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியா உலகளவில் முதல் ஐந்து சந்தைகளில் ஒன்றாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஃபேப் (Fab) மற்றும் OSAT (Outsourced Semiconductor Assembly and Test) வசதிகளில் இன்டெல் தயாரிப்புகளை உள்ளூர் சந்தைகளுக்காக உற்பத்தி செய்யவும், பேக்கேஜிங் செய்யவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் மேம்பட்ட பேக்கேஜிங் தொழில்நுட்பத்திலும் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படும். இந்தியா முழுவதும் கணினி பயன்பாடு அதிகரித்து வருவதும், AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு வேகமாக வளர்ந்து வருவதும் இந்த ஒப்பந்தத்திற்கு முக்கிய காரணமாகும்.
இன்டெல் நிறுவனத்தின் AI கணினி குறிப்பு வடிவமைப்புகள், டாடா எலக்ட்ரானிக்ஸின் மின்னணு உற்பத்தி சேவைகள் மற்றும் டாடா குழும நிறுவனங்கள் மூலம் இந்திய சந்தையில் கிடைக்கும் பரந்த அணுகல் ஆகியவை இந்த கூட்டாண்மைக்கு வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா குழுமம், குஜராத்தில் உள்ள டோலேராவில் ஒரு சிப் உற்பத்தி ஆலையையும், அசாமில் ஒரு செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் பேக்கேஜிங் ஆலையையும் அமைத்து வருகிறது. இதற்காக மொத்தம் ரூ. 1.18 லட்சம் கோடி முதலீடு செய்யப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் குறித்து இன்டெல் கார்ப்பரேஷன் CEO லிப்-பு டான் கூறுகையில், “உலகின் வேகமாக வளர்ந்து வரும் கணினி சந்தைகளில் ஒன்றில் டாடாவுடன் இணைந்து செயல்படுவது ஒரு மகத்தான வாய்ப்பாக நாங்கள் கருதுகிறோம். இந்தியாவில் கணினி பயன்பாடு அதிகரித்து வருவதும், AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு வேகமாக வளர்ந்து வருவதும் இதற்கு முக்கிய காரணம்” என்று தெரிவித்துள்ளார்.
டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் கூறுகையில், “இன்டெல் உடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மூலோபாய கூட்டணி எங்கள் முயற்சிகளை விரைவுபடுத்தும். நாங்கள் இணைந்து ஒரு விரிவான தொழில்நுட்ப சூழலை உருவாக்குவோம். முன்னணி செமிகண்டக்டர்கள் மற்றும் சிஸ்டம் தீர்வுகளை வழங்குவோம். இதன் மூலம், பெரிய மற்றும் வளர்ந்து வரும் AI வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் தயாராக இருப்போம்,” என்று கூறியுள்ளார்.
செமிகண்டக்டர்கள் என்பவை மின்னணு சாதனங்களின் இதயம் போன்றவை. கணினிகள், ஸ்மார்ட்போன்கள், கார்கள் என நாம் பயன்படுத்தும் பெரும்பாலான சாதனங்களில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. AI PC என்பது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கணினிகளைக் குறிக்கிறது. இவை தகவல்களை வேகமாகப் புரிந்துகொண்டு, சிக்கலான பணிகளை எளிதாகச் செய்யக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
