தமிழகத்தில் டாஸ்மாக் பார் டெண்டர் ஒரு மாதத்தில் வந்துவிடும் எனவும், அதில் உணவகங்களும் நடத்திக் கொள்ளலாம் எனக் கொண்டு வருகிறோம் எனவும் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய கல்விக் கடன் முகாம், பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் கலந்துகொண்டு மாணவர்களுக்குக் கல்விக் கடன்களை வழங்கினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக் பார்களில் உணவகங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.
மதுக் கொள்முதல்: மதுபான நிறுவனங்களிடம் மது வாங்குவதற்கு இவ்வளவு காலமாக அனுமதி கொடுத்தது கடந்த கால ஆட்சியாளர்கள்தான். அதை நிறுத்துவது என்றால் முழுமையாக நிறுத்த வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்து 120 நாட்கள்தான் ஆகியிருக்கின்றன; இன்னும் 1400 நாட்களுக்கு மேல் இருக்கின்றன. இதை மறுசீரமைப்பு செய்வோம், மாற்றங்கள் நிறைய வரும்.
சமமான வாய்ப்பு: திமுக, அதிமுகவினர் நடத்தும் ஆலைகளுக்கு மட்டும் ஆர்டர் கொடுப்பதாகச் சொல்கின்றனர். மொத்தம் 11 நிறுவனங்கள் இருக்கின்றன, அனைவருக்கும் சமமான ஆர்டர்களே கொடுக்கப்பட்டிருக்கின்றன. பழிவாங்கும் நோக்கத்திலோ, காழ்ப்புணர்ச்சியிலோ இந்த அரசு செயல்படவில்லை.
துறையின் நோக்கம்: “டாஸ்மாக் துறையைச் சம்பாதிப்பதற்காகவே கடந்த ஆட்சியாளர்கள் வைத்திருந்தார்கள். டாஸ்மாக் துறை அமைச்சராக இருந்தாலும் சரி, நிர்வாகக் குழுவாக இருந்தாலும் சரி, ‘Money mind’ ஆகவே பார்க்கின்றனர். இவர்கள் நிறைய பணம் வைத்திருப்பார்கள், கேட்டால் கொடுப்பார்கள் என்று எழுதுகின்றனர். இதை முழுமையாக மாற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். மாற்றுவது என்பது தரம் உயர்த்துவது கிடையாது; போதையில்லாத் தமிழகத்தை உருவாக்குவதுதான் எங்களின் இலக்கு.
FL2 பார்கள் மீது நடவடிக்கை: “கோவையில் FL2 பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. FL2 பார் மீது நடவடிக்கை என்றால் அவர்களை முதலில் 30 நாட்கள், 60 நாட்கள் என சஸ்பெண்ட் செய்து விடுவார்கள்; அதன்பின் பார்களைத் திறந்து விடுவார்கள். மீண்டும் அங்கு விதிமுறைகள் மீறப்பட்டால்தான் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். FL2 பார்களைச் சம்பாதிக்கவே கொண்டு வந்திருக்கின்றனர். FL1 அரசு மதுபானக் கடைகளை முறைப்படுத்திய பின்னர், அடுத்தகட்டமாக FL2 மீதுதான் எனது பார்வை இருக்கும். ஆனால், இப்போது என்னுடைய கையில் அதிகாரம் இருக்கிறது. தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் இருக்கும்போதே இதைச் சரிசெய்து விடுவோம்.
பார்களில் உணவகங்கள்: டாஸ்மாக் பார்களில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவது குறித்த கேள்விக்கு, ‘டாஸ்மாக் பார் டெண்டர் ஒரு மாதத்தில் வந்துவிடும். அதில் உணவகங்களும் நடத்திக் கொள்ளலாம் எனக் கொண்டு வருகிறோம். அப்போதுதான் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளை வைத்து ஆய்வுகளும் நடவடிக்கைகளும் எடுக்க முடியும். அப்போது தரமற்ற உணவுப் பொருட்களை மதுக்கூடத்தில் விற்பது சரியாகிவிடும்’ என்று தெரிவித்தார்.
மேலும், விரைவில் தமிழக முதல்வர் கோவைக்கு வருகை தருவார் என்றும் அவர் கூறினார்.
