தூத்துக்குடி அருகே அதிர்ச்சி : பேருந்தில் பள்ளி சென்ற 11-ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு!

Published On:

| By Selvam

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 11-ஆம் வகுப்பு மாணவனை மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் இன்று (மார்ச் 10) வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. Srivaikuntam student attacked bus

தூத்துக்குடி மாவட்டம் அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பொதுத்தேர்வு எழுதுவதற்காக மாணவர் தேவேந்திரன் இன்று அரியநாயகிபுரத்தில் இருந்து அரசு பேருந்தில் நெல்லை நோக்கி பயணித்துள்ளார்.

இந்த பேருந்து ஸ்ரீவைகுண்டம் அருகே கெட்டியம்மாள் புரம் அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் பேருந்தை வழிமறித்துள்ளனர். தொடர்ந்து பேருந்துக்குள் நுழைந்த அந்த மூன்று பேரும் மாணவன் தேவேந்திரனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதனால் வலி தாங்க முடியாமல் மாணவன் துடித்தார். மாணவனை வெட்டிவிட்டு மூன்று பேரும் தப்பியோடியுள்ளனர். உடனடியாக மாணவன் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக தற்போது நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், கபடி விளையாட்டில் ஏற்பட்ட மோதல் காரணமாக மாணவன் வெட்டப்பட்டதாக தெரிகிறது. சம்பவ இடத்திற்கு ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் சென்று விசாரணை நடத்தி வருகிறார். மாணவனை வெட்டிவிட்டு தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த 2023-ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மாணவன் சின்னத்துரையை அவனுடைய வகுப்பை சேர்ந்த சக மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், பொதுத்தேர்வு நடைபெறும் சூழலில், மாணவர் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. Srivaikuntam student attacked bus

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share