நூல் மதிப்புரை Confession of a convict
நா.மணி Confession of a convict
ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர்களையும் கல்வியாளர்களையும் இணைத்து ஒரு புத்தக வாசிப்பு முகாமை நடத்தினோம். பரிசோதனை முயற்சியாக அமைந்த அந்த வாசிப்பு முகாமின் வாயிலாக, திட்டமிட்ட வாசிப்புச் செயல் முறைகள் மூலம் ஆசிரியர்களை ஒருமுகப்படுத்தி, அவர்களுக்கு வாசிப்பின் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்த முடியும் என்பதையும், குறிப்பாக, கல்வி சார் நூல்களை வாசிக்கத் தூண்ட இயலும் என்பதையும்; அவர்களுக்கிடையே குறிப்பிட்ட பொருள் குறித்த தீவிர விவாதத்தை உருவாக்க முடியும் என்பதையும் அறிந்துகொண்டோம். Confession of a convict
மாநில வாசிப்பு முகாம்களின் தோற்றம் Confession of a convict
மாவட்ட அளவில் கிடைத்த இந்த அனுபவத்தை விரிவுபடுத்தி, மாநில அளவில், ஆசிரியர்களை அழைத்து இத்தகைய வாசிப்பு முகாம்களை நடத்துவதென்று முடிவு செய்தோம். இதன் முதல் நிகழ்ச்சிக்கு, மாற்று கல்விக்கான அடிப்படை நூலான பாவ்லோ பிரையிரேவின் “ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான கல்வி முறை” நூல் தேர்வு செய்யப்பட்டது. Confession of a convict
“ஒரு புத்தகத்தை முன்வைத்து, இரண்டு நாள் வாசிப்பு முகாம்” என்ற அறிவிப்போடு, இந்த வாசிப்பு முகாம் பற்றிய செய்தி, ‘புத்தகம் பேசுது’ இதழில் முழு பக்க விளம்பரமாக வெளிவந்தது.
பங்கேற்பவர்கள் 250 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். நூலை வாசித்து விட்டுதான் முகாமிற்கு வரவேண்டும் என்று நிபந்தனைகள் விதித்திருந்தோம். இந்த முகாமிற்கு, முதல் முதலாக பதிவு செய்தது இந்த நூலின் ஆசிரியர், பேராசிரியர் முருகேசன் அய்யா அவர்களே.
நானும் ஓர் கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளி என உணர்ந்த தருணம்
வாசிப்பு முகாமை பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்திருந்தோம். முகாமிற்கு முந்தைய நாள் அய்யா அழைத்தார். Confession of a convict
“அய்யா! நாளை கல்லூரி பணி நாளாக இருப்பதால் முகாமில் பங்கேற்க இயலாது” என்று கூறினார். என் கல்லூரியிலும் நாளை பணி நாள்தான்; நானும் விடுப்பு எடுத்துக் கொண்டுதான் வருகிறேன்; நீங்கள்தான் முதல் முதலில் இந்த முகாமிற்கு பதிவு செய்தீர்கள். நீங்களே வரவில்லை என்றால் எப்படி? உங்கள் வருகையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்” என்றேன். Confession of a convict
இரவு எட்டு மணி வாக்கில் அவரே அழைத்து முகாமிற்கு வந்துவிடுவதாகக் கூறினார். அவரின் வருகைக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். . Confession of a convict
ஆத்தூரில் இருந்து அய்யா தனியாகவே பயணம் செய்து முகாமிற்கு வந்துவிட்டார். முகாம் தொடங்கி அரை மணி நேரத்திற்கு மேலான பிறகு முகாம் நடந்த பள்ளி வளாகப் பணியாளர், அய்யாவை அழைத்து வந்து அரங்கில் அமரவைத்தார். அப்பொழுது நான் மேடையிலிருந்தேன். அவர்தான் முருகேசனையா என்பது எனக்குத் தெரியவில்லை. ஒரு பார்வை மாற்றுத்திறனாளர் இங்கு வந்திருக்கிறாரே? அவர் ஏன் இங்கு வந்தார்? வேறு எங்கோ போவதற்கு பதிலாக இடம் தெரியாமல் இங்கு வந்திருப்பாரோ? என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். Confession of a convict
பங்கேற்பாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டபோதுதான், அவர் முருகேசனையா என்பது தெரிந்தது. உடனே நான் திடுக்கிட்டேன். இவர் பார்வை மாற்றுத்திறனாளர் என்பதால் வாசிப்பு முகாமிற்கு வந்திருக்க மாட்டார் என, எப்படி முடிவு செய்தேன்? என்ற குற்ற உணர்ச்சியும் வருத்தமும் மேலிட்டது. அந்த உணர்ச்சியின் உள்ளீட்டை இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகுதான் முழுமையாக உணர்கிறேன். இந்த நூல் விரல் நீட்டும் கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகளில் நானும் ஒருவன்தான் என்பதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்வதைத் தவிரவேறு வழியில்லை.
பார்வை திறனுள்ளோர்களைக் காட்டிலும் சிறந்த வாசிப்பு
முகாமிற்கு வந்தவர்கள், நூலை வாசித்து விட்டு வர வேண்டும்” என்ற நம் அறைகூவலை பொருட்படுத்தவில்லை. 90 விழுக்காடு பங்கேற்பாளர்கள் நூலை வாசிக்கவில்லை. வந்திருந்த 28 பேரையும் நான்கு குழுக்களாக பிரித்து, நூலில் உள்ள நான்கு அத்தியாயங்களையும் ஒரு குழு ஒரு அத்தியாயம் என்ற வகையில் ஒரு நாள் முழுவதும் படித்துக் கருத்துகளைத் தொகுத்துக்கொண்டு, அடுத்த நாள் ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் அந்தக் கருத்துகளை அரங்கில் எடுத்துரைக்க வேண்டுமென்று அறிவித்தோம்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி தொடங்கியதும், பங்கேற்பாளர்கள் எல்லோரும் நூலைப் படிக்கவே முடியவில்லை. படித்தாலும் புரியவில்லை” என புலம்பித் தீர்த்தனர். 28 பேரில் முருகேசன் அய்யா மட்டுமே, முழுமையாக படித்துவிட்டு வந்து தொகுப்புரை ஆற்றினார். அந்த நூலின் ஆழமான உட்பொருளை எல்லோருக்கும் புரியும்படி, விளக்கிக் கூறினார்.
முகாம் முடிந்ததும் மாலை பவானிசாகர் அணையைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம். அய்யா அவரை அழைத்துச் சென்றவரிடம் அங்குள்ள காட்சிகளைப் பற்றி கேட்டுக்கொண்டே வந்தார். நண்பர்கள் அங்கங்கே இருந்த அணைக்கட்டுப் பற்றிய குறிப்புகளைக்கூட அய்யாவுக்குப் படித்துக்காட்டினார்கள். சுற்றுலா குறித்து அய்யா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். சுற்றுலாவிலும் அய்யாவின் பங்கேற்பு யாருக்கும் சளைத்ததல்ல என்பதை நிரூபித்தார். அய்யாவை பற்றிய அந்த பிரமிப்பு, இன்று வரை அகலவில்லை.
வாசிப்பு முகாம்களில் தொடர் பங்கேற்பு
இந்த வாசிப்பு முகாம்கள் நான்கு மாதங்களுக்கு ஒன்று என்ற வகையில் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு இருபது முகாம்கள் நடைபெற்றன. இவற்றில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்களின் படிப்பு ஆர்வத்தையும் நட்புறவையும் வளர்த்துக்கொண்டனர். எல்லா முகாம்களிலும் தவறாமல் தொடர்ச்சியாக பங்கு பெற்ற ஒரே நபர் பேராசிரியர் முருகேசன்தான். முகாமில் கிடைத்த படிப்பினைகளை அவர் நடைமுறைப்படுத்தினார். என்னுடைய ‘பள்ளிக்கூட தேர்தல்’ நூலின் தாக்கத்தால், அவரும் தன் மாணவர்களிடம் ஆண்டுதோறும் பின்னூட்டம் வாங்கினார். அவற்றை வாசிப்பு முகாமிற்கே கொண்டு வந்தார். அவருடைய நூலகத்தில் 4000 நூல்கள் இடம்பெற, இந்த வாசிப்பு முகாம்களும் கணிசமாக பங்காற்றின. Confession of a convict
வாசிப்பு முகாம்களின் தலைமை ஒருங்கிணைப்பு
2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், நான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவராக பொறுப்பேற்றேன். அப்பொழுது அய்யா தானே முன்வந்து வாசிப்பு முகாம்களின் மாநில ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்றார். சிறப்பாக அவற்றை ஒருங்கிணைத்தார்.
பல முகாம்களில் அவருடைய குடும்பத்தாரும் பங்கேற்றனர். மேலும் அவர் பல ஆசிரிய நண்பர்களையும் அழைத்து வந்தார். பேராசிரியர்கள் வரதராஜன், ரமேஷ், தமிழாசிரியர்கள் தனக்கோட்டி, ராமன், பாரதிராஜா ஆகியோர் பல முகாம்களில் பங்கேற்றனர். அய்யாவோடு முகாமில் பங்குபெற்ற நண்பர்களின் செயல் திறனையும் அறிவுக்கூர்மையையும் பார்த்துவிட்டு, ‘புதிய ஆசிரியன்’ மாத இதழில், யார் மாற்றுத்திறனாளி? என்ற கட்டுரையை எழுதினேன். அது அட்டைப்பட கட்டுரையாக வெளிவந்து, பலரின் கவனத்தையும் பெற்றது.
அந்தக் கட்டுரையில் ஒருவர், உடல் திறன் குறைபாட்டுடன் இருந்தாலும், அவர் செயல் துடிப்புள்ளவராக இருந்தால் அவரை எப்படி மாற்றுத்திறனாளி என்று சொல்ல முடியும்? என்று கேட்டிருந்தேன். அதே நேரத்தில், அனைத்து உடற்கூறுகளும் நன்றாக இருந்தும், பார்வை திறன், கல்வி அறிவு எல்லாம் இருந்தும், வாசிப்பை துறந்த ஆசிரியர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இவர்களை, ‘மாற்றுத்திறனாளி’ இல்லை என்று எப்படி சொல்வது? என்றும் கேட்டிருந்தேன்.

பார்வை திறனற்றோர் பாடுகளின் ஆவணம்
முருகேசன், “கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள்” என்ற இந்த நூலின் வழியாக, ஒட்டுமொத்த பார்வை மாற்றுத் திறனாளர்களின் பாடுகளை, வலியோடும் வேதனையோடும் சீற்றத்தோடும் சொல்லியிருக்கிறார். தொடர்ச்சியாக மீதமிருக்கும் துயரங்களை அடுத்தடுத்த நூல்களில் சொல்லக் காத்திருக்கிறார். Confession of a convict
நூல் முழுவதும், அய்யா நமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை அளித்திருக்கிறார். "நீங்கள் எங்களை கடுகளவும் புரிந்து கொள்ளவில்லை" என்பதுதான் நூல் முழுவதிலும் அவர் நம்மிடம் நேருக்கு நேராகச் சொல்ல வரும் செய்தி. பேராசிரியர் முருகேசன், சொற்களை, அளந்து அளந்து, பேசக்கூடியவர். ஒரு சொல்லின், நீள அகலம் அறிந்தவர்.
அதன் வீச்சு தெரிந்து, சொற்களை தேர்வு செய்து பயன்படுத்துபவர். அதனால்தான் நூலில் அவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் நம்மை அம்புகளாகத் தைக்கின்றன. அவர் இந்த நூலின் 15 அத்தியாயங்களிலும், அப்படியான தேர்வு செய்த சொற்களின் வழியாக நம் மனதுக்குள் ஊடறுத்து செல்கிறார்.
பார்வை மாற்றுத்திறனாளர்களுடனான நமது புரிதலின்மையையும் புரிந்தும் புரியாதது போல் நடந்து அவர்களை ரணமாக்குவதையும் அதனால் அவர்களுக்கு நேரும் துயரங்களையும் படிக்க, படிக்க, நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கிறது.
நூலின் ஒவ்வொரு சொல்லும் அடிக்கோடு இட வேண்டியவை
நூலை வாசிக்கத் தொடங்கியதும், முக்கியமானவற்றில் அடிக்கோடிடலாம் என்று நினைத்தேன். ஆனால், அது முடியவில்லை. நூல் முழுவதும் அடிக்கோடு இடப்பட வேண்டியதாகவே இருந்தது.
“பார்வை மாற்றுத் திறனாளர்களின் உலகம் தனித்துவம் ஆனது. அதில் ஒரு எல்லைக்கு மேல் யாராலும் நுழைய முடியாது” என்கிறார். இந்தத் தனித்துவத்தை புரிந்து கொள்ள முடியாமல்தான், பார்வை மாற்றுத்திறனாளர்களுக்குத் தொடர்ச்சியாக தீங்கிழைத்து வருகிறோமோ என்ற கேள்வி முதல் அத்தியாயத்திலேயே தொற்றிக் கொள்கிறது.
அவர்கள், குழந்தைப் பருவம் முதல், இறுதி காலம் வரையிலும், குடும்ப அங்கீகாரத்திற்காகவும் சமூக அங்கீகாரத்திற்காகவும் நடத்தும் போராட்டத்தின் விளைவே இந்த நூல். Confession of a convict
கொடுமைகளின் தொடக்கமே தாய் தந்தையர்
பிறந்த வீட்டில், பெற்ற தாய் தகப்பனில் தொடங்கி, சகோதர, சகோதரிகள், உற்றார், உறவினர்கள் என எல்லோரும் எப்படி பார்வை மாற்று திறனாளிகளை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்பதை உயிரோட்டமாகப் புலப்படுத்துகிறது நூல்.
தங்களுக்கு, பார்வை குறைபாட்டோடு ஒரு குழந்தை இருக்கிறது என்பதைக் கூட வெளியே சொல்ல மறுக்கும் பெற்றோருக்கும் கல்வி, வேலை, கை நிறைய சம்பளம் என எல்லாம் இருந்தும், பார்வை உள்ள ஊதாரி பிள்ளைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, பார்வை மாற்றுத்திறனாளிக்கு கொடுக்காத பெற்றோருக்கும் பார்வை திறனற்ற குழந்தைகளுக்குச் சொத்து வழங்க மறுக்கும் பெற்றோருக்கும்தான் நாங்கள் பிள்ளைகளாக வளர வேண்டியிருக்கிறது என்ற ஆதங்கத்தை அவருடைய எழுத்துச் சீற்றம் முழு வீச்சுடன் நமக்குள் இறக்குகிறது. Confession of a convict
பார்வை மாற்றுத்திறன் குழந்தைகள் மீதான அலட்சியம்
ஏழை, பணக்காரன், படித்தவர், அறிவு ஜீவிகள், தொழிலதிபர் என்றெல்லாம் எந்த வேறுபாடும் இன்றி எல்லோரிடமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், பணக்கார வீட்டில்தான் இந்தப் பாகுபாடு மிக அதிகம் என்பதை அறியும்போது வசதி படைத்தவர்களின் குடும்பங்களில் மானுட இருப்பு படும்பாடு இங்கும் அம்பலமாவதை உணர்கிறோம்.
சிறு வயது முதலே, பார்வை மாற்று திறன் குழந்தைகள், ஒவ்வொரு இடத்திலும் எப்படி எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை படிக்கும் போது, பார்வை மாற்றுத்திறனாளர்கள் மிகுந்த நெஞ்சுரம் உடையவர்கள்; இல்லையெனில், அவர்களால் இந்த வேதனைகளை தாங்கிக் கொள்ள முடியாது என்ற எண்ணம் எழுகிறது.
அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்தக் குடும்பத்தில் எப்படி எப்படியெல்லாம் பாகுபடுத்தி நடத்தப்படுகின்றனர் என்பதைப் பட்டியலிட்டாலே , அது ஒவ்வொன்றும் ஒரு தனி நூலாக நீளும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. குடும்ப உறவுகளிலும் சமூகத் தொடர்புகளிலும் காட்டப்படும் பாகுபாடுகள், படிப்பவர்களின் நெஞ்சை ரணமாக்குகின்றன. உறவினர்கள் வீடுகளில் இவர்களுக்கு நேரும் அனுபவங்கள் வித்தியாசமானவை.
இவர்களுக்கு உறவினர்களின் வீடுகள் ஒரு இனம்புரியாத சிறைக்கூடங்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஒரே இடத்தில் உட்கார வைக்கப்பட்டிருப்பதை வேறு எப்படி சொல்ல முடியும்? இதைச் சாப்பிடு; அதைச் சாப்பிடு; என்றுசொல்லிக் கொண்டிருப்பார்களே தவிர, சாப்பிட்டால் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டுமே, அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ற சிந்தனை துளியும் இருக்காது.
இவர்கள் வளர்ந்து, பெரியோர்கள் ஆகிவிட்டால் ,சொந்த பந்தத்தில் முறைப்பெண் இருந்து விட்டால் போச்சு. இவர்கள் வீட்டுக்கே வர அஞ்சுவார்கள். பெண் கேட்டு விடுவார்களோ என்று பயப்படுவார்கள். "நாங்கள், ஆயிரம் பேர் கூடியுள்ள இடத்தில் இருந்தாலும் எப்பொழுதும் தனிமையில் இருப்பதாகவே உணர்கிறோம்" என்று எழுதியிருப்பதைப் படிக்கும்போது சமூக அவலத்திற்கு இப்படியும் ஒரு உச்சம் இருக்கிறதோ என்று கேட்கத் தோன்றுகிறது.
பார்வை மாற்றுத் திறனாளிகளின் மண இல்லற உறவுகள்
மண உறவுச் சவால்களும் மதிப்பு மிக்க இல்லறமும் என்ற கட்டுரையில் பல புதிய விடயங்கள் தெரிகின்றன. அவர்கள் வாழும் அதே உலகில்தானே நாமும் வாழ்கிறோம். நமக்கு எப்படி இதுவெல்லாம் புரியாமல் போனது என்ற கேள்வி நினைவைக் குடைகிறது.
ஒரு பார்வை மாற்றுத்திறனாளர், பார்வை உள்ள ஒருவரையே திருமணம் செய்துகொண்டு வாழ்வது நடைமுறைக்குப் பொருந்தக்கூடிய, நன்மை மிக்கச் செயல் என்ற பொது புத்தியின் வாதத்தைத் தவிடு பொடியாக்குகிறது இந்த நூல். Confession of a convict
ஒரு பார்வை மாற்றுத்திறனாளர் தன்னைப் போன்ற ஒருவரையே வாழ்க்கைத் துணையாகத் தேர்வு செய்ய விரும்புவதற்கான காரணங்களை ஒவ்வொன்றாகப் படிக்கப் படிக்க வியப்பும் உவகையும் மேலிடுகின்றன. இதன் மறுதலையாக, பேராசிரியர் ரமேஷ் போன்றவர்கள் பார்வை திறனுள்ள பெண்களை காதல் திருமணம் செய்து கொண்டதையும் அவர்களின் அனுபவங்களையும் நூல் சுவைபட விளக்குகிறது. பார்வை மாற்றுத்திறனாளர்களின் திருமண வாழ்வில் சாதி கடந்த கலப்பு மணப் பெருக்கம், சாதி ஒழிப்பிற்கான புதிய வாயில்களைத் திறக்கிறது. Confession of a convict
குழந்தை வளர்ப்பும் மாற்றுத் திறனாளர்களும்
பார்வை மாற்றுத்திறனாளர்களின் குழந்தை வளர்ப்புத் திறன்களை நேரில் பார்த்தாலேயன்றி நம்ப முடியாது. ‘குழந்தை வளர்ப்பு ஒரு அனிச்சைச் செயல்; அதற்குப் பார்வை புலன் என்பதெல்லாம் இரண்டாம் பச்சம்தான்.’ என்ற தொடரின் பொருளை உள்ளூர உணர்ந்துவிட்டால் இவர்களின் உறவில் நாமும் கலந்துவிடலாம்.
பார்வை மாற்றுத்திறனாளர்கள் அன்றாட பயணங்களில் படும் துயரங்களும் அவமானங்களும் ஆதங்கங்களும் சொல்லி மாளாதவை. இவை எல்லாம் வெளி உலகத்திற்கு வரவே இல்லை. இவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காகவே பேராசிரியர் முருகேசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். Confession of a convict
துயர் மிகு பயணங்கள் Confession of a convict
பயணங்களில் அவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; இதற்குப் பணமெல்லாம் தேவையில்லை. விழிப்புணர்வு இருந்தாலே போதும். அவர்களின் ஆசிரியப் பணி அனுபவங்களையும் அதில் படும் துன்பங்களையும் ஒரு அத்தியாயத்தில் விரிவாக ஆராய்கிறார்.”பார்வை மாற்றுத்திறன் ஆசிரியர்களைப் பார்த்தால் மட்டும் ஆறாவது அறிவு ஏன் வேலை செய்ய மறுக்கிறது” என்ற கேள்வி நல்ல சாட்டையடியாக விழுகிறது. Confession of a convict
இந்தச் சமுதாயம், இன்று எங்களுக்கே இவ்வளவு துன்பங்களையும் துயரங்களையும் தருகிறது எனில், எங்களின் மூத்த தலைமுறை எவ்வளவு இன்னல்களைச் சந்தித்திருக்கும் என்று தானும் சிந்தித்து நம்மையும் சிந்திக்க வைக்கிறார் முருகேசன்.
பார்வை மாற்று ஆசிரியர்கள் வகுப்பறை தயாரிப்புகள்
நான் பார்த்த, தெரிந்த, பார்வை மாற்று திறன் ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த திறன் மிக்கவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், உடன் பணியாற்றும் ஆசிரியர்களே அவர்களைக் குறைத்து எடை போட்டு, அதிகம் புரிந்து கொள்ளாமல் இருப்பதைத்தான் எப்படி தணிப்பதென்று தெரியவில்லை. Confession of a convict
பார்வை மாற்றுத்திறன் ஆசிரியர்கள் கையாளும் கற்றல் கற்பித்தல் முறைகளையும் , கடைப்பிடிக்கும் அணுகுமுறைகளையும், பாடத்திட்ட தயாரிப்புகளையும் பட்டியலிடும் போது குடிமைச் சமூகத்தின் மீது மனம் கொதிக்கிறது. ‘எங்களில் பெரும்பாலோர் தொடக்க வகுப்புகளுக்கும் நடுநிலை வகுப்புகளுக்கும் ஆசிரியர்களாக இருப்பதில்லை. எனவே மாணவர்களுக்கு எழுத்தைச் சொல்லித் தரும் பணி எங்களுக்குக் குறைவு.
ஆனாலும் அப்படி ஒரு தேவை வந்தால் அதை எப்படி சமாளிப்பது என்று எங்களிடம் பல உத்திகள் உள்ளன. மாணவர்களுக்கு எழுத்தைக் கற்பிக்கும் முன் அவருக்குச் சொற்களைக் கற்பிக்க வேண்டும். அச்சொற்கள் அவருக்கு மிகவும் பழக்கமானவையாக இருக்க வேண்டும். எழுத்துகளை அரிச்சுவடி வரிசையில் அல்லாமல், முதலில் பகரம் டகரம் போன்ற எளிமையான வரி வடிவ எழுத்துகளைக் கற்பிக்க வேண்டும். என்பது போன்ற அறிவொளி இயக்க உத்திகளைக் கடைபிடிக்கிறோம்.
அதற்கு மரத்தாலும் நெகிழியாலு்ம் ஆன எழுத்து அச்சுகளைப் பயன்படுத்துகிறோம். எழுத்துகளைக் கற்க மிகவும் கடினப்படுவோருக்கு எழுத்தைப் புரியவைக்க ஒரு செயல்பாடு இருக்கிறது. எழுத்து வடிவில் கயிறு கட்டி அதில் மாணவர்களை நடக்கச் செய்தல். இதைக்கூட சிலர் பயன்படுத்தியிருக்கிறோம். Confession of a convict
மாணவர்களுக்கிடையே குழுக்களை உருவாக்கி, ஒருவர் எழுதுவதை மற்றவர் சரிபார்க்கச் செய்கிறோம்.’ என்று பார்வை மாற்றுத்திறன் ஆசிரியர்களின் கற்பித்தல் ஈடுபாடு குறித்து எழுதியிருப்பதைப் படிக்கும்போது, எந்தத் தயாரிப்புமின்றி வகுப்புக்குச் சென்று வரும் சகல திறன் கொண்ட பேராசிரியர்களை இவர்களோடு ஒப்பிடாமல் இருக்க இயலவில்லை.
பொதுவாக ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தால், அந்த வழியாக நடக்கும் பிற ஆசிரியர்கள் வகுப்பைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். பார்வை மாற்றுத்திறன் பேராசிரியர்களின் வகுப்பை மட்டும் கண்காணிப்பதும் அந்த ஆசிரியர்களுக்குத் தெரியாமலே மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் எந்தச் சட்டத்தின் கீழ் நடக்கின்றன என்று தெரியவில்லை.
அதிகாரத்தின் அதிகாரம் Confession of a convict
’அதிகாரத்தின் அதிகாரம்’ என்ற அத்தியாயத்தில் அதிகாரம் என்பதை பேராசிரியர் முருகேசன் வரையறை செய்திருப்பது அற்புதமானது. இப்படி ஓர் தெளிவான இலக்கணத்தை இதுவரை வேறு யாரேனும் படைத்திருப்பார்களா? எனத் தெரியவில்லை.”அதிகாரத்திற்கு கண் தெரியாது. காது கேட்காது. மனமில்லை. அறிவு இல்லை. அது திருடும். பொய் சொல்லும். ஏமாற்றும். நம்பிக்கையை வீணாக்கும். நன்றாக நடிக்கும்” என்கிறார் அவர். அதிகாரத்திலிருப்பவர்களின் நடைமுறைச் செயல்பாடுகளை உற்று நோக்கினால் இந்த வரையறையின் ஒவ்வொரு கூறும் எவ்வளவு பொருத்தமாக உள்ளது என்பதை அறியலாம். இந்த அதிகாரம், அய்யா போன்றவர்களை, எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதை இந்த அத்தியாயத்தில் விளக்கி உள்ளார்.
நூலகத்தில் நுழையவிட மறுக்கும் அராஜகம்
பேராசிரியர் முருகேசனின் கல்லூரிப் பணி தொடர்பான பல்நிலைச் செயல்பாடுகள் இவரைப் போன்றோரின் பணி ஈடுபாட்டிற்கு கட்டியம் கூறுகின்றன. ஆனால், “நீங்கெல்லாம் எப்படி படிப்பீங்க? நீங்க நூலகத்தில் எதற்கு உறுப்பினரா ஆகணும்? இவரை ஏன் இழுத்துகிட்டு வந்தீங்க?” என்ற கேள்விகள், எப்படி அவர்களை கொத்தி குதறுகின்றன என்பது உரத்து ஒலிக்கிறது. அவர் இந்த அத்தியாயத்தை, ‘பார்வை அதிகாரம் என்பது பார்ப்பன அதிகாரத்தை காட்டிலும் கொடியது.” என்று முடிக்கிறார்.
பார்வை திறன் இறுமாப்பு Confession of a convict
வங்கிக் கணக்கு தொடங்குதல், பணம் எடுத்தல், பணத்தை சேமித்தல், ஏடிஎம் கார்டு பெறுதல் என, ஒவ்வொரு வங்கி சேவைக்கும் இவர்கள் நடத்திய போராட்டங்களையும் பட்ட துயரங்களையும் படிக்கும்போது மனம் பாராங்கல்லை சுமப்பது போல் இருக்கிறது. பார்வை மாற்றுத்திறனாளராகப் பிறந்து, வளர்ந்து, படித்து, வேலைக்கு வந்து, மற்றவர்களுக்கு நிகராக அல்லது அவர்களைக் காட்டிலும் கூடுதலாக திறன்கள் பெற்று பணியாற்றும் போதிலும் சமூக நிராகரிப்புத் தொடர்வதை “இருப்பு மறுப்பும் இருத்தலின் உயிர்ப்பும்” என்ற தலைப்பில் பதிவு செய்கிறார்.
இந்த மறுத்தல் எப்படி தொடங்குகிறது? “அய்யா அப்படியே உட்காருங்க. எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்.” என்று அன்பு பொழியும் சொற்கள் வழியாக துவங்குகிறது. பணியிடத்தில் தங்களை ஒப்புக்கு கூட மதித்து ஒரு சொல் சொல்வாரில்லை. எவ்வளவு வேலை செய்திருந்தாலும் அதற்கு அங்கீகாரம் கிடையாது. பணியில் மூத்தவராக இருந்தாலும் உரிய மரியாதை கிடைப்பதில்லை என்றெல்லாம் பாகுபாடுகளின் போக்குகளை கவனப்படுத்துகிறது இந்த அத்தியாயம்.
குறைத்து மதிப்பிடுதலும் குன்றாத திறன்களும்
இது ஓர் அத்தியாயத்தின் தலைப்பு . இதில் குடிமைச் சமூகம் கற்றுக்கொள்ள வேண்டிய, புரிந்து கொள்ள வேண்டிய ஏராளமான விசயங்களைச் சொல்கிறார். “எங்களுக்குப் பார்வை புலன் மட்டும்தான் இல்லை எங்கள் செவிப்புலனில் எந்தக் குறையும் கிடையாது. ஆனால், உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் சென்றாலும் கூட, ‘இவருக்கு என்னாச்சு?’ என்று எங்களுடன் வரும் குழந்தையைத்தான் மருத்துவர் கேட்கிறார். எங்களிடம் கேட்பதில்லை என்று கூறுகிறார். எங்கள் நண்பர்கள் பல்வேறு வேலைகளைச் செய்ய பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ஆனால் இந்தச் சமுதாயம் எந்த வேலையையும் முழு மனத்துடன் எங்களிடம் ஒப்படைப்பதில்லை என்கிறார்.
வேண்டுவது தேவைகள், கருணையல்ல!
“உதவாத உதவிகளும் உண்மையான தேவைகளும்” என்ற அத்தியாயத்தில், அய்யா சொல்லும் செய்திகள் அவர்களுக்கு நேரும் அவமானத்தின் உச்சங்களாக உள்ளன. வீட்டை விட்டு வெளியே வந்தது முதல், வீடு திரும்பும் வரை இவர்களைத் துரத்தும் துயரங்கள் சொல்லி மாளாதவை . இதனை நானும் நேரில் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறேன். சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கல்வி உபகுழு மாநாடு ஒன்றுக்கு, அய்யா பத்துக்கும் மேற்பட்ட தனது நண்பர்களை அழைத்து வந்திருந்தார். எல்லோரும் பள்ளி கல்லூரி பேராசிரியர்கள். என் போன்ற சிலரும் உடன் இருந்தோம்.
நாங்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே, மிக எளிய மனிதர் ஒருவர் அருகே வந்தார். அய்யா கையில் 10 ரூபாய் நோட்டை திணித்தார். நான் குழப்பமடைந்து அவரைத் திட்டப் போனேன். ’இதையெல்லாம் நாங்கள் நாள் தோறும் சந்திக்கிறோம் விடுங்கள் போகட்டும்’ என்றார். எனக்கு அப்படி ஒரு நிகழ்ச்சி நேர்ந்திருந்தால் நான் என்னவாக உணர்ந்திருப்பேன் என்று யோசித்தாலே என் மனம் சிந்தனையற்ற வெறுமையாகிவிடுகிறது.
தங்களுக்கு இழைக்கப்படும் அவமானங்களைத் தாங்க முடியாமல் எதிர்த்து குரல் எழுப்பும்போது, அதைக் குடிமைச் சமூகம் எப்படிப் பார்க்கிறது? என்பதை அடுத்ததாக ஆவணப்படுத்துகிறார்.
“குருட்டுப் பயலுக்கு திமிர பாரு?” என்பது தொடங்கி அவர்கள் மீது ஏவப்படும் சொல்லம்புகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். குடிமைச் சமூகம் தெரிந்து கொள்ள வேண்டிய, கற்றுக்கொள்ள வேண்டிய, கடைபிடிக்க வேண்டிய மற்றுமொரு விஷயம், பார்வை மாற்றுத்திறனாளர்கள் நடத்திய போராட்டங்கள். Confession of a convict
அப்போராட்டங்களின் வடிவங்கள், உத்திகள், நினைத்ததைச் சாதிக்கும் தீரம், காவல்துறை கொடூரங்களை எதிர்கொள்ளும் முறை என எல்லாவற்றையும் பொதுச்சமூகம் அறிந்து தங்கள் உரிமைகளுக்கான போராட்டங்களில் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
பார்வை மாற்றுத் திறனாளிகளின் மீதான கலை இலக்கியப் பார்வை
கலை இலக்கியத்தில் எப்படி உண்மைக்கு புறம்பாக பார்வை திறனற்றவர்களை சித்தரிக்கிறார்கள், என்பதை ஆழமாக மதிப்பீடு செய்கிறார். “பேராசிரியர் முருகேசன் போன்றவர்கள் மாற்றுத்திறனாளிகள் அல்ல, சமுதாயத்தை மாற்றும் திறன் படைத்தவர்கள்” என்று அவரது நண்பர் கூறுவது 100% சரியே.
பார்வை மாற்றுத்திறனாளர்கள் மீது இவ்வளவு வன்கொடுமைகள் ஏவப்பட்டாலும் அவர்கள் அவற்றை அனுபவித்து வந்தாலும், அவர்களின் மீதான புரிதல் இன்மை நீடித்தாலும் பேராசிரியர் முருகேசன் நூலை மிகுந்த நம்பிக்கையோடே முடிக்கிறார். ஆனால், இந்த நம்பிக்கை இன்னும் நூலாகவே நீடிக்கிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டத் தயங்கவில்லை.
பார்வை மாற்றுத் திறனாளர்கள் வேண்டுவது
இறுதியாக, ஒன்றைச் சொல்லுகிறார். ” ‘பார்வை திறன் இல்லையே?’ என்ற குறை உங்களுக்கு எப்பொழுது நேர்ந்திருக்கிறது என்று அய்யாவிடம் அவருடைய நண்பர்கள் கேட்கிறார்கள். பார்வை திறன் இருந்திருந்தால் இன்னும் பல நூல்களைப் படித்திருக்கலாம் என்ற ஆர்வம் உண்டே தவிர மற்றபடி வருத்தம் ஏதும் இல்லை ” என்று அதற்கு மறுமொழி கூறியிருக்கிறார்.
இந்த நூல் மதிப்புரையை நிறைவு செய்யும் போது, மூன்று விஷயங்கள் மனதில் படுகின்றன. ஒன்று, இந்த நூல் வெளிவந்தவுடன் பரவலாக பல பகுதி மக்களிடையே தீவிரப் பேசு பொருளாக மாறும் என்பது. இரண்டாவது, பார்வை மாற்று திறனாளர்களின் வாழ்வியல் சங்கடங்களும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளும் பெரும் விவாதப் பொருளாக மாறும். மூன்றாவதாகப் பார்வை மாற்றுத்திறனாளர்கள் திறன் மேம்பாட்டுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்திலிருந்தே பல்முனைப்புக் கொண்ட பயிற்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வழிவகை உருவாகும். Confession of a convict
கட்டுரையாளர்

பேரா. நா.மணி
கல்வி குறித்தும் பொருளாதாரம் குறித்தும் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். வாசிப்பின் ஆழ அகலங்கள் அதிகரிக்க “மாற்றுக் கல்விக்கான வாசிப்பு முகாம்களை” வடிவமைப்பின் முன்னோடி. மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.