பள்ளிக்கு பொதுத்தேர்வு எழுதச் சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பேருந்தில் இருந்து இறக்கிவிட்டு மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. caste attack srivaikundam on dalit student
தென் தமிழகத்தில் சாதி ரீதியான கொடூர தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் அருகேயுள்ள அரியநாதபுரத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவர் இன்று (மார்ச் 10) காலை பொதுத்தேர்வு எழுத தனியார் பேருந்தில் பாளையங்கோட்டையில் உள்ள தனது பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்பேருந்து கெட்டியம்மாள்புரம் பகுதியில் வந்தபோது, அதனை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் மாணவனை கீழே இறங்கச் சொல்லி சரமாரியாக வெட்டியுள்ளது.
இதனைக்கண்டு பதறிய பேருந்து பயணிகள் கூச்சலிட்ட நிலையில், அந்த கும்பல் தப்பியோடியது. இந்த தாக்குதலால் தலை, முதுகு மற்றும் கைகளில் பலமான காயங்கள் ஏற்பட்டு மாணவர் உயிருக்கு போராடினார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் பத்மபநாபபிள்ளை உள்ளிட்ட போலீசார் வெட்டுக்காயங்களுடன் கிடந்த மாணவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மாணவர் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரின் இடது கையில் உள்ள அனைத்து விரல்களும் துண்டான நிலையில், 7 துறை சார்ந்த 20 மேற்பட்ட மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். காலை 10 மணி முதல் மேற்கொண்ட சிகிச்சை சுமார் 8 மணி நீடித்தது. மாணவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஸ்ரீவைகுண்டம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கபடி போட்டி விளையாடுவதில் ஏற்பட்ட மோதலால் இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேகிக்கப்படும் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து விசாரிக்க துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 5 தனிப்படைககள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தலித் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை!
அதில், “நாங்குனேரி மாணவன் சின்னதுரை வழக்கு இப்போது தான் விசாரணைக்கு போய்க்கொண்டு இருக்கிறது. அதற்கிடையே இன்னொரு மாணவன் வெட்டப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
படிக்கிற தலித் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத அபாயகரமான சூழலும் உருவாகியுள்ளது. சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும். நெல்லை,தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சாதிய மனோபாவத்துடனே செயல்பட்டுவருவதை நீண்ட காலமாகவே அக்கறையுடன் சுட்டிக்காட்டி வருகிறோம்.
ஆனால், காவல்துறையின் அலட்சியப்போக்கால் சாதி வெறியர்கள் தென் மாவட்டங்களில் அரிவாள் கையுமாக திரிந்து காவல்துறைக்கே சவால்விட்டு வருவது பெரும் அவலமாகும். இவ்வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த தமிழக காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இல்லயேல், காவல்துறை மீதான நம்பிக்கை போய்விடும்” எனத் தெரிவித்துள்ளார்.