கத்தரிக்காய் பிடிக்காதவர்கள்கூட விரும்பிச் சாப்பிடும் வகையில், நெருப்பில் சுட்டு செய்யப்படும் கத்தரிக்காய் பச்சடி தனி சுவை கொண்டது. கத்தரிக்காயை நேரடியாக அடுப்பில் சுடுவதால் கிடைக்கும் புகை மணம், தயிரின் லேசான புளிப்புடன் சேர்ந்து இந்தப் பச்சடிக்கு கூடுதல் சுவையைத் தருகிறது. பிரியாணி, புலாவ் மட்டுமின்றி சாதம், சப்பாத்திக்கும் இதைத் தொட்டுக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
ஒரு பெரிய கத்தரிக்காய், ஒரு கப் கெட்டித் தயிர், ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், உப்பு, சிறிதளவு கொத்தமல்லி ஆகியவை போதும். தாளிக்க கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தேவைப்படும். கத்தரிக்காய் சுடுவதற்கு ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் பயன்படுத்தலாம்.
கத்தரிக்காயை சுடும் முறை
கத்தரிக்காயை கழுவித் துடைத்து, அதன் மேல் நல்லெண்ணெயை லேசாகத் தடவ வேண்டும். பின்னர் கத்தியால் ஆங்காங்கே சிறிய துளைகள் போட்டு, நேரடியாக அடுப்பு நெருப்பில் வைத்து எல்லாப் பக்கமும் தோல் கருகும் வரை சுட வேண்டும். இந்தத் துளைகள் போடுவது கத்தரிக்காய் வெடிப்பதைத் தடுப்பதுடன், உள்ளே நன்றாக வேகவும் உதவும்.
தயிர் சேர்த்து பச்சடி ரெடி!
கத்தரிக்காய் நன்றாக வெந்து மென்மையானதும் ஆறவைத்து, கருகிய தோலை உரித்து உள்ளே இருக்கும் சதைப்பகுதியை மட்டும் எடுத்து மசிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் கெட்டித் தயிரைச் சேர்த்து நன்றாகக் கலந்து, கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிப்பை ஊற்றவும். கடைசியாக கொத்தமல்லி தூவினால் மணமணக்கும் கத்தரிக்காய் பச்சடி தயார்.
