தொப்பையை மட்டும் குறைக்க வேண்டும் என்பதற்காக தினமும் crunches, sit-ups செய்வது பலரது வழக்கம். ஆனால், ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சியைச் செய்வதால் அந்தப் பகுதியில் இருக்கும் கொழுப்பு மட்டும் குறையாது.
வயிற்றைச் சுற்றி அதிக கொழுப்பு இருப்பது இதய நோய் மற்றும் டைப்-2 நீரிழிவு அபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
வயிற்றுப் பயிற்சி மட்டும் போதாது
Sit-ups, crunches போன்ற பயிற்சிகள் வயிற்றுத் தசைகளை வலுப்படுத்தும். ஆனால் அவற்றின் மேல் படிந்திருக்கும் கொழுப்பை மட்டும் குறைக்க முடியாது. உடற்பயிற்சியின் மூலம் உடலில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் கொழுப்பைக் குறைப்பது சாத்தியமில்லை.
ஏரோபிக் பயிற்சிக்கு முக்கிய இடம்
உடல் கொழுப்பைக் குறைக்க ஏரோபிக் உடற்பயிற்சிகள் பயனுள்ளதாக இருக்கும். வேகமாக நடப்பது, ஓடுவது, நீச்சல், நடனம் போன்ற செயல்பாடுகள் இதயத் துடிப்பை அதிகரித்து கலோரிகளை செலவிட உதவும்.
வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான தீவிரம் கொண்ட ஏரோபிக் பயிற்சி அல்லது 75 நிமிடங்கள் அதிக தீவிரம் கொண்ட பயிற்சி செய்வதை வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன.
நடைப்பயிற்சியும் நல்ல தேர்வு
உடற்பயிற்சி பழக்கம் இல்லாதவர்கள் முதலில் மெதுவாகத் தொடங்கலாம். வேகமாக நடப்பது மட்டுமல்லாமல், வீட்டு வேலை, தோட்டப் பணிகள், குழந்தைகளுடன் விளையாடுவது போன்ற அன்றாட செயல்பாடுகளும் உடல் இயக்கத்தை அதிகரிக்க உதவும்.
தசைப் பயிற்சியையும் சேர்க்கலாம்
Strength training உடலில் தசை அளவை அதிகரிக்க உதவும். அதிக தசை இருப்பதால் ஓய்வில் இருக்கும் நேரத்திலும் உடல் அதிக கலோரிகளைச் செலவிடும். யோகா, தைச்சி போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகளும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவலாம்.
தொப்பை கொழுப்பைக் குறைக்க ‘மேஜிக்’ பயிற்சி எதுவும் கிடையாது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதுடன், உணவில் எடுத்துக்கொள்ளும் கலோரிகளையும் கவனிப்பதே நீண்ட காலத்தில் பலன் தரும்.
