ஓட்ஸ் பிடிக்காதவர்களும் விரும்பிச் சாப்பிடும் 4 காலை உணவுகள் – கிச்சடி முதல் தோசை வரை அசத்தல் ரெசிபிகள்

Published On:

| By Minnambalam Desk

காலையில் அவசரமாகக் கிளம்பும்போது என்ன சாப்பிடுவது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும்.

உடனே தயாரிக்கக்கூடிய உணவுகளைத் தேடும்போது ஓட்ஸ் நல்ல தேர்வாக அமையும். ஆனால், தினமும் ஓட்ஸ் கஞ்சி குடிப்பது சிலருக்குச் சலிப்பை ஏற்படுத்தலாம்.

ADVERTISEMENT

அப்படிப்பட்டவர்கள் ஓட்ஸைக் கொண்டே கிச்சடி, பொங்கல், இட்லி, தோசை என விதவிதமான உணவுகளைச் செய்து சாப்பிடலாம்.

1. காய்கறிகள் சேர்த்த ஓட்ஸ் கிச்சடி

ADVERTISEMENT

ஓட்ஸ் கிச்சடி காலை உணவுக்கு ஏற்ற எளிய உணவு. இதற்குத் தேவையானவை ஒரு கப் ஓட்ஸ், அரை கப் பச்சைப் பயறு, வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், பட்டாணி, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு ஆகியவை.

முதலில் பச்சைப் பயறை வேகவைக்க வேண்டும். பின்னர் கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். காய்கறிகளைச் சேர்த்து, தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இறுதியாக வேகவைத்த பயறு, ஓட்ஸ் சேர்த்துக் கிளறி வேகவைத்தால் சுவையான கிச்சடி தயார்.

ADVERTISEMENT

2. மணக்கும் ஓட்ஸ் பொங்கல்

அரை கப் ஓட்ஸ், கால் கப் பாசிப்பருப்பு, முந்திரி, சீரகம், மிளகு, நெய், உப்பு ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பொங்கலைச் செய்யலாம்.

பாசிப்பருப்பை வேகவைத்து, நெய்யில் ஓட்ஸை லேசாக வறுத்து தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். பின்னர் பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறி, நெய்யில் வறுத்த சீரகம், மிளகு, முந்திரியைச் சேர்க்கவும்.

3. காலை உணவுக்கு ஓட்ஸ் இட்லி

ஒரு கப் ஓட்ஸ், ஒரு கப் உளுத்தம்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவை இதற்குத் தேவை.

உளுத்தம்பருப்பை ஊறவைத்து அரைக்கவும். ஓட்ஸையும் ஊறவைத்து, இரண்டையும் உப்பு சேர்த்துக் கலந்து 5 முதல் 6 மணி நேரம் புளிக்கவிடவும். பின்னர் இட்லித் தட்டில் ஊற்றி வேகவைக்கலாம்.

4. மொறுமொறு ஓட்ஸ் தோசை

மூன்று கப் ஓட்ஸ், தயிர், சீரகம், பச்சை மிளகாய், அரிசி மாவு, சோள மாவு, வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றைக் கொண்டு தோசை தயாரிக்கலாம்.

ஓட்ஸை வெந்நீர், தயிர், உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். அரைத்த பச்சை மிளகாய், சீரகம், மாவுகள், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லில் மெல்லியதாக ஊற்றி வேகவைத்தால் சுவையான ஓட்ஸ் தோசை தயார். இதற்குச் சின்ன வெங்காயச் சட்னி நல்ல பொருத்தமாக இருக்கும்.

ஒரே மாதிரியான காலை உணவைத் தவிர்க்க நினைப்பவர்கள், இந்த நான்கு வகைகளையும் மாற்றி மாற்றிச் செய்து சாப்பிடலாம். காய்கறிகள், பருப்பு வகைகள் போன்றவற்றைச் சேர்ப்பதன் மூலம் உணவின் ஊட்டச்சத்து மதிப்பையும் அதிகரிக்கலாம்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share