பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பாக அமைக்க மத்திய அரசின் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் ஒரு சிறந்த வழியாகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட காலத்திற்கு ஆபத்து இல்லாமல் பெரிய தொகையை சேர்க்கலாம். இது உத்தரவாதமான வருமானத்தையும், வரிச் சலுகைகளையும், அதிக வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
இந்த சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ், பெற்றோர்கள் தங்கள் மகளின் பெயரில் ஒரு கணக்கைத் தொடங்கலாம். பெண் குழந்தை பிறந்த உடனேயே இந்த திட்டத்தில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். அதிகபட்சமாக 15 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தில் பணம் செலுத்தலாம்.
ஆனால், கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த திட்டம் முதிர்ச்சி அடையும். அப்போது, கணக்கில் உள்ள முழு தொகையையும் எடுத்துக்கொள்ளலாம். முக்கியமாக, 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்திய பிறகும், அடுத்த 6 ஆண்டுகளுக்கு முதலீடு செய்த தொகைக்கு வட்டி தொடர்ந்து கிடைக்கும்.
பெண் குழந்தை பிறந்தவுடன் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறிய தொகையை செலுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் ஒரு பெரிய தொகையை உருவாக்க முடியும். 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்த பிறகு பணம் செலுத்துவதை நிறுத்தலாம். ஆனால், 21 ஆண்டுகள் முடியும் வரை வட்டி தொடர்ந்து சேர்ந்துகொண்டே இருக்கும். இதனால்தான் இந்த திட்டம் நீண்ட காலத்திற்கு நல்ல வருமானத்தை தருகிறது.
தற்போது, சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இது அஞ்சலகத்தின் சிறு சேமிப்பு திட்டங்களில் மிக அதிக வட்டி விகிதமாகும். இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிற்கும் நிர்ணயிக்கப்படுகிறது. ஜனவரி முதல் மார்ச் 2026 வரையிலான காலாண்டிற்கும் இந்த வட்டி விகிதம் 8.2 சதவீதமாகவே இருக்கும் என்று அரசு மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான விதிமுறைகளும் மிகவும் எளிமையானவை. ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.250 முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதலீட்டாளர்கள் முழு தொகையையும் ஒரே நேரத்தில் செலுத்தலாம் அல்லது மாத தவணைகளாகவும் முதலீடு செய்யலாம்.
மத்திய அரசின் சிறு சேமிப்பு திட்டங்கள் நீண்ட காலத்திற்கு பெரிய தொகையை ஆபத்து இல்லாமல் சேர்க்க விரும்புவோருக்கு நம்பகமான தேர்வாக கருதப்படுகின்றன. அதில் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம், குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காகவே தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். இந்த திட்டம் உத்தரவாதமான வருமானத்தை அளிப்பதுடன், வரிச் சலுகைகளையும், அதிக வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
