உணவு விநியோகத் தளமான ஜொமேட்டோ (Zomato) மற்றும் விரைவு வர்த்தக நிறுவனமான பிளிங்கிட் (Blinkit) ஆகியவற்றை இயக்கும் எடர்னல் லிமிடெட் நிறுவனம் 2025-26 நிதியாண்டின் (FY26) நான்காவது காலாண்டு (Q4) முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தனது வரிக்குப் பிந்தைய காலாண்டு லாபம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் (YoY) 71 சதவீதம் அதிகரித்து ரூ. 174 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவித்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.39 கோடியாக இருந்தது.
FY26 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்நிறுவனம் ரூ.102 கோடி வரிக்குப் பிந்தைய லாபத்தைப் பதிவு செய்திருந்தது. ராய்ட்டர்ஸ்-எல்எஸ்இஜி ஆய்வாளர்களின் கருத்துக் கணிப்பு, நான்காவது காலாண்டில் நிகர லாபம் ரூ.121 கோடியாக இருக்கும் என்று கணித்திருந்தது. நிறுவனத்தின் விரைவு வர்த்தகப் பிரிவான பிளிங்கிட்டின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் அதன் முக்கிய உணவு விநியோக வணிகத்தில் (ஜொமேட்டோ) ஏற்பட்ட சீரான விரிவாக்கம் ஆகியவற்றால் இந்த எதிர்பார்ப்பை விட சிறந்த செயல்பாடு சாத்தியமாகியுள்ளது.
முழு நிதியாண்டிற்கான நிறுவனத்தின் லாபம் ரூ.366 கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டில் ரூ.527 கோடியாக இருந்ததை விட 31% குறைவு. 2024 நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.351 கோடியாக இருந்தது. எடர்னலின் செயல்பாட்டு வருவாய், ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.5,833 கோடியாக இருந்த நிலையில், நான்காம் காலாண்டில் 196% அதிகரித்து ரூ.17,292 கோடியாக உயர்ந்தது. முந்தைய காலாண்டில், நிறுவனம் ரூ.16,315 கோடி வருவாயைப் பதிவு செய்திருந்தது. முழு நிதியாண்டிற்கு, நிறுவனம் ரூ.54,364 கோடி ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது 2025 நிதியாண்டில் ரூ.20,243 கோடியாக இருந்ததை விட 169% அதிகம் ஆகும்.
இந்த முடிவுகள் பங்குச் சந்தையில் சாதகமான வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் பங்கு அன்றைய தினம் அதன் அனைத்து இழப்புகளையும் ஈடுசெய்து, சாதனை உச்சத்தை எட்டியது. பங்கு அதன் அன்றைய குறைந்தபட்ச விலையிலிருந்து 5.5 சதவீதம் மீண்டு, பிற்பகல் வர்த்தகத்தில் 1.1 சதவீதம் உயர்ந்து 258.4 ரூபாயில் வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் மொத்த செலவுகள் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 17,406 கோடியாக அதிகரித்துள்ளது. இது, ஓராண்டுக்கு முன்பு ரூ. 6,104 கோடியாகவும், முந்தைய காலாண்டில் ரூ. 16,493 கோடியாகவும் இருந்தது.
முழு ஆண்டுக்கான நிறுவனத்தின் செலவுகள் ரூ. 55,145 கோடியாக இருந்தது. இது ஓராண்டுக்கு முன்பு ரூ. 20,623 கோடியாக இருந்ததை விட 167 சதவீதம் அதிகமாகும்.
