சருமம் இயற்கையாகவே பளபளப்பாக (Glowing Skin) இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் லிஸ்ட்டை பட்டியலிட்டுள்ளோம்.
உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல சரும ஆரோக்கியமும் நாம் சாப்பிடும் உணவோடு நேரடி தொடர்புடையவை. ஆரோக்கியமான உணவுகள் நமது உடல் நலத்தை பேணுவதோடு, சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. ஆனால், தவறான உணவுப் பழக்கம் நமது வளர்சிதை மாற்றத்தைச் சீர்குலைத்து உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. அத்துடன் இதயம் மற்றும் கல்லீரல், போன்ற உறுப்புகளையும் சேதப்படுத்தக்கூடும். நாம் சரும அழகைக் கூட்டுவதற்காக விலை உயர்ந்த அழகு சாதன (Beauty products) பொருட்களை பயன்படுத்துகிறோம். இவை எதுவுமின்றி இயற்கையான பளபளப்பான சருமத்தைப் பெற விரும்பினால் சில சூப்பர் உணவுகள் உங்களுக்கு கைகொடுக்கும்.
கொழுப்பு நிறைந்த மீன்கள்
சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும், ஈரப்பதமாகவும் (Fatty fish) வைத்திருக்க உதவுகிறது. ஒமேகா-3 குறைபாடு சரும வறட்சிக்கு வழிவகுக்கும். ஒமேகா – 3 வீக்கம், சிவத்தல் மற்றும் முகப்பரு ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது. மேலும் சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. வைட்டமின் ஈ, ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
அவகேடா
அவகேடாவில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. தினமும் ஒரு அவகேடா பழத்தைச் சாப்பிடுவது முக சருமத்தின் அழகையும் உறுதியையும் மேம்படுத்துகிறது. மேலும், அவகேடாவில் (Avocado Benefits) உள்ள வைட்டமின் சி மற்றும் ஈ, கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும், சூரியனால் ஏற்படும் பாதிப்பிலிருந்து சருமத்தைப் பாதுகாத்து, முதுமைத் தோற்றத்தைத் தாமதப்படுத்துகின்றன.
வால்நட்ஸ்
வால்நட்ஸில் நமது உடலால் தானாக உற்பத்தி செய்ய முடியாத அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்புகள் (Omega-3 fats), மெக்னீசியம் மற்றும் அர்ஜினைன் போன்ற ஊட்டச்சத்துக்கள், உடல் மற்றும் சருமத்தில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க மிகவும் உதவுகின்றன.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது நம் உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட், நமது சருமத்தை சூரியக் கதிர்களில் இருந்து (Natural sunscreen) பாதுகாக்கிறது. சரும செல்களை சூரியனிடமிருந்து பாதுகாப்பதுடன், வெயிலால் ஏற்படும் சரும எரிச்சல், சுருக்கங்கள் மற்றும் வறண்ட சருமம் ஆகியவற்றையும் தடுக்கிறது.
பிராக்கோலி
பிராக்கோலியில் துத்தநாகம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்ற பல அத்தியாவசிய தாதுக்கள் (Essential minerals) உள்ளன. இவை சருமத்தை வறட்சி மற்றும் சுருக்கங்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், பிராக்கோலியில் சல்ஃபோராபேன் எனப்படும் ஒரு தனித்துவமான சேர்மம் உள்ளது, இது சூரியனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.
டார்க் சாக்லேட்
உங்களுக்கு டார்க் சாக்லேட் மிகவும் பிடிக்கும் என்றால், அது உங்கள் சருமத்திற்கும் மிகவும் நல்லது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த டார்க் சாக்லேட்டைச் (Dark Chocolate Benefits) சாப்பிடுவது, சருமத்தைப் பொலிவாகவும், ஈரப்பதமாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும். இது வெயிலினால் ஏற்படும் சரும எரிச்சலையும் தடுக்கிறது. அந்த சாக்லேட்டில் குறைந்தபட்சம் 70 சதவீதம் கோகோ இருப்பதையும், சர்க்கரை குறைவாக இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
