உலகம் முழுவதும் யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நாளை (ஜூன் 21) சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு கடலூர் மாவட்டம் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் சார்பில் நாளை பெரிய அளவில் யோகா நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டது. Students escaped from death due to NLC negligence
அதன்படி நெய்வேலி என்.எல்.சி டவுண்சிப்புக்குள் உள்ள 10 பள்ளியில் இருந்து 5,800 மாணவ மாணவிகளை இன்று காலையிலேயே வரவழைத்து 6 முதல் 7 மணி வரை என்.எல்.சி நிர்வாகத்தினர் யோகா பயிற்சி கொடுத்தனர்.
தொடர்ந்து அத்தனை மாணவர்களுக்கும் காலை உணவாக பொங்கல், கிச்சடி, இட்லி, வடை சட்னி சாம்பாருடன் வழங்கப்பட்டது. அதன்பின்னர் அங்கிருந்து 9 மணியளவில் தங்களது பள்ளிக்கு மாணவர்கள் கிளம்பி சென்றனர்.
சிறிது நேரத்தில் வகுப்பில் பாடம் பயின்று வந்த ஜவஹர் பள்ளி உட்பட சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீரென வயிறுவலி, வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் பதற்றமடைந்த ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களை அருகிலுள்ள என்.எல்.சி மருத்துவனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், மாணவர்கள் உண்ட உணவு புட் பாய்சன் ஆகியிருந்தது தெரியவந்தது.
இதற்கிடையே நெய்வேலியில் இன்று ’மக்களுடன் முதல்வர்’ நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், எம்.பி. விஷ்ணு பிரசாத், எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
அவர்களிடம் மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சர், அதிகாரிகள் அனைவரும் உடனடியாக மருத்துவமனை விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்தனர். மேலும் மருத்துவர்களிடமும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து விசாரித்தனர்.

தொடர்ந்து என்.எல்.சி அதிகாரிகளிடம் மேற்கொண்ட விசாரணையில், “6000 பேருக்கு கேண்டினில் சமைக்க முடியாது என்பதால், காலை உணவு கொடுப்பதற்கு ‘கீர்த்தி கிச்சன் கேட்டரிங்கிடம் காண்ட்ராக்ட் கொடுத்திருந்தோம். அவர்கள் செய்ததில் என்ன ஆச்சு என்று எங்களுக்கு தெரியவில்லை” எனத் தெரிவித்தனர்.
இதனையடுத்து கீர்த்தி கிச்சன் கேட்டரிங்கில் போலீஸ் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தான், மாணவர்களுக்கு வழங்கிய சட்னி கெட்டுப்போனது என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக விசாரணையில், காலையில் 6000 பேருக்கு உணவு தேவை என்பதால், முந்தைய இரவே சட்னி சமைத்து வைத்ததும், அதனால் அவை கெட்டுப்போனதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று சென்ற மாணவர்கள் நாளை நடைபெறும் யோகா தின நிகழ்வில் பங்கேற்பார்களா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. மற்றொரு பக்கம், அனைவரும் கட்டாயம் யோகா தின நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என மாணவர்களை நிர்பந்திப்பதாகவும் கூறப்படுகிறது.