ஐபிஎல் சீசன் வரலாற்றில் இதுவரை காணாத அளவுக்கு மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளது ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. still dhoni is dangerous in ipl 2025 : ricky ponting
நடப்பு ஐபிஎல் தொடரை பரம வைரியான மும்பை இந்தியன்ஸ் அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாசிட்டிவாக தொடங்கியது சிஎஸ்கே.
ஆனால் பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி ஆகிய அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தொடக்க வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம், மிடில் ஓவர்களில் அதிரடி பேட்ஸ்மேன்கள் இல்லாதது, சரியான பவுலிங் கூட்டணி இல்லாதது போன்றவை சிஎஸ்கேவின் மோசமான பார்முக்கு காரணமாக கருதப்படுகிறது.

எனினும் அதையெல்லாம் விட சிஎஸ்கே அணியின் மூத்த வீரரும், முன்னாள் கேப்டனுமான 43 வயதான எம்.எஸ்.தோனி தனது மோசமான பேட்டிங் காரணமாக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
டெல்லி அணியுடனான தோல்வியை அடுத்து, தோனி ஓய்வு பெற வேண்டும் என குரல்கள் வலுத்து வருகின்றன.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங்கிடம் தோனி ஓய்வு குறித்து செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

தோனி இன்னும் ஆபத்தானவர் தான்!
அதற்கு அவர், “தோனியின் கீப்பிங் இன்னும் மோசமாகவில்லை, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எப்போதும் போல இப்போதும் நன்றாகவே ஆடுகிறார்.
தோனி கடந்த இரண்டு வருடங்களாக சற்று குறைவான பங்களிப்பையே ஆற்றியுள்ளார் என்று நினைக்கிறேன். எனினும் 10–12 பந்துகளை மட்டுமே ஆடினாலும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஐபிஎல்லில் தோனி இன்னும் ஆபத்தானவராக தான் உள்ளார்.
அவர் பேட்டிங்கில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தால், அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று நினைக்கிறேன். அவரது பேட்டிங் செயல்திறன் குறைந்தால், அவர் ஓய்வைப் பற்றி சிந்திக்கத் தொடங்கலாம். அவர் நீண்ட காலமாக ஒரு சிறந்த வீரராக இருந்து வருகிறார்” என்று அவர் கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை நாளை இரவு முல்லன்பூரில் எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.