கொடைக்கானலில் ஓய்வெடுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 28) காலை ஏரி சாலையில் சைக்கிள் சவாரி செய்தார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின், வாக்குப்பதிவுக்குப் பிறகு குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார். அங்கு 3 நாட்களாக தங்கியுள்ள அவர், இன்று காலை கொடைக்கானல் ஏரி சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டார். பின்னர் திடீரென சைக்கிளில் ஏறி ஏரி சாலை முழுவதும் சுற்றி வந்தார்.
திடீரென்று சைக்கிள் பயணம் செய்த முதல்வரை பொதுமக்கள் ஆரவாரத்துடன் உற்சாகமாக வரவேற்றனர். ஏரி சாலையைச் சுற்றி நடைப்பயிற்சி சென்ற சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் முதல்வருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். பலர் முதல்வரைப் பின்தொடர்ந்து நடைப்பயிற்சியும் மேற்கொண்டனர்.
