HaryanaFiles திகில்: மக்களின் தீர்ப்பை திருடும் பாஜக.. வாய் திறக்காத தேர்தல் ஆணையம்! – முதல்வர் காட்டம்

By Pandeeswari Gurusamy

|

Published on 5 Nov 2025, 6:11 PM

mkstalin

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக “வாக்கு திருட்டு” மற்றும் “ஆட்சி திருட்டு” செய்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும் ‘H Files’ என்ற பெயரில் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பாஜக வாக்காளர் பட்டியலிலேயே அப்பட்டமான அட்டூழியத்தை அரங்கேற்றி, மக்களின் ஜனநாயகத் தீர்ப்பைக் களவாண்டு, இன்று அம்பலப்பட்டு நிற்கிறது என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அண்மைக்காலமாக பா.ஜ.க. பெற்று வரும் தேர்தல் வெற்றிகளின் உண்மைத்தன்மை குறித்து மீண்டுமொரு முறை பெரும் ஐயம் எழுகிறது. ஹரியானாவில் நடைபெற்றுள்ள வாக்குத் திருட்டு குறித்து எனது சகோதரரும், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அவர்கள் வெளியிட்டுள்ள ‘பச்சையான ஆதாரங்கள்’ அதிர்ச்சியூட்டுகின்றன.

ADVERTISEMENT

வெறுப்பினை மூட்டி, பொய் வாக்குறுதிகளைக் கூறி 2014-இல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வின் பிளவுவாத அரசியலை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என்ற நிலை எப்போதோ ஏற்பட்டுவிட்டது. ஆகையால் தேர்தலில் முறைகேடுகள் என்பதையெல்லாம் தாண்டி, வாக்காளர் பட்டியலிலேயே அப்பட்டமான அட்டூழியத்தை அரங்கேற்றி, மக்களின் ஜனநாயகத் தீர்ப்பைக் களவாண்டு, இன்று அம்பலப்பட்டு நிற்கிறது.

இதன் அடுத்தகட்டம்தான் SIR என்ற பெயரில் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதி என்பதற்கு பீகாரும், இன்று வெளியாகியுள்ள HaryanaFiles-உமே சான்று!

ADVERTISEMENT

இவை அனைத்துக்கும் பொறுப்பான தேர்தல் ஆணையம் இத்தனை குற்றச்சாட்டுகள், அடுக்கடுக்கான ஆதாரங்களோடு முன்வைக்கப்பட்டும் எந்த ஒரு முறையான விளக்கமும் அளிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தேர்தல் ஆணையம் மக்கள் மன்றத்தில் உரிய பதில் சொல்லி, இந்தியாவில் மக்களாட்சி முழுவதும் குழிதோண்டிப் புதைக்கப்படவில்லை என நம்பிக்கையைத் துளிர்க்க வைக்குமா? ” என கேள்வி எழுப்பி உள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel