திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி கோவிலில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்த போது, அவர் ஷூ அணிந்தபடி கோவில் வளாகத்திற்குள் சென்றதாக வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதற்கு பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், “ஸ்ரீரங்கத்தில் கோபுரப் பணிகள் நீண்ட நாட்களாக முடிவடையாமல் உள்ளன. அதனால் சாலை மறிக்கப்பட்டு மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். எனவே, அதை நேரில் சென்று ஆய்வு செய்தோம். அங்கு முழுமையாகக் கற்கள், கூர்மையான ஆணிகள் மற்றும் இரும்புகள் சிதறிக் கிடந்தன.
அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களே தங்களின் பாதுகாப்பிற்காகத்தான் காலணிகளை அணிந்து வேலை செய்து வருகின்றனர். அந்தப் பணியைச் சொந்தச் செலவில் செய்து வரும் கொடையாளரும் ‘பாதுகாப்பு முக்கியம், நீங்கள் ஷூவைக் கழற்ற வேண்டாம்’ எனக் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே நாங்களும் காலணி அணிந்து சென்றோம்.
பகுத்தறிவு என்று ஒன்று இருக்க வேண்டும். இதுபோன்ற கேள்விகளைக் கேட்பவர்களுக்குப் பகுத்தறிவு இருந்தால் இதைக் கேட்க மாட்டார்கள். அங்கு வேலை செய்பவர்களின் உடல்நலனுக்கும் பாதுகாப்புக்கும் அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு? இது முழுக்க முழுக்க ‘பாதுகாப்பு நடவடிக்கை’ மட்டுமே. பகுத்தறிவு உள்ளவர்கள் யாரும் இதைக் கேள்வியாகக் கேட்க மாட்டார்கள். எப்போதும் இதையே வைத்து அரசியல் செய்து பழக்கப்பட்டவர்கள் தான் இந்த சர்ச்சையைக் கிளப்புகிறார்கள்” என்று தெரிவித்தார்.
பழனி நில விவகாரம் குறித்துப் பேசிய அவர், “இந்த வழக்கை நேர்மையான முறையில் விசாரித்து உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என்பதற்காகவே, வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். முதலமைச்சரும் சிபிசிஐடி விசாரணைக்கு உடனடியாக மாற்றினார். முதற்கட்டமாக நிலத்தை விற்றவர்கள், வாங்கியவர்கள் என 4 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் தொடர்புடைய பதிவுத்துறை அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் பாரபட்சமின்றி அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.” என்றார்.
மேலும் பழனி நில மோசடி விவகாரத்தில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பற்றிக் குறிப்பிட்ட அமைச்சர் ரமேஷ், “அதிமுகவின் ஐடி விங் மற்றும் சில தரப்பினர், என் உறவினர்தான் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகக் கூறினார்கள். என் குடும்பத்தில் இருக்கும் யாரிடமும் 2 கோடி ரூபாய்ப் பணமே இல்லை. அப்படியே 2 கோடி ரூபாய் இருந்தாலும் நாங்கள் சென்னையில் வாங்காமல் ஏன் பழனியில் வாங்கப் போகிறோம்? எங்கள் குடும்பமே வாடகை வீட்டில்தான் உள்ளது.
என் பெயரையும் புகழையும் கெடுக்க வேண்டும் என்ற நோக்கில், திரைப்பட நகைச்சுவைக் காட்சியைப் போல ‘சீப்பு திருடினால் கல்யாணம் நின்றுவிடும்’ என்ற கதையாகச் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான வேலைகளை விட்டுவிட்டு, மக்களுக்கு நன்மை தரும் விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
