விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் விவசாய மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தால் எதிர்காலத்தில் மின் கட்டணம் கட்டும் சூழல் உருவாகுமோ என விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். Smart meter for free electricity
தமிழகத்தில் விவசாயத்துக்கு மின்வாரியம் இலவசமாக மின் விநியோகம் செய்து வருகிறது. தற்போது 23.55 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. கிராமப் பகுதிகளில் வீடுகள், கடை, விவசாயம் உட்பட அனைத்துப் பிரிவுகளுக்கும் ஒரே வழித் தடத்தில் மின் விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் விவசாயத்துக்கு 18 மணி நேரமும், மற்ற இணைப்புகளுக்கு 24 மணி நேரமும் மின் விநியோகம் செய்யப்படுகிறது.பல கிராமங்களில் விவசாயத்துக்கு மின்விநியோகம் செய்யாத நேரத்திலும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.
இதனால், அந்த வழித்தடங்களில் உள்ள வீடுகளில் குறைந்த மின்னழுத்த பிரச்சினைகள் ஏற்பட்டு மின்சாதனங்கள் பழுதடைகின்றன.
எனவே, விவசாயத்துக்கு எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிய, மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளது. மத்திய அரசு மின் பயன்பாட்டு விவரத்தை அறிய மீட்டர் பொருத்தாமல் எந்த ஒரு மின் இணைப்பும் வழங்கக் கூடாது என மாநில மின்வாரியங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில்தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில், ‘‘தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், விவசாய மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திட்டம் விவசாயிகளுக்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த திட்டத்தை கைவிட வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை இதனால் எதிர்காலத்தில் மின் கட்டணம் கட்டும் சூழல் உருவாகுமோ என விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.இந்த நிலையில், இந்தச் செயல், திமுக விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான முக நூல் பதிவில், “தற்போது தமிழ்நாடு அரசு பொருத்த திட்டமிட்டுள்ள ஸ்மார்ட் மீட்டர்கள் சிம் கார்டோடு இணைந்து வருபவை, இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் எதிர்காலத்தில் விவசாயிகளைக் கட்டணம் செலுத்துவதற்காக பொருத்தப்படக் கூடியவை. முதலில் மீட்டர் மாட்டுவார்கள், பின்பு கட்டணம் நிர்ணயிப்பார்கள்.
அன்றைய காலகட்டத்தில் 50 அடி இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 500 முதல் 1000 அடிக்கு மேல் சென்று இருப்பதால் கூடுதலாக மின்சார தேவை ஏற்பட்டிருக்கிறது, மின்சார வாரியம் ஸ்மார்ட் மீட்டரை பொருத்தும்போது, அந்த மீட்டர் நாம் எவ்வளவு HP பெற்றிருக்கிறோமோ, அதைவிட அதிகமாக மின்சாரத்தை எடுப்பதற்கு அனுமதிக்காது, அப்படி அனுமதிக்காதபோது
மீட்டர் மாட்டப்பட்டு விட்டால், நாம் யாரும் உரிமை மின்சார இணைப்புகளை பயன்படுத்தவே முடியாது.மத்திய அரசின் உத்தரவின் பெயரில் இந்த நடவடிக்கை எடுப்பதாக மாநில அரசு தெரிவித்துவிட்டு ஒதுங்கிக் கொள்ள முடியாது, மத்திய அரசிடம் உரிய வகையில் தெரிவித்து தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் பொறுப்பு என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.
எனவே தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மின்சார வாரியமும் தமிழ்நாட்டில் உள்ள வேளாண் உரிமை மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்து, அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளனர். Smart meter for free electricity