அரசு வேலை, சம்பளம், விடுமுறை எல்லாம் சரி… வாழ்க்கை துணையை கண்டுபிடிக்கவும் அரசே உதவி செய்தால் எப்படி இருக்கும்?
சிங்கப்பூரில் அரசு ஊழியர்கள் தங்களுக்கான துணையை கண்டுபிடிக்க உதவும் வகையில் ‘FirstDate’ என்ற புதிய டேட்டிங் சேவை சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் அரசின் தொழில்நுட்ப அமைப்பான GovTech ஊழியர்கள் உருவாக்கிய இந்த திட்டம் தற்போது 21 முதல் 35 வயது வரையிலான திருமணமாகாத அரசு ஊழியர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எப்படி செயல்படும்?
FirstDate வழக்கமான டேட்டிங் செயலிகளை போல செயல்படாது. இதில் சேர விரும்பும் அரசு ஊழியர்கள் Singpass மூலம் தங்களது அடையாளத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் வயது, திருமண நிலை, அரசு ஊழியரா என்பது உள்ளிட்ட தகுதிகள் சரிபார்க்கப்படுகின்றன.
அதன்பிறகு சுமார் 30 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அவர்களின் விருப்பங்கள், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, உணவு, சுற்றுலா, உறவு குறித்த எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவை கேட்கப்படுகின்றன. எத்தனை வயதுடையவருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறீர்கள்? எந்த விஷயங்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது? எதிர்காலத்தில் குழந்தைகள் வேண்டுமா? என்பது போன்ற கேள்விகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
மாதத்துக்கு ஒரே ஒரு ஜோடி
வழக்கமான டேட்டிங் செயலிகளில் நூற்றுக்கணக்கான நபர்களின் புகைப்படங்களை பார்த்து பிடித்தவர்களை தேர்வு செய்யலாம். FirstDate அப்படி இல்லை. ஒரு சுற்றுக்கு ஒரே ஒரு நபரை மட்டுமே பரிந்துரை செய்யும். அந்த நபர் உங்களுடன் எந்த அளவுக்கு பொருந்துகிறார் என்ற விவரமும் காட்டப்படும். இருவரும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள விரும்புகிறார்களா என்பதை முடிவு செய்ய 72 மணி நேரம் அவகாசம் வழங்கப்படும். இருவரும் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே ஒருவரது தொடர்பு விவரம் மற்றவருக்கு வழங்கப்படும்.
டேட்டிங்குக்கும் ஒரு ‘Date Quest’
இருவரும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள சம்மதித்து நேரில் சந்திக்க முடிவு செய்தால், அவர்களுக்காக ‘Date Quest’ என்ற செயல்பாட்டையும் FirstDate பரிந்துரைக்கிறது. இதன் மூலம் இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ள உதவும் வகையிலான செயல்பாடுகள் பரிந்துரைக்கப்படும். அதோடு ஒவ்வொரு match முடிந்த பிறகும் FirstDate தரப்பில் SMS மூலம் சிறிய கருத்துக்கணிப்பு அனுப்பப்படும். இருவரும் தொடர்பு விவரங்களை பரிமாறிக் கொண்டார்களா, நேரில் சந்தித்தார்களா என்பது உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்படும். இந்த கருத்துகளின் அடிப்படையில் FirstDate சேவையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஜோடியை தேர்வு செய்ய கணித பார்முலா
யாருக்கு யார் பொருத்தமானவர் என்பதை முடிவு செய்ய FirstDate பயன்படுத்தும் முறையும் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘Gale-Shapley Stable Marriage Algorithm’ என்ற கணித முறையின் அடிப்படையில் ஜோடிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அமெரிக்க கணிதவியலாளர்களான டேவிட் கேல் மற்றும் லாயிட் ஷாப்லி 1962-ம் ஆண்டு இந்த முறையை அறிமுகப்படுத்தினர்.
இரு தரப்பினரின் விருப்பங்களையும் கணக்கில் எடுத்து பொருத்தமான இணையை உருவாக்குவதே இதன் அடிப்படை. இந்த துறையில் மேற்கொண்ட ஆய்வுகளுடன் தொடர்புடைய பணிகளுக்காக லாயிட் ஷாப்லிக்கு 2012-ம் ஆண்டு ஆல்வின் ரோத்துடன் இணைந்து பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஆனால் கணிதப்படி இருவர் பொருத்தமானவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் காதல் வந்துவிடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பதையும் FirstDate வெளிப்படையாக தெரிவித்துள்ளது.
போட்டோ கூட கேட்கவில்லை
இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் இருக்கிறது. FirstDate சோதனை திட்டத்தில் சேர்ந்த 31 வயது அரசு ஊழியர் ஒருவர், தன்னிடம் போட்டோவை பதிவேற்றும்படி கேட்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். அதாவது முகத்தை பார்த்து முதலில் பிடித்திருக்கிறதா என்பதை முடிவு செய்வதற்கு பதிலாக, இருவரின் விருப்பங்கள் மற்றும் வாழ்க்கை குறித்த பார்வைகளுக்கு FirstDate அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
தனிப்பட்ட தகவல்கள் என்ன ஆகும்?
ஆனால் தனக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை துணை வேண்டும், குழந்தை வேண்டுமா, எந்த விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது போன்ற தனிப்பட்ட தகவல்களை அரசு நடத்தும் தளத்தில் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் இந்த தகவல்களின் பாதுகாப்பு என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கு FirstDate விளக்கம் அளித்துள்ளது. அதாவது ஒருவரின் சுயவிவரத்தை அனைவராலும் பார்க்க முடியாது. அவருடன் ஜோடியாக பரிந்துரைக்கப்படும் நபர் மட்டுமே பார்க்க முடியும். இருவரும் சம்மதித்தால் மட்டுமே தொடர்பு விவரங்கள் பகிரப்படும். பயனர்களின் தகவல்கள் பணமாக்கப்படாது என்றும், அவை அரசின் தரவு பாதுகாப்பு விதிகளின்படி கையாளப்படும் என்றும் FirstDate தெரிவித்துள்ளது.

திருமணமானவர்கள் உள்ளே வர முடியாது
FirstDate-ல் சேருபவர்களின் தகுதி Singpass மூலம் சரிபார்க்கப்படுகிறது. இதன் மூலம் வயது, அரசு ஊழியரா, திருமணமாகாதவரா என்பது உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்படுகின்றன. அரசு பதிவுகள் மூலம் ஒருவர் திருமணமாகாதவர் என்பதை உறுதி செய்ய முடியாவிட்டால் தற்போது இந்த திட்டத்தில் சேர முடியாது.
ஒரே ஆபீஸ் என்றால் ஜோடி கிடையாது
FirstDate தொடர்பாக மேலும் ஒரு புதிய தகவலையும் GovTech வெளியிட்டுள்ளது. ஒரே அரசு துறை அல்லது அமைப்பில் பணிபுரியும் இருவரை FirstDate ஜோடியாக பரிந்துரை செய்யாது. தங்களுடன் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவருடன் ஜோடி சேர்க்கப்படுவதால் ஏற்படக்கூடிய சங்கடத்தை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்கு ஏன் இந்த டேட்டிங் சேவை?
சிங்கப்பூரில் திருமணம் மற்றும் குழந்தை பிறப்பு தொடர்பான புள்ளிவிவரங்கள் தொடர்ந்து கவலையை ஏற்படுத்தி வருகின்றன. இந்த பின்னணியில் திருமணமாகாத இளைஞர்கள் துணையை கண்டுபிடிப்பதில் சந்திக்கும் சிக்கல்கள் குறித்த விவாதமும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில்தான் FirstDate சோதனை திட்டமும் அறிமுகமாகியுள்ளது.
எனினும், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காகவே FirstDate தொடங்கப்பட்டதாக GovTech அறிவிக்கவில்லை. அதிக எண்ணிக்கையிலான நபர்களின் சுயவிவரங்களை தொடர்ந்து காட்டும் வழக்கமான டேட்டிங் செயலிகளுக்கு மாற்றாக, ஒருவரது விருப்பங்கள் மற்றும் வாழ்க்கை குறித்த பார்வைகளின் அடிப்படையில் குறைவான, பொருத்தமான நபர்களை அறிமுகப்படுத்தினால் டேட்டிங் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை சோதிப்பதே இதன் நோக்கமாக கூறப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய முயற்சி
மக்கள் திருமணம் செய்து கொள்ள உதவும் முயற்சிகளில் சிங்கப்பூர் அரசு ஈடுபடுவது இது முதல்முறையும் அல்ல. 1980-களிலேயே படித்த இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அரசு சார்ந்த துணை தேடும் முயற்சிகள் சிங்கப்பூரில் தொடங்கப்பட்டன. அப்போது நேரடி சந்திப்புகள், சமூக நிகழ்ச்சிகள் மூலம் துணையை கண்டுபிடிக்க முயற்சி செய்யப்பட்டது. சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு Singpass, 30 கேள்விகள், கணித முறை என அதே முயற்சி தற்போது டிஜிட்டல் வடிவத்துக்கு வந்துள்ளது.
பொதுமக்களுக்கும் வருமா?
FirstDate கடந்த செப்டம்பர் 29-ந் தேதி சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. விண்ணப்பிக்க அக்டோபர் 5-ந் தேதி இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களிடம் நடத்தப்படும் இந்த சோதனைக்கு பிறகு சிங்கப்பூர் மக்கள் அனைவருக்கும் FirstDate கொண்டுவரப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள GovTech, “சோதனை திட்டத்தை தாண்டி FirstDate சேவையை தொடங்குவது அல்லது விரிவுபடுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இதில் பங்கேற்கும் அரசு ஊழியர்களின் அனுபவம் மற்றும் கருத்துகள் ஆய்வு செய்யப்பட உள்ளன. அதன் பிறகே இந்த திட்டத்தின் அடுத்தகட்டம் குறித்து முடிவு செய்யப்படும். வாழ்க்கை துணையை தேர்வு செய்வது முழுக்க தனிப்பட்ட விஷயம் என்ற நிலையில், அதற்கு அரசின் தொழில்நுட்ப தளமே உதவ முன்வந்திருப்பதுதான் FirstDate திட்டத்தை கவனிக்க வைத்திருக்கிறது. கணிதத்தின் மூலம் பொருத்தமான ஜோடியை கண்டுபிடிக்க முடியும். ஆனால் அந்த பொருத்தம் காதலாக மாறுமா என்பதற்கான பதிலை FirstDate சோதனைதான் சொல்ல வேண்டும்.
